என் மலர்
செய்திகள்

நாகை அருகே மதுவுக்கு அடிமையான 2 பேர் தற்கொலை
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஞானவேல் (வயது 21) கூலி தொழிலாளி.
இவருக்கு மது பழக்கம் உண்டு. இந்நிலையில் சம்பவத்தன்று மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு பணம் தர முன்வதாததால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிக்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் பாலையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மணி மகன் விஜயகுமார் (வயது 24). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கம் உள்ள இவர் தினமும் குடித்து வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரது மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிக்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






