என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் பட்டுச்சேலை தயார் செய்ய கைத்தறித் துறை கட்டுப்பாடு: நெசவாளர்கள் அதிருப்தி
    X

    காஞ்சீபுரத்தில் பட்டுச்சேலை தயார் செய்ய கைத்தறித் துறை கட்டுப்பாடு: நெசவாளர்கள் அதிருப்தி

    காஞ்சீபுரத்தில் பட்டுச்சேலை தயார் செய்ய கைத்தறித் துறை கட்டுப்பாடு விதித்துள்ளதால் நெசவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 22 பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் இயங்கிவரும் நிலையில் 10-க்கும் குறைவான சங்கங்களில் மட்டுமே விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையினர் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் முருகன் மற்றும் அண்ணா கூட்டுறவு சங்கங்களில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் மட்டுமே நெய்ய வேண்டுமெனவும், காமாட்சியம்மன் மற்றும் திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்கங்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட சேலைகளை தயார் செய்ய வேண்டுமெனவும் காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்கம் மற்றும் கலைஞர் கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவை 10 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட சேலைகளை தயார் செய்ய வேண்டுமெனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இது நெசவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:–

    ஒரு காலத்தில் பட்டு சேலை விற்பனை எல்லா சங்கங்களிலும் மிக அதிகளவில் இருந்தது. ஒரு நெசவாளி மாதத்திற்கு 3 சேலைகள் வரை நெய்து வருமானம் ஈட்டினர். தற்போது தனியார் விற்பனை நிலையங்கள் அதிகளவில் வந்துவிட்டன. கூட்டுறவு சங்கங்களின் விற்பனையும் குறைந்து நெசவு தொழில் நலிவடைய ஆரம்பித்தது.

    மேலும் போலி பட்டுகளின் புழக்கம் மற்றும் விற்பனையாலும் நெசவு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தரமான காஞ்சிபுரம் பட்டு மற்றும் தூய ஜரிகை போன்றவற்றை நம்பியே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு சேலை வாங்க மக்கள் வருகின்றனர். உண்மையான காஞ்சி பட்டின் குறைந்தபட்ச விலை ரூபாய் 6 ஆயிரமாக உள்ளது. சேலை எடுக்க வருபவர்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விலை மற்றும் டிசைன்கள் மீது ஆர்வம் கொண்டு அதிக எண்ணிக்கையில் சேலை வாங்குகின்றனர்.

    இந்நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் ஒரு சில கூட்டுறவு சங்கங்களிலேயே அதிக விற்பனை நடைபெறுகிறது. இந்த சங்கங்களில் குறிப்பிட்ட விலையுள்ள சேலைகளை தான் உற்பத்தி செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிப்பது அந்த சங்கங்களையும் நலிவடையச் செய்யும்.

    குறிப்பிட்ட சங்கங்களில் குறைந்த விலையுள்ள ரகங்களை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு பணி வழங்கமுடியாத நிலை உருவாகும்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் இந்த உத்தரவு தனியார் பட்டு விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பலனளிக்கும்.
    Next Story
    ×