என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்- போலீசார் விசாரணை
- உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
- சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 52), விவசாயியான இவர் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பாலையா உறவினர்களான நம்பி(55), அவரது மகன் ரமேஷ் (24) ஆகியோர் பாலையாவை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் பாலையா ஆத்திரம் அடைந்து நம்பி, ரமேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக களக்காடு போலீசார் பாலையாவை கைது செய்தனர். இந்த வழக்கில் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், பாலையாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாலையா இன்று அதிகாலை திடீரென சிறை வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த சிறைக்காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலையாவின் உடலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.






