என் மலர்
காஞ்சிபுரம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயா பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சாய்சூர்யா (வயது 50). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சுதாமணி (42). இவர்களது ஒரே மகன் தனுஷ் (25). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் சேலம் வந்தனர். காரை பெங்களூரை சேர்ந்த சிவானந்தா (31) என்பவர் ஓட்டினார்.
சேலத்தில் சாய்சூர்யா வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து விட்டு நேற்று காரில் கும்பகோணம் புறப்பட்டார். மாலை 4¼ மணிக்கு வழியில் கார் ஆத்தூர் அருகே முல்லைவாடி சந்திரகிரி புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த டிப்பர் லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சாய்சூர்யா, அவரது மனைவி சுதாமணி, மகன் தனுஷ் மற்றும் டிரைவர் சிவானந்தா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், காரில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான தேனிமாவட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம், கிரி அவென்யூவில் வசித்து வருபவர் மீனாட்சிசுந்தரம், தாம்பரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 19-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரைக்கு சென்றார். பின்னர் இன்று காலை திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
மீனாட்சிசுந்தரம் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி இந்த அளவுக்கு தோல்வியை பெறும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் சென்னை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பா.ஜனதாவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. பா.ஜனதாவில் மிஸ்டுகால் மூலம் 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 12 லட்சம் பேரே பா.ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர்.
காங்கிரசை தி.மு.க. கூட்டணியில் சேர்த்தது பிடிக்காததால் நாங்கள் சேர்த்த மிஸ்டுகால் உறுப் பினர்கள் காங்கிரசை தோற்கடிக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களித்திருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறேன்.
மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து வகை யான ஒத்துழைப்பையும் அளிக்கும். முதல்வராக பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து 178 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை விமானம் ஒன்று அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது.
அந்தமானை சென்றடைந்ததும் விமானம் தரை இறங்க முயன்றது. ஆனால் அங்கு பலத்த மழை பெய்ததால், விமானம் தரை இறங்க முடியவில்லை. இதனையடுத்து விமானத்தை தரை இறக்க அந்தமான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
இதனால் அந்தமானில் இருந்து சென்னைக்கு விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. சென்னைக்கு நேற்று விமானம் வந்ததும், அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இன்று விமானம் மூலமாக அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
அச்சரப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட சுற்றுப்புற விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை சிலாவட்டத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அச்சரப்பாக்கத்தை அடுத்த திம்மாவரம் ஊராட்சி பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுக்கும் அதே விலைக்கே வியாபாரிகள் சிலர் நெல் மூட்டைகள் வாங்கினர். இதனால் பயண தூரம், வாடகையை கணக்கிட்டு விவசாயிகள் கடந்த சில மாதங்களாக அவர்களிடமே நெல் விற்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 3லாரிகளுடன்வியாபாரிகள் சிலர் திம்மா வரம் கிராமத்திற்கு நெல் கொள்முதல் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய எடை எந்திரத்தை விவசாயிகள் சோதனை செய்த போது அதனை திருத்தி மாற்றி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் மூலம் ஒரு மூட்டைக்கு சுமார் 25 கிலோ வரை கூடுதலாக நெல் கொள்முதல் செய்திருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய வந்த 3 லாரிகளை சிறை பிடித்தனர். உடனே அங்கிருந்த வியாபாரிகள் தப்பி சென்று விட்டனர்.
ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கணக்கிட்டு உரிய பணத்தை வழங்க வேண்டும். வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விவாசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மடிப்பாக்கம் ஷீலா நகரில் உள்ள சுடுகாடு, குடியிருப்பு பகுதியில் உள்ளதால் அதை செயல்படுத்தக் கூடாது என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் ஷீலாநகரில் உள்ள சுடுகாட்டை செயல்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து சுடுகாட்டுக்கு சீல் வைக்கப்பட்டு கோர்ட்டு உத்தரவை போர்டில் ஒட்டி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் மடிப்பாக்கத்தை சேர்ந்த வத்சலா (84) என்ற மூதாட்டி இறந்தார். அவரது உடலை எரிக்க மடிப்பாக்கம் ஷீலாநகர் சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர்.
சுடுகாட்டு கதவு பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்தனர். அவர்களை தடுத்த போலீஸ்காரரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அதையும் மீறி சுடுகாட்டுக்குள் சென்று வத்சலா உடலை எரித்தனர்.
இதுகுறித்து 14-வது மண்டல இளநிலை பொறியாளர் பாலாஜி, மடிப்பாக்கம் போலீசில் வழக்குப்பதிவு செய்து வத்சலாவின் மகன் ரமேஷ், உறவினர்கள் ஆனந்தன், ஹேமசந்திரசேகர், ஸ்ரீதர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தாம்பரம்:
சிட்லப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். மெக்கானிக் கடந்த மாதம் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆலப்பன் என்பவருக்கும் மொட்டை மாடியில் படுக்க இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இருவரும் மாறி மாறி உருட்டுகட்டையால் தாக்கி கொண்டனர். படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆலப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிட்லப்பாக்கம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.
படுகாயமடைந்த வெங்கடேசனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் உடல்நிலை தேறிய வெங்கடேசன் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தாம்பரம் பகுதியில் சுற்றி திரிந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ஆலந்தூர்:
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் வந்தது. அதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷீபா மித்ரா (64) என்ப வர் தனது மகன் ஷர்பர் பிரசாத்துடன் வந்தார்.
நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினைக்கு வேலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்த ஷீபா மித்ரா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை விமான நிலைய டாக்டர்கள் பரிசோதித்ததில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 47 பள்ளிக்கூடங்களின் வாகனங்கள் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 160 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விட்டன. இன்று மேலும் 160 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 354 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.) பாஸ்கர் தெரிவித்தார்.
பள்ளிக்கூட வாகனங்களில் சாய்வுதள படிக்கட்டு, அவசர வழி, தீயணைப்பு கருவிகள், முதல் உதவி பெட்டி, மருந்துகள், இருக்கைகளின் வசதிகள், இருக்கைகளின் கீழ் உள்ள தரைதளம், பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவி ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா? என்று அவர்கள் சோதனை செய்தனர்.
இந்த ஆய்வில் ஆர்.டி.ஓ. பாஸ்கர் தலைமையில் மோட்டார் வாகன சூப்பிரண்டு துரை, அமிதாபானு மற்றும் வருவாய் அதிகாரிகள், போக்குவரத்து பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.
பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நசிர் அகமது. லெதர் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
கடந்த 16–ந்தேதி குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து பல்லாவரம் போலீசில் நசிர்அகமது புகார் செய்தார். மர்ம நபர்கள் கள்ளச்சாவி மூலம் வீடு கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.






