என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறையில் கோர்ட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை கோர்ட்டில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு திறப்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அனுமதி பெறாமல் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு வைக்கப்பட்டதாகவும், இதனால் அம்பேத்கர் படத்துடன் கூடிய கல்வெட்டு அகற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலித்தீர்த்தான், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளர் இளந்தமிழன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்புசெல்வன், சீர்காழி தொகுதி செயலாளர் தாமுஇனியவன் உள்பட சுமார் 50 பேரை கைது செய்தனர்.
    சேந்தங்குடி ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    சீர்காழி:

    சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஞானவல்லி, துணை செயலாளர் கஸ்தூரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா வரவேற்றார்.

    நாகை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரவேண்டும், ஊராட் சிகளில் தட்டுபாடின்றி குடிநீர் வழங்கவேண்டும், சீர்காழி வட்டவழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும், சீர்காழி அடுத்த சேந்தங்குடி ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கலைவேந்தன், சீர்காழி நகர பொருளாளர் மணிமாறன், நகர அமைப்பாளர் கரிகாலன், மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், மயிலை.ஆனந்த், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் நகர செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார்.
    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    ஊட்டி பிங்கர்போஸ்ட் பெரியார் காலனியை சேர்ந்தவர் தனிஸ்கிளாஸ். இவருடைய மகன் டோனிவிக்ரம் (வயது21). அதேபகுதியை சேர்ந்த பாக்கியநாதன் மகன் அனிஸ்கால்ட்டின் (21). இவர் ஊட்டியில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலைபார்த்து வந்தனர். 

    இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் உள்பட 7 பேர் ஊட்டியிலிருந்து புறப்பட்டு நாகை மாவட்டம்  வேளாங்கண்ணிக்கு  சுற்றுலா வந்தனர். அங்கு அனைவரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். இதையடுத்து நேற்று 7 பேரும் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில் 5 பேர் மட்டும் குளித்து விட்டு கரைக்கு திரும்பினர்.

    ஆனால் டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் ஆகிய 2 பேரும் கடலில்  குளித்து கொண்டிருந்த போது திடீரென அலையில் சிக்கினர். இதில் தண்ணீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே கீழையூர் கடலோர காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடலோர காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைஞாயிறு அருகே கார் குளத்தில் பாய்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சசிமேத்யூ மற்றும் உறவினர்கள் 10 பேர் ஒரு காரில் புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்தனர். இந்த கார் இன்று காலை நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஓடாச்சேரி அருகே வந்த போதுகட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளத்தில் பாய்ந்தது.

    இதில் சசிமேத்யூவின் மனைவி சீனியம்மாள் (வயது 39) படுகாயம் அடைந்து சம்ப இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் வந்த 10 பேரும் காயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும். தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான சீனியம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்த போது மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாயிந்ததில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள அக்களுர் கலைஞர் காலனியை சேர்ந்தவர் விமல் (வயது 20). இவர் மயிலாடுதுறையில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் வாட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது மின் மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு விமல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் தாய்-தந்தையை சுத்தியலால் மகன் தாக்கிய சம்பவத்தில் தந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் ஓடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 61). இவரது மனைவி கோகிலம் (வயது 55). இவர்களது மகன் முருகானந்தம் என்கிற முருகேசன் (42). இவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்துவிட்டு சொந்த ஊரில் இருந்து வருகிறார். இவர் அரசு வழங்கிய இலவச வீட்டில் வசித்து வருகிறார்.

    இவர் தனது தாய்-தந்தையை அருகில் குடிசை போட்டுக்கொடுத்து தங்கவைத்து இருந்தார். இந்நிலையில் முருகேசனுக்கும் அவரது தாய்-தந்தைக்கும் வீடு சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் சுத்தியலால் முருகேசன் தனது தாய்-தந்தையை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அன்றே கோகிலம் இறந்து விட்டார். ராமசாமி திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி. மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் விசாரணை மேற்கொண்டு முருகானந்தம் அவரது மனைவி மதியழகி (35), மாமனார் காளிமுத்து (62), மாமியார் ராசலெட்சுமி (58) ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

    இந்நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதையடுத்து போலீசார் தாய்-தந்தையை கொலை செய்த முருகேசன் மற்றும் அவரது மனைவி, மாமனார்-மாமியார் ஆகிய 4 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    சீர்காழி அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்து துறையூர் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 30). இவர் மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

    புகழேந்தி அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதையறிந்த இளம்பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்து இதுபற்றி சீர்காழி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அழகுதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்த 25 வயது மாற்றுதிறனாளி பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்.

    இதனை கவனித்த செம்போடை மகராஜபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் விஜயகாந்த் (26) வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட அப் பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குபதிவு செய்து விஜயகாந்தை கைது செய்தார்.

    வேதாரண்யம் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் அண்டகத்துறையை சேர்ந்தவர் குணசேகரன் மகன் வடிவேல் (31). இவருக்கு சொந்தமான கருவேல மரத்தை இவரது உறவினரான ராதா என்பவர்வெட்டி உள்ளார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்வம் கருவேல மரத்தை வெட்டி முடித்த உடன் வேலியை சரியாக அடைத்துவிட்டு செல்லுபடி ராதாவிடம் கூறியுள்ளார். இதுபற்றி ராதா வடிவேலிடம் கூறியுள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், செல்வம் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அங்கு வந்த குணசேகரன் மற்றும் ராதா ஆகிய 2 பேரும் செல்வத்தை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் செல்வம் படுகாயம் அடைந்தார். உடனே அவரைஅக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

    இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து வடிவேல், குணசேகரன், ராதா ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ராஜகோபாலபுரம் மஞ்சக்கரை தெருவை சேர்ந்தவர் பிச்சையப்பன் (72). இவர் குத்தாலம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி பழனியம்மாள் (65). இவரது நடத்தையில் பிச்சையப்பனுக்கு சந்தேகம் இருந்து வந்தது. நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் அரிவாளால் பழனியம்மாளை பிச்சையப்பன் சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவரது கழுத்து, 2 கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சத்தம்போட்டார். இதனை கேட்டதும் பழனியம்மாளின் மருமகள் அங்கு ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாமியாரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனியம்மாள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பிச்சையப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி ஆகிய பகுதி சாலைகளில் சுற்றிதிரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 10 பேர் மீட்கப்பட்டு சீர்காழியில் உள்ள மனநல மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி திட்டையில் செயல்படும் கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி ஜெயந்தி உதயக்குமார் மனவியலாளர் ராஜ்குமார், மனநல சமூக பணியாளர் ஜான், கவுதமி, செவிலியர் கொண்ட குழுவினர் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் போலீசாருடன் இணைந்து நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, வேளாங்கண்ணி பகுதி சாலைகளில் சுற்றிதிரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 6 ஆண்கள், 4 பெண்களை மீட்டு மனநல மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இவர்களில் 4 பேர் தமிழகத்தையும், 6 பேர் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை மற்றும் மனநல மறுவாழ்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சிக்கு பிறகு பாதிக்கப்பட்டவர் தங்கள் விவரங்களை கூறும் பட்சத்தில் சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பகம் உதவியுடன் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறினர்.

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறையில் தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்டாரதலைவர் ராஜா, அன்பழகன், நகர தலைவர்கள் சூர்யா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக நகர தலைவர் செல்வம் வரவேற்றார். இதில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் கடன்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    அதே போல் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும் அவர்களின் படகுகளை கையகப்படுத்துவதும் குறித்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பத்மநாபன்.மாவட்ட தகவல்தொடர்பு துறை பொறுப்பாளர்கள் கனகசபை, மாவட்ட பொதுசெயலாளர் மிலிட்டரி கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் வடவீரப் பாண்டியன், காளிதாஸ், நகர செயலாளர்கள் நாராயணன், ராம கிருஷ்ணன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் போஸ் தலைமை வகித்தார்.

    முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் சிவப்பிரகாசம், நகரத் தலைவர் மூர்த்தி, மகளிரணி செயலாளர் செல்வராணி, சிறுபான்மை பிரிவு ரஹ்மத்துல்லா, மெய்யாரபீக் மற்றும் வட்டார நகர பொறுப் பாளர்கள் கலந்துகொண்டு விவசாயிகளிடம் பாரபட்சம் காட்டும் மோடி அரசைக் கண்டித்தும், மத்திய அரசிடம் உரிமையை மீட்கத் தயங்கும் மாநில அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தட்டுபாடில்லாத குடிநீர் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    ×