என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கோட்டத் தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தமூர்த்தி, சங்க தணிக்கையாளர் லோகநாதன், உதவி செயலாளர்கள் திருமால், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜப்பா நன்றி கூறினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ஊழியர்கள் அவசர தேவை களுக்கு விடுப்பு கேட்டால் தர மறுக்கும் கிழக்கு உட்கோட்ட ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு கண்டனம் தெரிவிப்பது. ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குழந்தைகள் கல்வி உதவித் தொகை மற்றும் கம்பைன் பணி அலவன்ஸ் தொகையை வழங்க மறுப்பதை கண்டிப்பது குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள அத்திவீரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகள் சுவேதா. இவர் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டில் சுவேதா எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சுவே தாவை தற்கொலைக்கு தூண்டியதாக அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 67). அவரது மகன் வேலு (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஐ.டி.ஐ.நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2022-23-ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் சேர 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை.

    பெண்களுக்கான சிறப்பு தொழிற்பிரிவுகளாக, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், கம்மியர் இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகியவை உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஒயர்மேன் (2 வருடம்), வெல்டர் (1 வருடம்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு, மின் பணியாளர், கம்மி யர் மின்னணுவியல், பொருத்து ளர், அச்சு வார்ப்பவர் தொழில்நுட்பவியலாளர், கம்மியர் கருவிகள், கம்மியர் எந்திரம், மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர், இயந்திர வேலையாள் கம்மியர் மோட்டார் வண்டி, கருவி மற்றும் அச்சு செய்பவர் மற்றும் கடைசலர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

    நேரடி மாணவர் சேர்க்கைக்கு மாணவர்க ளுக்கு உதவிடும் வகை யில், ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப் கம்ப்யூட்டர், சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடுகாலணி ஆகியவை வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு.

    எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர்-முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • பரிசோதனைக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது”.

    ஓசூர்

    ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள குணம் மருத்துவமனையில், பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு இலவச பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தை, குணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட 3 பெண்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மருத்து வமனை இயக்குனர்கள் டாக்டர் பிரதீப், டாக்டர் செந்தில் மற்றும் டாக்டர் அக்ஷயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர், டாக்டர் பிரதீப், டாக்டர் செந்தில் அகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவைப் பொறுத்த வரை, 1 லட்சம் பெண்களில், 26 பேர் மார்பக புற்று நோய்க்கு ஆளாகின்றனர். அவர்களில் 13 பேர் இறந்து விடுகின்றனர். இந்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இலவச பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, தினமும் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இதற்கென ஒரு பெண் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரிசோதனை மையம் செயல்படும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், பரிசோதனை செய்து கொண்டு பயனடையலாம். மேலும் இங்கு மேமோகிராம் பரிசோதனைக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது".

    இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது டாக்டர்கள் பிரபுதேவ், அக்ஷயா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு.
    • ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை.

    ஓசூர்:

    ஓசூர் அருகே ஐஎஸ்ஐ முத்திரையை தனியார் நிறுவனம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து அதன் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மோட்டார் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இந்திய தர நிர்ணயச் சட்டம், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கிளினிக்குகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பரமசிவன் ஆகியோர் கிளினிக்குகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் ஓசூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ்காந்தி, பேரிகை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள அத்திமுகம் கிராமத்தில் 3 கிளினிக்குகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, அங்கு கிளினிக் நடத்திக் கொண்டிருந்த சரவணன் என்பவரையும், அதே கிராமத்தில் மற்றொரு பகுதியில் கிளினிக் வைத்திருந்த குமுதா என்ற போலி டாக்டரையும் கையும், களவுமாக பிடித்து பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். இதில் சரவணன் பி.ஏ. இலக்கியம் படித்து விட்டு மக்களுக்கு போலியாக வைத்தியம் செய்து வந்தது தெரிய வந்தது.

    இவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் மீண்டும் போலி டாக்டராக கிளினிக் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மற்றொரு போலி மருத்துவர் குமுதா பி.இ. படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்தார். இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் மோகன் என்ற நர்சிங் படித்த மற்றொரு போலி டாக்டர் கிளினிக்கை பூட்டி விட்டு தப்பியோடி விட்டார். அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேற்கண்ட 3 கிளினிக்குகளுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

    • கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் பிரேம்கா வசித்து வருகிறார்.
    • சரவணன் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கொத்துக்காரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்கா (வயது 31). இவருக்கும் சரவணன் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் பிரேம்கா வசித்து வருகிறார்.

    இந்த சூழலில் சரவணன் தனது உறவினர் ஒருவரது மகளை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது பற்றி அறிந்த பிரேம்கா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் சரவணன், அவரது பெற்றோர் வேடியப்பன், பத்மா,உள்பட 9 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் சரவணன் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மர்ம நபர்கள் திருடி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.38 ஆயிரத்து 300 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளவர் தேன்மொழி (வயது 42). இவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில் கடந்த 4-ந்தேதி 150 கிலோ காப்பர் ஒயர், 250 லிட்டர் ட்ரான்ஸ்பாரம் எண்ணெய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின்பேரில் தேன்கனிகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.38 ஆயிரத்து 300 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கால்நடைகளுக்கு மலடு நீக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் பகுதியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு மலடு நீக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இம்முகாமிற்கு கிருஷ்ணகிரி கோட்ட உதவி இயக்குநர் அருள்ராஜ் தலைமையில் பெரம கவுண்டனூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் தமிழ் இன்பன் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சையான குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் சினை தரிசிக்காத கால்நடைகளுக்கு உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை இம்முகாமில் அளிக்கப்பட்டது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மணிகண்டனை, மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கினார்கள்.
    • சுப்பிரமணி, நந்தகுமார் ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, பழைய பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது22). கூலி தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்த மணிகண்டனின் நண்பர்களான தனுஷ் என்கிற சுப்பிரமணி (20), நந்து என்கிற நந்தகுமார் (24) மற்றும் காதர் பாட்ஷா ஆகியோர் மணிகண்டனிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டனர். பணம் தர மறுத்த மணிகண்டனை, மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கினார்கள்.

    இதில், காயமடைந்த மணிகண்டன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு மது போதையில் சென்ற தனுஷ், நந்து ஆகிய 2 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை டாக்டர் முகமது இஸ்மாயிலிடம், மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது எனக்கூறி தகராறு செய்தனர்.

    மேலும் அவரை தாக்கியதுடன்அங்கிருந்த டேபிள், கதவுகளையும் அடித்து உடைத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர் முகமது இஸ்மாயில் கொடுத்த புகார்களின் பேரில் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்வது, அரசு மருத்துவரை பணி செய்யாமல் தடுத்தது, உள்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணி, நந்தகுமார் ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

    • 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தாங்கள் வந்த வாகனத்தில் கடத்தி சென்றனர்.
    • ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூர்,

    ஓசூர் தாலுகா புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஓசூர் ராம் நகரில் உள்ள அவரது உறவினர்கள் கிரி மற்றும் கார்த்திக் ஆகியோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி, தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். ஓசூரில் ராயக்கோட்டை கூட்டு ரோடு அமீரியா பெட்ரோல் பங்க் அருகில் சென்ற அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தாங்கள் வந்த வாகனத்தில் கடத்தி சென்றனர். இந்த நிலையில சீனிவாசன், தனது உறவினர்கள் கிரி, கார்த்திக்கிற்கு செல்போன் மூலம் விவரத்தை கூறி, தன்னை யாரோ 3 பேர் கடத்தி உள்ளனர். பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

    இதன் பிறகு சிறிது நேரத்தில், சீனிவாசன் தனது மகள் சந்தியாவிற்கு வாட்ஸ் அப்பில் தன்னை ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடத்தி செல்வதாகவும், தன்னை காப்பாற்றும் படியும் ஆட்டோ வாய்சில் மெசேஜ் செய்து அனுப்பினார். சீனிவாசனுக்கும், சப்படியை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. அவர் கூலிப்படையை ஏவி, சீனிவாசனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனிவாசன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெட்ரோல் பங்க் அருகில் அவரது மோட்டார்சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரை கடத்தியவர்கள் யார்? கள்ளக்காதல் விவகாரம் காரணமா? அல்லது வேறு எதுவுமா என்று ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பென்னங்கூர் சம்பத் (35), ஏழுமலையான்தொட்டி கோவிந்தன் (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது குள்ளன்கொட்டாய் . இந்த ஊரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 75). இவர் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதாக கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது நிலத்தில் சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா செடி இருந்தது தெரிய வந்தது-இதையடுத்து போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதே போல கஞ்சா செடிகளை பயிரிட்ட பென்னங்கூர் சம்பத் (35), ஏழுமலையான்தொட்டி கோவிந்தன் (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இதே போல மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்ற பாலதொட்டனப்பள்ளி பூஞ்சோலை (45), பருவீதி மனோகரன் (50), வேடியப்பன் (50), ஜெகதேவி தேவபிரதாசா (49), கோவிந்தன் (50), நாயக்கனூர் குமரேசன் (70) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    ×