search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் அனாதையான மனநலம் பாதித்த பெண்
    X

    மதுரையில் அனாதையான மனநலம் பாதித்த பெண்

    • மதுரையில் அனாதையான மனநலம் பாதித்த பெண்ணுக்கு கலெக்டர் உதவி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அமுதா படுக்கை அறை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை

    மதுரை உலகநேரி, அம்பலகாரன் பட்டியை சேர்ந்தவர் முருகன் (62). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் மூத்த மகள் சிவரஞ்சனி, இளைய மகள் அமுதா (24) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    இவர்களில் மூத்த மகள் சிவரஞ்சனி, மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரை குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். முருகனின் மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். முருகன் இளைய மகள் அமுதா உதவியுடன் சிவரஞ்சனியை பராமரித்து வந்தார்.

    முருகன் கடந்த 31-ந் தேதி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டிக்கு சென்றார். அங்கு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, முருகன் கடந்த 2-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.

    தாய் மாரடைப்பில் இறந்த நிலையில் தந்தையும் விபத்தில் பலியான சம்பவம் அமுதா, சிவரஞ்சனியை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அமுதா தந்தையின் உடலை வாங்குவதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கிடங்குக்கு வந்திருந்தார். உசிலம்பட்டி போலீசார் உரிய நேரத்துக்கு வராததால், பிரேத பரிசோதனை வேறு ஒரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அமுதா மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி சிவரஞ்சனியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். 'தாயும் இறந்து தந்தையும் பலியான நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியை எப்படி பராமரிக்க போகிறோம்? என்று அமுதா கண்ணீர் வடித்தார்.

    அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அமுதா படுக்கை அறை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து சிவரஞ்சனி அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக ராமநாதபுரத்தில் வசிக்கும் அத்தை ஞானாம்பாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே அமுதாவுக்கு பிரேத பரிசோதனை முடிந்து தத்தனேரி சுடுகாட்டில் இறுதி சடங்கு முடிந்தது. மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில், முருகனின் உடலுக்கு இன்று பிரத பரிசோதனை நடத்தப்படுகிறது.

    விபத்தில் தந்தை இறந்தது, தங்கை தற்கொலை செய்தது பற்றி எதுவும் தெரியாமல், சிவரஞ்சனி ஆஸ்பத்திரி வாசலில் சிரித்தபடி நின்று கொண்டு இருந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவரை திருவாதவூர் மனநல காப்பகத்தில் சேர்க்கும் பணியை, சமூக சேவகர் நேதாஜி ஹரி கிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார்.

    மதுரையில் ஒட்டு மொத்த குடும்பமும் இறந்த நிலையில் அனாதையாக நிற்கும் மனநலம் பாதித்த சிவரஞ்சனியை அனாதை இல்லத்தில் சேர்க்கும் விஷயத்தில், கலெக்டர் அனீஷ்சேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×