search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைபாஸ் ரோட்டில் பட்டா கத்தியுடன் வந்து வாகன ஓட்டிகளிடம் பணத்தை பறிக்கும் மர்ம நபர்கள்
    X

    பைபாஸ் ரோட்டில் பட்டா கத்தியுடன் வந்து வாகன ஓட்டிகளிடம் பணத்தை பறிக்கும் மர்ம நபர்கள்

    • பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவையில் எல்.அண்ட். டி பைபாஸ் ரோடானது அவினாசி ரோட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் முக்கிய ரோடாக உள்ளது. சேலம்-கொச்சின் பைபாஸ் ரோட்டில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.

    நள்ளிரவில் கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளும், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சரக்குகளை ஏற்றி கொண்டு வரும் லாரிகளும் எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் வரிசையாக வந்து கொண்டிருக்கும். போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களும் இருசக்கர வாகனத்தில் இந்த சாலை வழியாக தங்களது வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் சமீபகாலமாக நள்ளிரவில் பட்டாகத்தியுடன் சில மர்ம ஆசாமிகள் இந்தபகுதியில் வலம் வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளை வழி மறித்து, அவர்களை மிரட்டி ,தாக்கி வாகனத்தை மற்றும் உடைமைகளையும் பறித்து செல்கின்றனர்.

    இதன் காரணமாக பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் இந்த ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எல்.அண்ட்.டி பைபாஸ் ரோட்டில் வலது புறமும், இடது புறமும் ஏராளமான குறுக்குச் சாலைகள் உள்ளது.

    இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் தூரத்தில் இருசக்கர வாகனம் வருவதை பார்த்து, திடீரென வழிமறிக்கின்றனர். அப்போது வாகன ஓட்டிகளுக்கு தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மர்ம ஆசாமிகள் மிரட்டி தாக்கி உடைமைகளை பறித்து செல்கின்றனர்.

    கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் இந்த பகுதி வழியாக போத்தனூர் அண்ணாபுரத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டிரைவர் அப்துல் முஜீப் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பட்டா கத்தியுடன் வழி மறித்த 3 பேர் அப்துல் முஜீப்பை தாக்கி அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பின்னர் அந்த வாலிபர் இது குறித்து செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். தினசரி தொடரும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    எல்.அண்ட். டி பைபாஸ் சாலையானது ஆள் நடமாட்டம் இல்லாத சாலையாகும். நான்கு சக்கர வாகனங்களும், கனரக வாகனங்களும் ஒரே நேர்கோட்டில் எதையும் பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கும். சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவரை மடக்கி, யாராவது மிரட்டி பேசிக்கொண்டிருந்தால் கூட அதை கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டுதான் இருப்பார்கள்.

    ஆனால் போலீசார் ரோந்து வந்தால் மட்டுமே தான், தேவையில்லாமல் நின்று கொண்டிருப்பவர்கள் யார்? என்று விசாரிப்பார்கள். எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும். இது போன்ற நபர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே எல்.அண்ட்.டி பைபாஸ் ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×