என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவில் விபத்து தனியார் பஸ்-லாரி பயங்கர மோதல்: ஒருவர் பலி 27 பயணிகள் உயிர் தப்பினர்
    X

    நள்ளிரவில் விபத்து தனியார் பஸ்-லாரி பயங்கர மோதல்: ஒருவர் பலி 27 பயணிகள் உயிர் தப்பினர்

    • லாரி டிரைவர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
    • விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று நள்ளிரவு, டயர் பஞ்சராகி சாலையோரத்தில் நின்றிருந்த தனியார் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    சேலம் இரும்பாலை, ஜாகிரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்பட 29 பேர், தனியார் பஸ்சில் காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். நேற்றிரவு அதே பஸ்ஸில் சேலத்திற்கு திரும்பினார்கள்.

    இந்த பஸ், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் சென்றபோது திடீரென டயர் பஞ்சர் ஆனதால், டிரைவர், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்த அங்கமுத்து (வயது 52) என்பவர் சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தினார்.

    அப்போது மதுராந்தகத்திலிருந்து புகளூர் நோக்கி கரும்பு சக்கை லோடு ஏற்றிச் சென்ற லாரி, பஸ்ஸின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

    இந்த கோர விபத்தில், சேலம் இரும்பாலையை சேர்ந்த ரத்தனம் (57), ஜாகிரெட்டிப்பட்டி முருகேசன் (54), லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பீமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (36) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். வலியால் அவர்கள் அலறி துடித்தனர்.

    பஸ்ஸில் பயணித்த மீதமுள்ள 27 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி, இரும்பாலையைச் சேர்ந்த ரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணன், முருகேசன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநள்ளாறு கோவிலுக்கு சென்று திரும்பியவர்கள் விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×