என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலூர் அருகே தாயை அவதூறாக பேசிய தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்
- பலத்த காயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- வழக்குப்பதிவு செய்து தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த புது சுக்காம்பட்டி அருகில் உள்ள முத்துவேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிக்கு ராஜா (வயது 29), அரவிந்த் (27) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதில் ராஜா சென்னையில் தங்கி கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் அரவிந்த் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் தாய் புனிதாவிடம் அடிக்கடி பணம் வாங்கி மது குடிப்பதுடன் பல்வேறு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது மேலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 17 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே சென்னையில் வேலை பார்த்து வரும் ராஜா அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துவேல்பட்டிக்கு வந்த ராஜா நேற்று இரவு தாய் புனிதாவுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த், தாயிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ஆனால் புனிதா தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த அரவிந்த் தாயை ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ராஜா, கட்டிலில் படுத்திருந்த அரவிந்தை, வீட்டில் இருந்த விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் ராஜா, நேராக மேலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அப்போது அவர் தாயை பழித்து பேசியதால் தம்பியை அடித்துக் கொன்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக் டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட அரவிந்த் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயை அவதூறாக பேசிய தம்பியை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






