search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் வீசிய சூறை காற்றில் சேதமான தேசிய கொடியை நிபுணர்கள் குழு ஆய்வு
    X

    கன்னியாகுமரியில் வீசிய சூறை காற்றில் சேதமான தேசிய கொடியை நிபுணர்கள் குழு ஆய்வு

    • இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் வடிவமைக்க ஏற்பாடு
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் எம்.பி. விஜயகுமார் வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியா குமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு எம்.பி. விஜயகுமார் தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்துரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், விஜயகு மார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த தேசிய கொடிக்கம்பத்தை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிமோட் மூலம் ஏற்றினார். இந்தநிலையில் கன்னியாகுமரி பகுதியில் நேற்று வீசிய பயங்கர சூறாவளி காற்றினால் ஒரே நாளில் இந்த கொடி சேதம் அடைந்தது. சூறைக்காற்றில் இந்த தேசியக்கொடி சேதமடைந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொடியின் அடிப்பகுதியில் உள்ள பச்சை நிற பகுதியில் பச்சை நிற பகுதிசேதமடைந்து கொடிய கிழிய தொடங்கி உள்ளது. அதேபோல் மேல் புறமும் லேசாக சேதம் அடைய தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கொடியை நிர்மாணிக்க காண்ட்ராக்ட் பெற்ற நிறுவன அலுவலர்களும் இதனை சரி செய்வதற்காக விரைந்துவந்தனர். அவர்கள் சேதமடைந்த அந்த தேசிய கொடியை கீழே இறக்கினர். இதனால் தற்போது 150 அடி உயரது கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளிக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் வீசும் சூறைக்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு ஏற்றவாறு எந்த மாதிரியான தேசிய கொடியை தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழு கன்னியாகுமரிக்கு வருகைதரஉள்ளது.

    இந்த குழு வந்து ஆய்வு செய்த பின்னரே அடுத்த தேசியக்கொடி ஏற்றப்படும் என்று தெரிகிறது. இதற்கு சிலநாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறப்பதை பார்க்க கன்னியாகுமரிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    Next Story
    ×