search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை அடிவாரத்தில் குட்டிகளுடன் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம்
    X

    மருதமலை அடிவாரத்தில் குட்டிகளுடன் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாம்

    • வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து கணுவாய் வழியாக மருதமலை அடிவாரத்திற்கு குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்தன.

    இந்த காட்டு யானைகள் மருதமலை அடிவாரம், பாரதியார் பல்லைக்கழகம், ஐ.ஓ.பி.காலனி, யானை மடுவு உள்ளிட்ட பகுதியிலேயே 2 நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.

    நேற்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் 20 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதுபற்றிய தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த காட்டு யானைகள் யானைமடுவு பகுதியில் நின்று கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வலம் வருகின்றன.

    மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரும் அந்த யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×