என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கூலி தொழிலாளியின் சிறுநீரகப் பையில் இருந்த 300 கிராம் கல் அகற்றம்
- கூலி தொழிலாளியின் சிறுநீரகப் பையில் இருந்த கல் அகற்றம்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் சிறுநீரகப் பையில் இருந்த 300 கிராம் எடை கொண்ட கல்லை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பெரியார் நகரைச் சேர்ந்த அருள்(வயது 22). கூலி தொழிலாளி.
இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக கடும் வயிற்றுவலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளால் மிகவும் சிரமப்பட்டு வந்தார். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்து அவ்வப்போது வலிநிவாரண மாத்திரை, மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால் கடந்த 2-ந் தேதி, கடும் வயிற்று வலியால் சிறுநீர் கழிக்க இயலாத நிலையில் மீண்டும் அவதிப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உடனடியாக அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனையில் நோயாளிக்கு 300 கிராம் எடை கொண்ட மிகப் பெரிய கல் ஒன்று சிறுநீரகப் பையில் இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே, அவருக்கு உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுண அர்களான டாக்டர் அருண் விஜயன், டாக்டர் தமிழ் முத்து மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணரான டாக்டர்பிரபு தலைமையில் நடந்தது.
இதில், டாக்டர்கள் சுபா, சதீஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அதிநவீன கருவிகள் கொண்டு சிறுநீரகக் கல் அகற்றுதல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 300 கிராம் எடை கொண்ட மிகப் பெரிய கல்லை அகற்றினர். தற்போது நோயாளர் நலமுடன் உள்ளார்.
மேற்கண்ட அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் அல்லது வெளியிடங்களில் செய்வதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகும்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அதிநவீன கருவிகள் கொண்டு சிறுநீரகக் கல் அகற்றுதல் சிகிச்சை சிறப்பு சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களால் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






