என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் கீழசேதுரஸ்தா பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சிம்பு (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிம்பு நேற்றுமுன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் காரைக்காலில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று பாலகிருஷ்ணன் சிம்புவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு மாடிவீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. உடனே தனது மகன் சிம்புக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிம்பு விரைந்து வந்து வீட்டை பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.5 ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சிம்பு வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இன்று சம்பவ இடத்தில் மோப்ப நாய் துனித் மூலம் ஏட்டு மதி துப்புதுலக்கினார். மேலும் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு துணை மின்நிலையத்தில் நாளை (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இதனால் வாய்மேடு துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆலங்காடு, ஆயக்காரண்புலம், கரியப்பட்டினம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காதென வேதாரண்யம் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    புதுச்சேரி மாநிலம் வில்லியநல்லூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த முகமதுகனி மகன் ஷாகுல்அமீது (வயது 26). இவர், மயிலாடுதுறை மாருதி நகரில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு ஷாகுல்அமீது, காற்றுக்காக வீட்டின் முன்பு உள்ள கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ரூ.18 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு வாலிபர் மதுகுடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலாடுதுறை அருகே அகரவல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அருண்குமார் (26) என்பதும், அவர் ஷாகுல்அமீது வீட்டில் நுழைந்து செல்போன் மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    பூம்புகார் அருகே வேறுஒருவரை காதலிப்பதாக கூறிய கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன் போலீசில் சரண் அடைந்தார்.
    சீர்காழி:

    பூம்புகாரில் தலையில் கல்லைபோட்டு கல்லூரி மாணவியை காதலன் கொலை செய்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி செல்லநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் துர்கா (வயது 19). இவர் கும்மிடிபூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர் பள்ளியில் படித்து வந்த போது அவருடன் பூம்புகார் சுனாமி குடியிருப்புபகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன்ராஜ் (22) என்ற வாலிபரும் படித்து வந்துள்ளார். அதில் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

    பள்ளிப்படிப்பு முடிந்ததும் மதன்ராஜ் பூம்புகாரில் வசித்து வந்தார். அடிக்கடி புதுக்கோட்டைக்கு சென்று துர்காவை சந்தித்து பேசிவந்துள்ளார். இந்த நிலையில் சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள கல்லூரிக்கு துர்கா படிக்க சென்றுவிட்டார். மதன்ராஜ் மீன்பிடிக்கும் தொழிலுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் அவர்களின் சந்திப்பு குறைய தொடங்கியது. அடிக்கடி செல்போனில் மதன்ராஜிடம் பேசி வந்த துர்கா கல்லூரிக்கு சென்ற பின்பு சரிவர பேசவில்லையாம்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துர்காவின் செல்போனிற்கு மதன்ராஜ் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது துர்கா உன்னிடம் பேச விரும்பவில்லை என கூறி அவரது செல்போன் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மதன்ராஜ் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டைக்கு வந்திருந்த துர்காவை தொடர்பு கொண்டு உன்னை தனியாக சந்தித்து பேச வேண்டும் என கூறியுள்ளார்.

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்று துர்காவை அழைத்துக்கொண்டு பூம்புகார் கடற்கரைக்கு வந்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவரை தான் விரும்புவதாக துர்கா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் துர்காவை அடித்து கீழே தள்ளி கடற்கரையில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துர்கா துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் மதன்ராஜ் சீர்காழி போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துர்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மதன்ராஜிடம் சீர்காழி டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சீர்காழி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்படி நாகை மாவட்டம், சீர்காழி அருகே கடலங்குடி கடைவீதியில் இருந்த மதுக்கடையும் மூடப்பட்டது.

    இதையடுத்து கடலங்குடி குருவித்தோப்பு என்ற இடத்தில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் கடலங்குடி, ஓடக்கரை, செட்டிக்கட்டளை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடலங்குடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேற்கண்ட இடத்தில் மதுக்கடையை திறந்தால் விவசாயத்தை நம்பி இருக்கும் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்றும், எனவே மதுக்கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான், மண்டல துணை தாசில்தார் சவிதா, மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுலகம் முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுலகம் முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கொள்ளிடம் ஒன்றியம் சந்தப்படுகை கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால் மாங்கனாம்பட்டு கிராமத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3மணிநேரம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் காவிநீராகவும், பற்றாக் குறையாகவும் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

    இந்நிலையில் காலி குடங்களுடன் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொள்ளிடம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே கொள்ளிடம் மகேந்திரப் பள்ளி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா,ஆணையர் வாசுதேவன், கொள்ளிடம் காவல் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    டெல்டா மாவட்டங்களில் வருகிற 25-ந் தேதி முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என பி.ஆர். பாண்டியன் கூறினார்.
    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் வைத்திய நாதன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

    காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறி விட்டது. கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. வருவாய் இன்றி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.



    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஏற்க மறுத்து வருவது வேதனை அளிக்கிறது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் வருகிற 25-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சேந்தங்குடி ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மே 1-ந் தேதி விவசாயிகள் ஒன்று திரண்டு மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு விடுவோம்.

    கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி மே 16-ந் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வர்த்தகர்கள், பொது மக்களை ஒன்று திரட்டி கொள்ளிடம் ஆற்றில் முற்றுகையிட்டு ஒரு நாள் முழுவதும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மயிலாடுதுறை அரசு டாக்டர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை:

    அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மேற்பட்டப்படிப்பு படிக்க 50 சதவீகிதம் மத்திய அரசு இடஓதுக்கீடு செய்திருந்தது. தற்பொழுது அதை நீக்கிவிட்டு நீட்தேர்வு எழுதவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ சங்க முன்னாள் நாகை மாவட்ட பொருளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட பொருளாளர் பத்மராஜன், ரத்தினகுமார், வீரசோழன் மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் அலுவலக உதவியாளரை பணி செய்யவிடாமல் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் காவலராக (வாட்ச்மேன்) பணியாற்றுபவர் அண்ணாத்துரை (வயது 59). இவர் பணியில் இருந்தபோது புஷ்பவனத்தை சேர்ந்த மணிவண்ணன் வயது (47) என்பவர் தாலுக்கா அலுவலகத்தின் உள்ளே வந்து படமெடுத்துள்ளார். அனுமதியில்லாமல் படம் எடுக்கக்கூடாது என்று அண்ணாத்துரை கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன், அண்ணாத்துரையை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அண்ணாத்துரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்துள்ளார்.

    கோடியக்கரையில் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 35). இவரது மனைவி லதா (31) திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மணிவண்ணன் வெளிநாடு சென்று வருபவர்.

    கடந்த 16-ந் தேதி குழந்தை அழுதுகொண்டிருந்தது. இது குறித்து மணிவண்ணன் லதாவை கண்டித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த லதா வீட்டில் தூக்குமாட்டிக் கொண்டார்.

    தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் லதாவை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துவிட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவுசெய்து திருமணமாகி நான்கு ஆண்டுகளில் லதா இறந்ததால் மேல் விசாரணைக்காக நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார்.

    குத்தாலம் அருகே தீ விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர், நாகம்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி ரேணுகாதேவி(வயது26) சம்பவத்தன்று வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக ரேணுகாதேவியின் உடலில் தீப்பற்றியது. இதில் பலத்த காயமடைந்த ரேணுகாதேவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ரேணுகாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். ரேணுகாதேவிக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் நிறைவடையாத காரணத்தால் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

    நாகை அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 30 வரை நடைபெறும் என்பதால் இந்த 45 நாட்களும் ஆழ் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

    இந்த தடையை தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே நாகையில் விசைப்படகு மீனவர்கள் படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பைபர் படகினர் கோலோ மீன் பிடிக்க சில கிலோ மீட்டர் தூரம் சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகையில் இருந்து 45 கிலோ மீட்டர் கடல் மைல் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் 2 படகுகளில் இலங்கை மீனவர்கள் 11 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை வீரர்கள் 11 இலங்கை மீனவர்களை கைது செய்து 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் நாகை கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×