என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்: 3 பேர் கைது
- மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- கணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை யாகப்பா நகர், செல்வவிநாயகர் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி லட்சுமி (வயது 78). இவரது பேரன் மணிமாறன். இவர் அங்கு உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் மணிமாறனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்து விட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் நேற்று நள்ளிரவு 2 பேருடன், மணிமாறன் வீட்டுக்கு வந்தார். அப்போது 'உன்னிடம் தனியாக பேச வேண்டும், வெளியே வா' என்று அழைத்துச் சென்றார்.மணிமாறனை அந்த கும்பல் கடத்திச் சென்றது.
இதனைத்தொடர்ந்து மணிமாறணை இருட்டான பகுதிக்கு கொண்டு சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அந்தப்பெண்ணின் கணவர் மணிமாறனிடம், 'நீ என் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வருகிறாய். எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்எ என்று கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுபற்றி லட்சுமி, அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம், தாமரை ஊருணி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (45), ஆனையூர் மந்தை திடல் இருளாண்டி என்ற கார்த்திக் (28), தீக்கதிர் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி (45) என்பது தெரியவந்தது. 3 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சவரத் தொழிலாளியை கடத்தி சென்று ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.