என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
- மதுரை அருகே வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விளாங்குடி, சொக்கநாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டியராஜா (வயது 30). இவர் சம்பவத்தன்று நேருநகர் மந்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது. இதுதொடர்பாக மருதுபாண்டியராஜா செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் சொக்கநாதபுரம் ஜீவராஜ், விளாங்குடி நேரு நகர் கோபால் மகன் கணேசன் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற மருதுபாண்டிய ராஜாவை தாக்கியதாக மேற்கண்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து, தப்பிச்சென்ற அஜய் என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரை பொன்மேனிபுதூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). ஆட்டோ டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று மாலை காளவாசலில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், 'இது எங்களின் ஏரியா. இங்கு நீ எப்படி பயணிகளை ஏற்றிச் செல்லலாம்?' என்று கேட்டனர்.
எனவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டன. இது தொடர்பாக கார்த்திக் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனக்கங்குளம், பி.ஆர்.சி. காலனி பாண்டி மகன் பிரகாஷ் (20), பொன்மேனி ஜவகர் தெரு, வேலு (வயது 29) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய சம்மட்டிபுரம் ஜெகன், பாண்டியன் நகர் சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.