search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பாலங்கள்-பொது கட்டிடங்களை அலங்கோலமாக்கும் போஸ்டர்கள்
    X

    மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பறக்கும் பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டி ருக்கும் காட்சி. 

    மேம்பாலங்கள்-பொது கட்டிடங்களை அலங்கோலமாக்கும் போஸ்டர்கள்

    • மதுரை நகரில் மேம்பாலங்கள்-பொது கட்டிடங்களை போஸ்டர்கள் அலங்கோலமாக்குகிறது.
    • விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    காளவாசல் மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரை நகரம் காலத்திற்கு ஏற்ப நாள்தோறும் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது. தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கும் மதுரையில் அரசியல் கட்சியினர் மாநாடு, பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி சினிமா ஆர்வம்மிக்க மக்கள் அதிகம் வசிக்கும் மதுரை நகரில் பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக மதுரையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடப்பது வாடிக்கையாக உள்ளது. அரசியல் கட்சியினர் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர் காலமாக மாறினாலும் போஸ்டர் கலாச்சாரம் மட்டும் தமிழகத்தில் இன்னும் மாறவே இல்லை.

    குறிப்பாக மதுரையில் சினிமா ரசிகர்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் பிரச்சினைக்குரிய வாசகங்களை இடம்பெற செய்து போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.இதனை அதிகாரிகளோ, போலீசாரோ கண்டு கொள்வதில்லை. மதுரை நகரில் தற்போது எங்கு பார்த்தாலும் பெரிய அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அரசு பொது கட்டிடங்கள், மேம்பாலங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது.

    அரசு பல கோடி மதிப்பில் பொது கட்டிடங் களையும், மேம்பாலங்களையும் கட்டுகிறது. அவைகள் திறப்பு விழா காண்பதற்குள் அரசியல் கட்சியினரோ அல்லது மற்ற அமைப்புகளோ போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தி விடுகின்றனர்.

    இதற்கு உதாரணமாக மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பறக்கும் மேம்பாலத்தை கூறலாம். இந்த பாலத்தின் தூண்களின் அரசியல் கட்சியினர், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், திறப்பு விழா நடத்துபவர்கள் என பல தரப்பினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அழகாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் தூண்களில் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. புதிய மேம்பாலம் போஸ்டர்கள் ஒட்டுவதற்காக கட்டப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

    அது மட்டுமின்றி பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய தொழில்கள் நடத்துபவர்கள் வரை பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக நோட்டீசுகளை பொது இடங்கள், மின் கம்பங்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள் அரசு கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள், பொதுக் கழிப்பறைகள், அரசு வைத்திருக்கும் தெரு மற்றும் ஊர் பெயர் பலகைகளில் கூட ஒட்டி மறைத்து விடுகின்றனர். நகரின் அழகை கெடுக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் கலாச்சாரத்தை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாததால் இந்த நிலை தொடருகிறது.

    ஆகவே இதனை தடுக்க மதுரை நகரில் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அபராதமும் விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


    Next Story
    ×