என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே நேற்று இரவு குடிபோதையில் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு பன்னீர் செல்வம் ஆகியோர் ரோந்து வந்தனர்.
அவர்கள் குடி போதையில் ரகளை செய்த மணிவண்ணன் (30), விநாயக மூர்த்தி (23)இ பார்த்தீபன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, கெங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் அருண்குமார்(26). இவர் மருதூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி மணல் அள்ளி கொண்டிருந்த டிராக்டரை அருண்குமார் தடுத்துள்ளார். இதை அறிந்த அதே ஊரே சேர்ந்த வெற்றிவேல்(40) என்பவர் அருண்குமாரை கம்பியால் தாக்கினார். உடன் வந்த பாலமுருகனையும் தாக்கினாராம். காயமடைந்த 2 பேரும் நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் தரப்பினர் தன்னை தாக்கியதாக வெற்றிவேலும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வெற்றிவேலை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஞானவேல் (வயது 21) கூலி தொழிலாளி.
இவருக்கு மது பழக்கம் உண்டு. இந்நிலையில் சம்பவத்தன்று மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு பணம் தர முன்வதாததால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிக்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் பாலையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மணி மகன் விஜயகுமார் (வயது 24). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கம் உள்ள இவர் தினமும் குடித்து வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரது மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிக்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு செட்டி தெருவை சேர்ந்தவர்கள் பட்டம்மாள், சரோஜா. இவர்கள் இருவரது வீடும் அருகருகே உள்ளது.
நேற்று இரவு இவர்களது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் வீட்டில் இருந்த பணம், தளவாட பொருட்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பல் ஆனது.
சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணநிதி, அரிசி, வேட்டி-சேலைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் குப்பன் மனைவி சிவபாக்கியம் (70). இவரது மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (40). மரம் வெட்டும் தொழிலாளி.
சம்பவத்தன்று சிவபாக்கியம் அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவானந்தம் ஆட்டை விற்க போவதாக கூறினார். பின்னர் ஒரு ஆட்டை பிடித்து சென்று தனது வீட்டில் கட்டி வைத்து இருந்தார்.
இதனை மீட்க சிவபாக்கியம் சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் அரிவாளால் சிவபாக்கியத்தின் தலையை அறுத்து கொன்றார்.
பின்னர் தலைமறைவாகி விட்டார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை தேடி வந்தனர். அவர் வண்டலூரில் உள்ள ஒரு வாய்க்கால் பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று ஜீவானந்தத்தை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கத்திரிபுலம் கீழ குத்தகை பகுதியை சேர்ந்தவர் கல்யாண ராமன் (32). இவர் கடை தெருவுக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
பின்னர் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது கருப்பம்புலத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கல்யாண ராமன் படுகாயம் அடைந்தார்.
வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புதுத்துறை கிராமத்தில் சோழன், அன்னை, ரோஜா, ஜாஸ்மின், முல்லை உள்ளிட்ட 10 மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஊக்குனர் மற்றும் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு உறுப்பினர்களை சீர்காழி அருகே உள்ள விநாயககுடியை சேர்ந்த சகுந்தலா, சீர்காழி கோவிலான் தெருவை சேர்ந்த சந்திரா ஆகியோர் அணுகி ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கி தருவதாக கூறி உள்ளனர்.
சீர்காழி பிடாரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இந்த கடன் பெற்று தருவதாகவும், அதற்கு ஒவ்வொரு உறுப்பினரும் ரூ. 2 ஆயிரம் தர வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.
அதன்படி ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூல் செய்துள்ளனர். 3 மாதம் ஆகியும் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் வங்கியை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது வங்கி நிர்வாகத்தினர் நாங்கள் யாருக்கும் கடன் கொடுப்பதாக கூறவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சகுந்தலா, சந்திரா ஆகியோரிடம் கேட்ட போது பணம் தர முடியாது என கூறி தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மகளிர் குழுவை சேர்ந்த புதுத்துறை நடுத்தெரு சுகந்தி சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அழகு துரை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட சகுந்தலாவை கைது செய்தனர்.
அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
திருவாரூர் மாவட்டம் கச்சனம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் பழனி (24). இவர் திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.
அதே கல்லூரியில் வேதாரண்யம் அருகே உள்ள நெய் விளக்கு பகுதியை சேர்ந்த முருகையன் மகள் பிரதீபாவும் (22) படித்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த 21.11.15 அன்று இருவரும் வேதாரண்யத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பழனி தனது மாமனார் வீட்டில் தங்கி விட்டார்.
இவர் கடந்த 19.12.15 அன்று சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பிரதீபா வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் நேற்று பழனி தனது தந்தை வீடான கச்சனத்திற்கு வந்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் கச்சனம் சென்று பழனியை கைது செய்து வேதாரண்யம் அழைத்து வந்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
நாகை 2-வது கடற்கரை சாலையை சேர்ந்தவர் ஹசன்சாகுல்ஹமீது (வயது 35). இவர்மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் செயின்பறிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கீழ்வேளூர் சப்-இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன் மற்றும் போலீசார் சாகுல்ஹமீதுவை நாகை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் கவிதா வழக்கை தள்ளுபடி செய்தார். எனினும் முறைப்படி அவரை சிறைச்சாலையில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் சாகுல் ஹமீது மீது திருவாரூர், திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையங்களில செயின் திருட்டு வழக்குகள் உள்ளது. இதனால் நாகை சிறையில் இருந்து திருவாரூர் சிறைக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்த சாகுல்ஹமீது, நீதி மன்றம் அருகிலேயே உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, திடீரென போலீசை ஏமாற்றி அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து சாகுல் ஹமீதுவை தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் அப்புராஜபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், இவரது மகள் தீபிகா (வயது 19), பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் இறந்துவிட்டதால் தாய் சுமதி பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு செல்போனில் பேசியபடியே வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் அதிகாலை அங்குள்ள ராஜேந்திரன் வாய்க்காலில் தீபிகா மர்மமானமுறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீபிகாவின் செல்போன் மூலம் துப்புதுலக்க தொடங்கினர்.
அவரது செல்போனில் யார் யார் பேசிஉள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் லாவன்படுகையை சேர்ந்த அரசன் (21), கண்டந்தகுடியை சேர்ந்த மோகன் (20) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தீபிகாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகவேல் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.
அதில் கொலை செய்யப்பட்ட தீபிகாவின் தோழியின் சகோதரர் அரசன். இவர் நாகையில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருபவர் மோகன் (20) இருவரும் நண்பர்கள்.
அரசனின் தங்கை மூலம் தீபிகாவுக்கு அரசன் பழக்கமாகியுள்ளார். அந்த பழக்கம் நாளைடைவில் காதலாகி மாறியுள்ளது. இந்நிலையில் தீபிகாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசனை அவர் புறக்கணித்து வந்துள்ளார். அப்போது தீபிகா வேறொரு நபருடன் செல்போனில் பேசுவதை பதிவு செய்த மோகன் அதனை அரசனிடம் காண்பித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அரசன் சம்பவத்தன்று இரவு தீபிகாவை பார்க்க நண்பர் மோகனுடன் சென்றுள்ளார். அப்போது மோகன் தீபிகாவிடம் பேசியபிறகு அழைக்கும்படி கூறிவிட்டு கடைக்கு சென்றுவிட்டாராம்.
இதையடுத்து தீபிகாவிடம் அவர் செல்போனில் வேறொருவருடன் பேசுவதை போட்டுகாட்டி யார் அந்த நபர் என அரசன் கேட்டுள்ளார். அதற்கு தான் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அரசன் தன்னை காதலித்துவிட்டு இப்போது வேறொருவரை காதலிப்பதா? அந்த நபரிடம் உள்ள தொடர்பை நிறுத்தி கொள்ளும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அவர் அருகே செங்கல்கால்வாயில் கிடந்த மண்வெட்டியின் கம்பை எடுத்து தாக்கியுள்ளார். இதில் தீபிகா மயங்கி விழுந்தார். இதையடுத்து தீபிகாவை வாய்க்காலில் தள்ளிவிட்டுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் தனது நண்பர் மோனுடன் சென்றுவிட்டார்.
மறுநாள் அதிகாலை தீபிகா வாய்க்காலில் பிணமாக கிடப்பதாக வந்த செய்தியை பார்த்த பின்புதான் அரசன் தீபிகாவை கொலை செய்திருப்பது மோகனுக்கு தெரிந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வண்டலூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி பாக்கியம் (65).
கடந்த சில வருடங்களுக்கு முன் குப்பன் இறந்து விட்டார். இவர்களது மகன் ஜீவா (42). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். திருமணமாகி உமா என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஜீவா அடிக்கடி வியாபாரத்திற்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஜீவா தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பாக்கியம் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.இதில் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ஜீவா அருகில் இருந்த அரிவாளை எடுத்து பாக்கியத்தின் கழுத்தில் சரமாரி வெட்டினார். இதில் தலை துண்டானது.
அவர் சம்பவ இடத்திலே இறந்தார். கொலையாளி ஜீவா தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்தில் உறவினர்கள் கூடினர். அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கனிமொழி (40). ரவிச்சந்திரன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டுக்காரரான கோபாலகிருஷ்ணன் மகன் சுப்பிரமணியன் என்பவர் கனிமொழிக்கு தேவையான சிறு உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் 7-ந் தேதி வீட்டில் கேஸ் சிலிண்டர் இணைப்பதற்காக சுப்பிரமணியனை. கனிமொழி கூப்பிட்டுள்ளார். அங்கு சென்ற அவர் கேஸ் சிலிண்டரை இணைத்துள்ளார். பின்னர் கனிமொழியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து கனிமொழி சத்தம் போட்டதை தொடர்ந்து சுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி மலேசியாவில் உள்ள கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது கணவரும் உடனடியாக சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து கனிமொழி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுப்பிரமணியனை தேடி வருகிறார்.






