என் மலர்
கிருஷ்ணகிரி
- கூலி தொழிலாளியின் சிறுநீரகப் பையில் இருந்த கல் அகற்றம்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் சிறுநீரகப் பையில் இருந்த 300 கிராம் எடை கொண்ட கல்லை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பெரியார் நகரைச் சேர்ந்த அருள்(வயது 22). கூலி தொழிலாளி.
இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக கடும் வயிற்றுவலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளால் மிகவும் சிரமப்பட்டு வந்தார். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்து அவ்வப்போது வலிநிவாரண மாத்திரை, மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால் கடந்த 2-ந் தேதி, கடும் வயிற்று வலியால் சிறுநீர் கழிக்க இயலாத நிலையில் மீண்டும் அவதிப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உடனடியாக அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனையில் நோயாளிக்கு 300 கிராம் எடை கொண்ட மிகப் பெரிய கல் ஒன்று சிறுநீரகப் பையில் இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே, அவருக்கு உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுண அர்களான டாக்டர் அருண் விஜயன், டாக்டர் தமிழ் முத்து மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணரான டாக்டர்பிரபு தலைமையில் நடந்தது.
இதில், டாக்டர்கள் சுபா, சதீஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அதிநவீன கருவிகள் கொண்டு சிறுநீரகக் கல் அகற்றுதல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 300 கிராம் எடை கொண்ட மிகப் பெரிய கல்லை அகற்றினர். தற்போது நோயாளர் நலமுடன் உள்ளார்.
மேற்கண்ட அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் அல்லது வெளியிடங்களில் செய்வதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகும்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அதிநவீன கருவிகள் கொண்டு சிறுநீரகக் கல் அகற்றுதல் சிகிச்சை சிறப்பு சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களால் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த பணம் மாயம் ஆனது.
- போலீசில் புகார் கொடுத்தார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முல்லை நகர் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). ஓய்வு பெற்ற ஆசிரியர்.இவர் தனது ஆடிட்டரை பார்ப்பதற்காக சேலம் சென்றுள்ளார்.
அப்போது அவர் தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் ரூ.2.95 லட்சம் பணத்தை வைத்திருந்துள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது யாரோ மர்ம நபர் அந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம் இது குறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார் .
போலீசார் வழக்கு பதிந்து மர்ம திருடனை தேடி வருகின்றனர்.
- கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
- ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. வின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி (சகோதரர் மகள்) இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மண மக்கள் நித்யதாரணி-தீபக் ஆகியோரை வாழ்த்தினார்கள்.
இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்களான வீரமணி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், செங்கோட்டையன், கிருஷ்ணகிரி மேக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஓ.எஸ். மணியன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், தமிழ்ச்செல்வம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், தேவராசன், சக்கரவர்த்தி, கன்னியப்பன் ,சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி, பாலசுப்பிரமணி, பாபு (எ) வெங்கடாசலம், பையூர் ரவி, முருகன் , நகர செயலாளர்கள் கேசவன், விமல், ஆறுமுகம், உள்ளிட்டோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
- அதியமான் கல்லூரியில் ராகிங் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
- மாணவர்களுக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ராகிங் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் பொறுப்பு முதல்வர் லக்ஷ்மணகுமார் மற்றும் மேலாளர் சுப்ரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் இதில், பேரிகை துணை சப் -இன்ஸ்பெக்டர் சிவகுமார் கலந்து கொண்டு, ராகிங்கை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் ராகிங் செய்பவர்களுக்கான தண்டனைகள் குறித்தும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் அவர் மாணவர்களுக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் காவல்துறையை எவ்வாறு தொடர்பு கொள்வது? என்றும் விளக்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் உதவி பேராசிரியர்களுமான காவியா மற்றும் தர்மதுரை ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
- முகாமில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தனியாரிடம் கடன் பெற்று மீளமுடியாமல் இருக்கும் அப்பாவி மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இந்தியன் வங்கி சார்பாக 75-ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா, கிருஷ்ணகிரி மாவட்ட வங்கிகள் இணைந்து நடத்தும் கடன் வழங்கும் முகாம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பழனிகுமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் சார்பாக 75ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நாடு முழுவதும் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் பங்குபெற்ற, வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த முகாமில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் ஏழை, எளிய மக்கள் உயர்வதற்கு வங்கிகளுக்கு பொறுப்புகள் அதிகம். மாவட்டத்தின் கடைக்கோடி மலைக்கிராமங்களுக்கு வங்கி மேலாளர்கள் ஒரு குழுவாக சென்று, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் சுய தொழில் பற்றியும், 2 ரூபாய், 3 ரூபாய் மற்றும் மீட்டர் வட்டியென தனியாரிடம் கடன் பெற்று கடனிலிருந்து மீளமுடியாமல் இருக்கும் அப்பாவி மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும். மேலும், வங்கிகள் கல்வி கடன்களை தகுதியுடையவர்களக்கு தாமதமின்றி வழங்கி, அவர்கள் கல்வி கற்றிட உதவிட வேண்டும்.
இவ்வாறுஅவர் பேசினார்.
- காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தேர்தல் நடத்துவது தொடர்பாக, வாக்காளர் பட்டியல் வெளியிட்டு,தேர்தல் ஆலோசனைக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
ஓசூர், பழைய பெங்களூரு சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கூட்டரங்கில், நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர். தேன். அன்வர்நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.சி.யுமான தர்மசேனா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் தொடர்பான கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி, கூட்டத்தில் பேசினார்.
மேலும் இதில்,கர்நாடக மகிளா காங்கிரஸ் தலைவர் ராதா உமேஷ், தேர்தல் பார்வையாளர்கள் வேலூர் செந்தில், மகாலட்சுமி, தர்மபுரி காவேரியம்மாள் மற்றும் மாநகர தலைவர் நீல கண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்யகணேஷ், மாவட்ட பொருளாளர் மகாதேவன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், வட்டார தலைவர் சீனிவாச ரெட்டி, மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா மற்றும், மாவட்ட, வட்டார, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்துகொண்டனர்.
- ஆற்றங்கரையில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர்.
- நோய் பரவும் அபாயம் உள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் இஸ்லாம்பூர், பகுதிகளில் ஏராளமான கோழி, ஆடு, மாடு இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கடைகளில் கழிவுகளை கடைகளின் உரிமையாளர்கள் சிமெண்ட் பைகளில் கட்டி இரவு நேரங்களில் தண்டரை பஸ் நிறுத்தம் அடுத்து சனத்குமார் நதி ஆற்றங்கரையோரத்தில் போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த ஆற்றுநீர் அப்பகுதி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நீராதாரமாக திகழும் இந்த ஆற்றங்கரையோரத்தில் இருபுறமும் இறைச்சிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி வந்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
இப்பகுதியில் திருமணமண்டபங்கள், தொழில்சாலைகள் பசுமை குடில்கள் இருக்கின்றது.
மேலும், இது தேன்கனிகோட்டை-ஒசூர் செல்லும் நெடுஞ்சாலையில் இருப்பதால் பஸ்களில் டூவிலர்களில் செல்பவர் தூர்நாற்றத்தாதால் அவதிபடுகின்றனர்.
இந்நிலையில் மழை பெய்யும் சமயங்களில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு இறைச்சி கழிவுகளை நாய்கள், பன்றிகள் தின்று சிதறச் செய்கிறது. அவ்வாறு வரும் கழிவுகள் காற்று பலமாக வீசும் போது சாலையின் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது.
இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் போய் விடுகின்றனர்.
இச்சம்பவம் சமுக ஊடகங்களில் பரவியால் தகவல் அறிந்த ஊராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுத்து கழிவுகளின் மீது மண்கொட்டி தற்காலிகமாக முடியுள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இறைச்சிக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறைச்சிக் கடைகளில் விழும் கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தி வேறு இடங்களில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பல இறைச்சி கடைகள் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருவதால் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மோட்டார்சைக்கிள்கள் மோதல்.
- விபத்தில் 3 பேர் பலியான பரிதாபம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள மெடுகம்பள்ளியைச் சேர்ந்தவர் நாகோஜி (வயது40). அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாச்சி (40). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு சென்றனர்.
குருவிநாயனபள்ளியை சேர்ந்தவர் சையத் (30). லாரி ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்த சபீர்வுல்லா (32), நூர் முகமது (30). இவர்கள், மூன்று பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மேடுகம்பள்ளி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில், இரு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
பலத்த காயமடைந்த வர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகோஜி, அம்மாச்சி, சையத் காசிம் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
- கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்.
- பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட துவாரகா நகர் விரிவாக்கம், சாய்கார்டன் பகுதிகளில்15 -வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லக்ஷ்மி நவீன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராறில் தந்தையை மகன் தாக்கினார்.
- அவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த துடுக்கனஹள்ளி, கோவில்கொட்டாயை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55). விவசாயி. இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரத்தில் சின்னசாமியை அவரது மகன் ஆனந்தன் (31) இரும்பு கம்பியால் தனது தந்தை என்று கூட பார்க்காமல் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சின்னசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி., அணை போலீசார் ஆனந்தனை கைது செய்தனர். மேலும் அவரது தாய் கண்ணம்மா, தங்கை பவித்ரா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்.
- விபத்தில் சிக்கிய டிரைவர் பலியானார்.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை அருகே பஜ்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் மனோஜ் (வயது22). இவர் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் சூளகிரி அருகேயுள்ள கொல்லப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மனோஜ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மனோஜை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கருணாநிதி பிறந்த நாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- 3 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் கருணாநிதி 99-வது பிறந்தநாளை முன்னிட்டு காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் வரவேற்றார்.
விழாவிற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கே.எஸ். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றியக் செயலாளர்தேங்காய் சுப்ரமணி, பேரூர் செயலாளர் பாபு , முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் விவேகானந்தன், தொழிலதிபர் உடன்பிறப்பு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் 99 கிலோ கேக் வெட்டி, 3000 லட்டு, 2000 பெண்களுக்கு புடவை, 1000 ஆண்களுக்கு வேட்டி, 3000 பொதுமக்களுக்கு பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி, கடலரசு மூர்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினி செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






