என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் 130 அடியை எட்டும் முல்லைப்பெரியாறு அணை: மின் உற்பத்தி அதிகரிப்பு
- முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து நீர்மட்டமும் கிடுகிடு வென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. அணைக்கு 5531 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த வாரம் குடிநீருக்காக 105 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 4547 மி.கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூலவைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 59.02 அடியை எட்டியுள்ளது. விரைவில் 60 அடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 7787 கன அடி நீர் வருகிறது. 3424 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 55 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 665 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியான முழு கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. வரத்தும், திறப்பும் 665 கன அடி.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக நிரம்பி உள்ளது.அணைக்கு வரும் 45.03 அடி அப்படியே திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி 15, அரண்மனைபுதூர் 9, வீரபாண்டி 10.8, பெரியகுளம் 31, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 21.6, வைகை அணை 17.2, போடி 11.2, உத்தமபாளையம் 7.8, கூடலூர் 15.6, பெரியாறு அணை 0.2, தேக்கடி 6, சண்முகாநதி அணை 8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






