search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.திருட்டில் ஈடுபட்டது குமரியை சேர்ந்த கொள்ளையரா?
    X

    நாகர்கோவிலில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.திருட்டில் ஈடுபட்டது குமரியை சேர்ந்த கொள்ளையரா?

    • கார் பதிவு எண்ணை கைப்பற்றி விடிய, விடிய சோதனை
    • ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது.இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.

    மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா? போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய் யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×