search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்
    X

    தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

    • தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
    • பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.

    வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.

    ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×