என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஊதிய உயர்வு, பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டு அனகாபுத்தூர் நகராட்சியில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அனகாபுத்தூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 120 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு 5,800 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தற்போது புதிய ஒப்பந்ததாரர்கள் ரூ.5300 ஊதியமாக கொடுத்தார்கள்.

    துப்புரவு தொழிலாளர்கள் எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த 120 துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை பணிகளை புறக்கணித்து விட்டு அனகாபுத்தூர் நகராட்சியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் சங்கர்நகர் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மது விலக்கு கொண்டு வர முடியாது. இதனை கூற அவர்களுக்கு தகுதி இல்லை என்று பா.ஜனதா தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் இன்று காலை காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:–

    தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மது விலக்கு கொண்டு வர முடியாது. இதனை கூற அவர்களுக்கு தகுதி இல்லை. இது ஏமாற்று வேலை.

    மது ஆலை உரிமையா ளர்களுக்கும் திராவிட கட்சி களுக்கும் தொடர்பு உள்ளது.

    வருகிற 15 அல்லது 16–ந்தேதி அன்று பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

    இதில் விவசாயம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முக்கிய அம்சமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி கொடுக்கப்படும் என இலங்கை மந்திரி கூறினார்.
    ஆலந்தூர்:

    இலங்கை சிறைத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை மந்திரி சாமிநாதன், கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைக்கு வந்து தவறு செய்து உள்ளனர். இதனால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தற்போது சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நான் மீனவர்களை கடந்த 3 மாதங்களுக்கு முன் சந்தித்து பேசினேன். அப்போது அவர்கள், 2 ஆண்டுகளுக்குள் வேறு தொழில் செய்ய போவதாக தெரிவித்தனர்.

    இப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி கொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகள் நன்றாக நடந்து கொண்டு வருகிறது. 3,500 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுத்து உள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக 6 மாத காலத்தில் 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு இலங்கையில் 32 முகாம்களில் உள்ள மக்களையும் விடுவித்து அவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும்.

    இந்தியாவில் 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் சிலர் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேவையானதை செய்வோம். 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள தமிழர்கள் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கையில் ராணுவத்திடம் உள்ள இடங்கள் குறித்து எங்களுடைய ஜனாதிபதி பேசி உள்ளார். ஜூன் மாதத்துக்கு பின்னர் இலங்கை ராணுவத்துக்கு தேவையான இடங்கள் போக மீதம் உள்ள இடங்கள் திருப்பி வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    இலங்கையில் முஸ்லிம் உள்பட சிறுபான்மை மீது எந்த வித தாக்குதல்களும் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேல்மருவத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரை அடுத்த பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பலியானவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 40 வயது இருக்கும்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்ட மதுராந்தகம் அருகேயுள்ள மாமண்டூரில் தே.மு.தி.க. கூட்டணி மாநாடு 6 தலைவர்கள், இன்று ஒரே மேடையில் பிரசாரம்

    சென்னை:

    தே.மு.தி.க.– மக்கள் நலக் கூட்டணியில் தற்போது த.மா.கா. இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க. 104 தொகுதியிலும், ம.தி.மு.க. 29 தொகுதியிலும், த.மா.கா. 26 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் இன்று மாலை காஞ்சீபுரம் மாவட்ட மதுராந்தகம் அருகேயுள்ள மாமண்டூரில் தே.மு.தி.க. கூட்டணி மாநாடு நடக்கிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க. கூட்டணியில் உள்ள 6 கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் இன்று காலை முதலே வரத் தொடங்கினர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட் டுள்ளது.

    இந்த மாநாட்டில் தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகிய 6 தலைவர்களும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.

    இந்த மாநாட்டில் தே.மு.தி.க.வினர் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலரை கடத்த முயன்றவர் கைது

    தாம்பரம்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை இலங்கைக்கு செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. விமான பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஜாப்பர் அலி (50) என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கை செல்வது தெரியவந்தது.

    அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரிய வந்தது. இந்திய மதிப்பில் ரூ.4½ லட்சம் ஆகும். அவரிடம் இருந்து அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவர்களிடம் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருபவர்கள் மோகன், பவன்குமார்.

    இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் தைலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம வாலிபர்கள் அங்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென மாணவர்கள் மோகன், பவன்குமாரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி மாணவர்கள் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன என கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1400 போலீசார் உள்ளிட்ட 31,645 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தற்போது 100 சதவீத வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பணியில் மாவட்ட நிர்வாகம் பல வகைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவாகவில்லை. எனவே நடப்பு தேர்தலில் இந்நிலை ஏற்படாமல் இருக்க மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி முழுவீச்சில் பணியாற்றுகிறார்.

    தபால் பெட்டிகள், தபால் ஓட்டிற்கான விண்ணப்பங்கள் வழங்குதல் என மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் சுறுசுறுப்படைந்தள்ளன. இதனால் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத தபால் வாக்குகள் இம்முறை பதிவாகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காஞ்சீபுரத்தில் பட்டுச்சேலை தயார் செய்ய கைத்தறித் துறை கட்டுப்பாடு விதித்துள்ளதால் நெசவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 22 பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் இயங்கிவரும் நிலையில் 10-க்கும் குறைவான சங்கங்களில் மட்டுமே விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையினர் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் முருகன் மற்றும் அண்ணா கூட்டுறவு சங்கங்களில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் மட்டுமே நெய்ய வேண்டுமெனவும், காமாட்சியம்மன் மற்றும் திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்கங்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட சேலைகளை தயார் செய்ய வேண்டுமெனவும் காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்கம் மற்றும் கலைஞர் கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவை 10 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட சேலைகளை தயார் செய்ய வேண்டுமெனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இது நெசவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:–

    ஒரு காலத்தில் பட்டு சேலை விற்பனை எல்லா சங்கங்களிலும் மிக அதிகளவில் இருந்தது. ஒரு நெசவாளி மாதத்திற்கு 3 சேலைகள் வரை நெய்து வருமானம் ஈட்டினர். தற்போது தனியார் விற்பனை நிலையங்கள் அதிகளவில் வந்துவிட்டன. கூட்டுறவு சங்கங்களின் விற்பனையும் குறைந்து நெசவு தொழில் நலிவடைய ஆரம்பித்தது.

    மேலும் போலி பட்டுகளின் புழக்கம் மற்றும் விற்பனையாலும் நெசவு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தரமான காஞ்சிபுரம் பட்டு மற்றும் தூய ஜரிகை போன்றவற்றை நம்பியே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு சேலை வாங்க மக்கள் வருகின்றனர். உண்மையான காஞ்சி பட்டின் குறைந்தபட்ச விலை ரூபாய் 6 ஆயிரமாக உள்ளது. சேலை எடுக்க வருபவர்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விலை மற்றும் டிசைன்கள் மீது ஆர்வம் கொண்டு அதிக எண்ணிக்கையில் சேலை வாங்குகின்றனர்.

    இந்நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் ஒரு சில கூட்டுறவு சங்கங்களிலேயே அதிக விற்பனை நடைபெறுகிறது. இந்த சங்கங்களில் குறிப்பிட்ட விலையுள்ள சேலைகளை தான் உற்பத்தி செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிப்பது அந்த சங்கங்களையும் நலிவடையச் செய்யும்.

    குறிப்பிட்ட சங்கங்களில் குறைந்த விலையுள்ள ரகங்களை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு பணி வழங்கமுடியாத நிலை உருவாகும்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் இந்த உத்தரவு தனியார் பட்டு விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பலனளிக்கும்.
    காஞ்சீபுரம் அருகே ஆட்டோவில் கடத்திய 30 மூட்டை புகையிலை பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாசில்தார் கற்பகம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையில் இருந்து வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிந்தது.

    மொத்தம் 30 மூட்டைகளில் புகையிலை இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆட்டோவில் இருந்த டிரைவரை பிடித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

    புகையிலை எங்கிருந்து யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

    தாம்பரம் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 கடைகள் எரிந்து சாம்பலானது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் சண்முகம் சாலை மிகமுக்கிய வர்த்தக பகுதியாகும். இந்த சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று மதியம் 2 மணி அளவில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான ரோஜா ஸ்டோர்ஸ் என்ற கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

    சிறிதுநேரத்திலேயே தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. இதில் கடையில் வேலைபார்த்த ஊழியர்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர். பின்னர் தீ அருகில் உள்ள பாத்திரக்கடை, துணிக்கடை, காபி கடை உள்பட 8 கடைகளுக்கு பரவியது. தீ வேகமாக பரவியதால் மார்க்கெட் பகுதியில் இருந்தவர்கள் கடைகளை மூடிவிட்டு வெளியேறினர்.

    தீ எரிந்தபோது எழுந்த கரும்புகை மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. இதில் அந்த பகுதியில் வீடுகளில் இருந்தவர்களும், கடைக்காரர்களும் புகைமூட்டம் தாங்காமல் அப்பகுதிகளில் இருந்து வெளியேறினர்.

    தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் நகராட்சி குடிநீர் லாரிகள், தனியார் குடிநீர் லாரிகளை சம்பவ இடத்திற்கு உடனடியாக கொண்டுவந்து பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மார்க்கெட் பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தாலும், இரவு வரை புகைந்து கொண்டே இருந்தது. தீயை கட்டுப்படுத்த ‘ஸ்கை லிப்ட்’ என்ற அதிநவீன தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    தீவிபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்தில் மார்க்கெட் பகுதியில் இருந்த 8 கடைகள், பல கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. சாலையோரத்தில் இருந்த பல சிறிய கடைகளில் இருந்த பொருட்களும் சேதமானது.

    அந்த பகுதியில் இதுபோன்ற அசம்பாவித நேரங்களில் உடனடியாக தீயணைப்பு வாகனங்களை கொண்டுவர முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

    தீயை அணைக்கும் பணியின்போது த.மு.மு.க.வை சேர்ந்த சதாம்உசேன் என்பவர் தலையில் கடையின் ஷட்டர் விழுந்து காயம் அடைந்தார்.

    தீவிபத்து நடந்த பகுதியை தாம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சின்னையா, அனகை முருகேசன், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன், நகர காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப் உள்பட அனைத்து கட்சியினரும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினர்.
    செங்கல்பட்டு அருகே சிக்னல் வயரில் பழுது ஏற்பட்டதால் சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக வந்தன.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த கொளவாய் ஏரி அருகே தண்டவாளத்தில் உள்ள சிக்னல் வயரில் பழுது ஏற்பட்டு இருந்தது. இதனால் ரெயில்கள் செல்ல சிக்னல் விழவில்லை.

    அந்த நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. உடனடியாக அந்த ரெயில், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    இதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில்களும் இயக்கப்படவில்லை.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது சிக்னல் வயர் எரிந்து இருந்தது. உடனடியாக சிக்னல் வயரை சரி செய்தனர். பின்னர் சுமார் ½ மணி நேரம் தாமதமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டது.

    மின்சார ரெயில்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிஅடைந்தனர்.

    ரெயில்கள் வேகமாக சென்ற போது ஏற்பட்ட உராய்வில் சிக்னல் மின்வயர் எரிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.
    ×