search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில்  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நவீன பஸ் நிறுத்த கூடங்கள் - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
    X

    கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் பேசிய போது எடுத்த படம். அருகில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.

    ஆறுமுகநேரியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நவீன பஸ் நிறுத்த கூடங்கள் - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

    • ஆறுமுகநேரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
    • திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் பஸ் நிறுத்த விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

    இதற்காக ஸ்டேட் வங்கி அருகில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும், பழுதடைந்துள்ள கிணறு ஒன்றையும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் திருச்செந்தூர் நோக்கி செல்லும் பஸ்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கவும், தூத்துக்குடி நோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்ல காமராஜ் பூங்கா அருகே மற்றொரு பஸ் நிறுத்தம் அமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் போக்குவரத்தை சீர் செய்வதற்காக மெயின் பஜார் சந்திப்பு, ஸ்டேட் பாங்கி நிறுத்தம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பஜார் பகுதி சாலை விரிவாக்கம் செய்வதற்காக வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நவீனப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அகஸ்டின், நகர அ.தி.மு.க செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, பாரதீய ஜனதா நகர தலைவர் முருகேச பாண்டியன், நகர்நல மன்ற தலைவர் பூபால் ராஜன், காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் ராமஜெயம், வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×