என் மலர்
கிருஷ்ணகிரி
- கடந்த 20-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
- காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்க சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் குமார் (வயது21). இவர் பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் ஓசூர் தனியார் கார்மென்சில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 15-ம் தேதி வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காரிமங்கலம் அருகே உள்ள மல்லி குட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 20-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரு குடும்பத்தினரும் உறவினர்களாக இருந்த நிலையில் திருப்பதிக்கு சொந்தமான நாய் ராஜேந்திரன் ஆட்டை கடித்துள்ளது.
- இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டையாளும், கையாலும் தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சாமபந்தமலை பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது34).அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40),
இரு குடும்பத்தினரும் உறவினர்களாக இருந்த நிலையில் திருப்பதிக்கு சொந்தமான நாய் ராஜேந்திரன் ஆட்டை கடித்துள்ளது. இதனை அடுத்து இரு தரப்பும் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டையாளும், கையாலும் தாக்கியதில் இரு குடும்பத்தினரும் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கிருந்து இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும், விமலா, திருப்பதி, மஞ்சு 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 475 கிலோ பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
- போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து பிரேம்ராமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 475 கிலோ பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்ராம் (வயது 24) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து பிரேம்ராமை கைது செய்தனர்.
- பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள குருபரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவரது மகன் நவீன் (வயது26).
இந்நிலையில் தனது நிலத்தை விற்று ரூ. 23 லட்சத்தை தன் மகனிடம் கொடுத்துள்ளார். பின்பு கடந்த 13-ம் தேதி பணம் கேட்டுள்ளார்.
அப்பொழுது அவர் அந்தப் பணத்தை தவுஷிக்கிடம் கொடுத்துவிட்டேன் பின்னர் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதே நாளில் நவீன் வீட்டுக்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும கிடைக்கவில்லை.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஓசூர் உழவர் சந்தையில் ரூ.10 க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திர பயன்பாட்டை மேயர் சத்யா தொடங்கிவைத்தார்.
- வரையப்பட்ட மீண்டும் மஞ்சப்பை ஓவியங்களை பார்வையிட்ட மேயர், அவர்களுடன் இணைந்து ஓவியங்களை வரைந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தினந்தோறும் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுவதால் அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ள "மீண்டும் மஞ்சப்பை" என்ற திட்டத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் மஞ்சப்பையை பயன்படுத்தவும்
இலவசமாக மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ராமநாயக்கன் ஏரிக்கரை பூங்கா ஆகிய இடங்களில் மாநகராட்சி மேயர் சத்யா, கமிஷனர் சினேகா ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை வழங்கினர்.
மேலும் ஓசூர் உழவர் சந்தையில் ரூ.10 க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திர பயன்பாட்டை மேயர் சத்யா தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து,அவரது தலைமையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தூய்மை உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் வரையப்பட்ட மீண்டும் மஞ்சப்பை ஓவியங்களை பார்வையிட்ட மேயர், அவர்களுடன் இணைந்து ஓவியங்களை வரைந்தார்.
இதில், சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கராஜன், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் கலந்துகொண்டனர்.
- தெலுங்கு வருடப் பிறப்பான இன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி உண்டு மகிழ்ந்தனர்.
- இனிப்பு பலாகாரம் இந்த பண்டிகையில் சிறப்பு படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தெலுங்கு, கன்னடம், மராத்தி மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக யுகாதி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.
இந்நாளில்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாக ஐதீகம். எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்வது நல்லது என நம்பப்படுகிறது.
மேலும் வசந்தகாலத்தின் பிறப்பை குறிப்பதால் இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வகையில் இன்று தெலுங்கு, கன்னடம், மராத்தி, கொங்கணி மொழி பேசும் மக்கள் யுகாதி என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடினர்.
தெலுங்கு வருடப் பிறப்பான இன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி உண்டு மகிழ்ந்தனர்.
புத்தாண்டை பிறப்பை வரவேற்க வீடுகள் தோறும் மாதோரணங்கள், வேப்பிலை தோரணங்கள் கட்டி, வீடுகள்தோறும் வண்ணக் கோலமிட்டு தெருக்கள் தோறும் மா தோரணங்கள் வேப்பிலை தோரணங்கள் கட்டியிருந்தனர்.
ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர். பின்னர் வீடுகளில் முன்னோர்களுக்கு புது ஆடைகளை வைத்து, படையலிட்டு வெல்லத்தினால் செய்யப்பட்ட ஒப்பட்டு என்ற இனிப்பு பலகாரம் செய்து இந்த இனிப்பு பலாகாரம் இந்த பண்டிகையில் சிறப்பு படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர் பேட்டராயசுவாமி கோவில் உட்பட அனைத்து கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம், காரம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஆறு சுவையுடைய யுகாதி பச்சடி செய்யப்படுகிறது.
இதை ஒருவருக்கொருவர் கொடுத்து யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். புதிதாக பிறக்கும் புத்தாண்டு இன்பம், துன்பம் முதலிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை குறிக்கிறது.
திருப்பதியில் கோவில் உற்சவம் அனைத்தும் யுகாதி முதல் துவங்குவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் வழிபாடு நடந்தது பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டு பலன் கூறினர்.
ராமாயணம் சொற்பொழிவு நடந்தது கோவில்கள் தோறும் பக்தி சொற்பொழிவு நடந்தது தேன்கனிக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள கெலமங்கலம், ராயக்கோட்டை, அஞ்செட்டி, தனி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ளதால் மாவட்டத்திலுள்ள தெலுங்கு, கன்னடம், மராத்தி பேசும் மக்கள் தெலுங்கு வருட புத்தாண்டு கோலாகலமாக வரவேற்று ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.
- படிப்படியாக களையப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படும்.
- மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கு ரூ.12 கோடி மதிப்பில் அலுவலகம் அமைக்க அரசுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், கூட்டரங்கில், ஓசூர் முனீஸ்வர் நகர் சர்க்கிளுக்கு, தந்தை பெரியார் சர்க்கிள் என்று பெயர் வைக்க தீர்மானம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் பா.ஜனதா கவுன்சிலர் பார்வதி நாகராஜ், சுயேட்சை உறுப்பினர் மல்லிகா தேவராஜ் ஆகியோர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் சத்யா பதிலளித்து பேசினார். மேலும், "விரிவாக்க பகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன.அவை, படிப்படியாக களையப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படும். ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 அரசு மற்றும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 7000 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் "முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். கூட்டத்தில் பேசிய ஆணையாளர் சினேகா," மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கு ரூ.12 கோடி மதிப்பில் அலுவலகம் அமைக்க அரசுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.38 லட்சம் மதிப்பில், கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு மேயர் சத்யா தலைமை வகித்தார். ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன் இருசக்கர வாகனத்தில் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு சென்றபோது மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 3 பேர் அரிவாளால் ஜெகனை வெட்டி சாய்த்தனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இந்த கொலை குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இது தொடர்பாக போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். கைதான அவரை நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.
- இவர்களின் காதல் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
- ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
இந்த நிலையில் இன்று மதியம் கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் பைக்கில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ஜெகனின் உறவினர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆணவக் கொலையில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது, தனது மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்த நிலையில், தன் மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஜெகனை கொன்றதாக நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
- பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணாபுரம்,
பால் விலையை உயர்த்தக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கம்பைநல்லூர் அருகே உள்ள திப்பம்பட்டி கூட்ரோட்டில் பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.52 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் இந்த விலை உயர்வை தாமதம் இன்றி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை ரோட்டில் ஊற்றி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், செந்தில்குமார், மாநில செயலாளர் சின்னசாமி, டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தருமபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். மேலும் தமிழக விவசாய சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், சிவலிங்கம், ராஜா , நாகராஜ், சுப்பிரமணியன், லோகநாதன், குமார்,யு.பழனி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய நிர்வாகி முனுசாமி நன்றி கூறினார்.
- 3 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது பாக்கியஸ்ரீயுடன் அடிக்கடி லிங்கராஜ் சண்டை போட்டு வந்துள்ளார்.
- உடலை 20 துண்டுகளாக வெட்டி 3 பையில் அடைத்து அதனை ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சன ஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.
சித்தப்பா பூசாரி மகள் பாக்கிய ஸ்ரீ (31). இவரும் அதே பகுதியில் உள்ள சாசாபாலு கிராமத்தை சேர்ந்த சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் படித்த போதிருந்தே காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்த போது, சாதியை காரணம் காட்டி அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்து விட்டனர்.
சங்கரப்பா தளவார் திருமணமாகி 6 மாதத்தில் மனைவியை பிரிந்த பின்னர் தனது கிராமத்திலிருந்து கர்நாடக மாநில எல்லையான ஜிகினி தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்பகுதியில் தனி அறை எடுத்து தங்கிய அவர், தனது முன்னாள் காதலி பாக்கியஸ்ரீயுடன் அவ்வப்போது போனில் பேசி வந்துள்ளார். அவர்களுக்குள் இருந்த நெருக்கம் காரணமாக ஜிகினிக்கு வருமாறு பாக்கியஸ்ரீயை சங்கரப்பா அழைத்துள்ளார்.
அதன்பேரில் அவரும் ஜிகினிக்கு வந்துள்ளார். இருவரும் ஒரே அறையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். மேலும், ஜிகினி தொழிற்பேட்டையில் வெவ்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் பாக்கியஸ்ரீயின் தம்பி லிங்கராஜ் (22), கடந்த 2015ம் ஆண்டு தனது அக்காவை தேடி ஜிகினி பகுதிக்கு வந்துள்ளார். ஜிகினியில் பாக்கியஸ்ரீ, அவரது முன்னாள் காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சங்கரப்பாவிற்கு திருமணம் ஆகிவிட்டதால், அவருடன் இருக்க வேண்டாம் என பாக்யஸ்ரீயை பலமுறை லிங்கராஜ் எச்சரித்துள்ளார். ஆனாலும் பாக்கியஸ்ரீ அதனை கேட்கவில்லை. இதனையடுத்து 3 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது பாக்கியஸ்ரீயுடன் அடிக்கடி லிங்கராஜ் சண்டை போட்டு வந்துள்ளார்.
தங்களது உறவுக்கு லிங்கராஜ் இடையூறாக இருப்பதாக கருதிய பாக்கியஸ்ரீ, சங்கரப்பாவுடன் சேர்ந்து லிங்கராஜை அடித்து கொலை செய்து, அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி 3 பையில் அடைத்து அதனை ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சன ஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர்.
பின்னர் பாக்கியஸ்ரீயும், சங்கரப்பாவும் ஜிகினியில் இருந்து தப்பி, மகராஷ்டிரா மாநிலம், நாசிக்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று பாக்கியஸ்ரீ (39), மற்றும் சங்கரப்பா (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
- “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
- மருந்து,மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு மேயர் சத்யா வழங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்ட பள்ளியில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
மூக்கண்டபள்ளியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார்.
முகாமில், ஊட்டச்சத்து பொருட்கள், மருந்து,மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு மேயர் சத்யா வழங்கி, முகாமில் பேசினார். மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் பேசினர். முகாமில், , மாநகராட்சி மண்டல தலைவர்கள்,பொது சுகாதாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களும், அரசு மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.






