search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார்: மதுரை ஐகோர்ட்டு
    X

    குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார்: மதுரை ஐகோர்ட்டு

    • குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் போலீஸ் சூப்பிரண்டு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர்.

    மதுரை

    மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர். பின்னர் இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 12 பேர் மீதும் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் சாட்சிகளை எதிர்த்தரப்பினர் மிரட்டி வந்தனர். இது தொடர்பாக அந்த சாட்சிகள் போலீசில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களால் தொடர்ந்து சாட்சிகள் மிரட்டப்பட்டு வந்தனர். மேலும் எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இல்லாத என் மீது வழக்குப்பதிவு செய்தனர். எனவே குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட திருமங்கலம் டவுன் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

    Next Story
    ×