என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் திருப்பி கொடுக்கப்படும்: இலங்கை மந்திரி பேட்டி
    X

    பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் திருப்பி கொடுக்கப்படும்: இலங்கை மந்திரி பேட்டி

    தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி கொடுக்கப்படும் என இலங்கை மந்திரி கூறினார்.
    ஆலந்தூர்:

    இலங்கை சிறைத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை மந்திரி சாமிநாதன், கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைக்கு வந்து தவறு செய்து உள்ளனர். இதனால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தற்போது சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நான் மீனவர்களை கடந்த 3 மாதங்களுக்கு முன் சந்தித்து பேசினேன். அப்போது அவர்கள், 2 ஆண்டுகளுக்குள் வேறு தொழில் செய்ய போவதாக தெரிவித்தனர்.

    இப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய-இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி கொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகள் நன்றாக நடந்து கொண்டு வருகிறது. 3,500 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுத்து உள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக 6 மாத காலத்தில் 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு இலங்கையில் 32 முகாம்களில் உள்ள மக்களையும் விடுவித்து அவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும்.

    இந்தியாவில் 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் சிலர் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேவையானதை செய்வோம். 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள தமிழர்கள் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கையில் ராணுவத்திடம் உள்ள இடங்கள் குறித்து எங்களுடைய ஜனாதிபதி பேசி உள்ளார். ஜூன் மாதத்துக்கு பின்னர் இலங்கை ராணுவத்துக்கு தேவையான இடங்கள் போக மீதம் உள்ள இடங்கள் திருப்பி வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    இலங்கையில் முஸ்லிம் உள்பட சிறுபான்மை மீது எந்த வித தாக்குதல்களும் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×