என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் வருவாய் துறை அலுவலர்களால் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் இடங்கள், மற்றும் நாட்கள் குறித்த விவரம் வருமாறு:-
வாலாஜாபாத் - 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை.
காஞ்சீபுரம்- 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை.
ஸ்ரீபெரும்புதூர்- 1ம் தேதி முதல் 14-ந் தேதிவரை.
செங்கல்பட்டு - 1-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை.
ஆலந்தூர் - 1 மற்றும் 2-ந் தேதி.
மதுராந்தகம் - 1-ந் தேதிமுதல் 17-ந் தேதி.
சோழிங்கநல்லூர் - 1 மற்றும் 2-ந் தேதி.
பல்லாவரம் - 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை.
தாம்பரம் - 1 மற்றும் 2-ந் தேதி.
திருப்போரூர் - 1-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை.
திருக்கழுக்குன்றம் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.
உத்திரமேரூர் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.
செய்யூர் - 1-ந் தேதி முதல் 16-ந் தேதிவரை.
இதில் பொதுமக்கள் பட்டா மாற்றுதல், மற்றும் இதர குறைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம்.
திருவான்மியூர்:
குரோம்பேட்டையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் விஜயபார்த்தீபன் (வயது 15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை நண்பர்கள் 9 பேருடன் நீலாங்கரை கடலில் குளித்தார்.
அப்போது விஜய் பார்த்தீபன் கடலில் மூழ்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முடிய வில்லை. இன்று 2–வது நாளாக தேடும் பணி நடந்தது. இன்று காலை மெரீனா கடற்கரையில் விஜய பார்த்தீபன் பிணம் கரை ஒதுங்கியது.
தாம்பரம்:
சேலையூர் அடுத்த மப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரோசாரியா (27). கடந்த 4 ஆண்டுக்கு முன் இவரைவிட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். மது பழக்கத்துக்கு அடிமையான ஜான் ரோசாரியா போதையில் ரோட்டில் திரிவார்.
நேற்று இரவு தாம்பரம் மேம்பாலத்தில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படவேண்டி உள்ளது. மாநில அரசுகளின் விருப்பங்களை கவனத்தில் கொள்ளப்படும். வரும் ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
குளச்சல் துறைமுகம் உறுதியாக கொண்டு வரப்படும். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மட்டுமின்றி தமிழகம், இந்தியாவின் வளர்ச்சிக்கு குளச்சல் துறைமுகம் பயன்படும். இந்த துறைமுகத்தை எதிர்க்க சிலரை தவறாக வழிநடத்துகின்றனர். இது பற்றி முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. அதன் முடிவில் யார் பாதிக்கப்படுகிறார்கள்? என்பது தெரியவரும்.
பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அது தற்போது நடந்து வருகிறது. கர்நாடக மாநில தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அகில இந்திய அளவிலான கட்சி அங்கீகாரத்தை காங்கிரஸ் இழக்கும்.
உண்மையான விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரும் போது ஆதாயம் பெறும் வகையில் இடைத்தரகர்கள் ஈடுபடுவது இயற்கை. இதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநின்றவூர், கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜெயா மெட்ரிக்பள்ளி மாணவி சுவேதா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்தார். அவர் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ் - 99
ஆங்கிலம் - 98
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூகஅறிவியல் - 100
சாதனை படைத்த மாணவி சுவேதாவை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர் அவரது பெற்றோர் தேசிகன் - பிரியா, திருநின்றவூர் தாசர்தெருவில் வசித்து வருகிறார்கள்.
தேசிகன் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரது மற்றொரு மகன் அஸ்வின் அதே பள்ளியில் 11-ம் வகுப்பும், மகள் ஹரிதா யூ.கே.ஜி-ம் படித்து வருகிறார்கள்.
சாதனை படைத்தது குறித்து சுவேதா கூறும்போது, ‘மாநில அளவில் 3-வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி. கம்யூட்டர் என்ஜினியர் ஆக எனக்கு ஆசை’ என்றார்.
காஞ்சீபுரம்:
கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கரா வித்யா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி வைஷாலி மாநில அளவில் 2–ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் 500–க்கும் 498 மதிப்பெண் எடுத்தார்.
மேலும் அவர் காஞ்சீபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் மாநில அளவில் 3–ம் இடம் பிடித்தனர். ஸ்ரீபெரும்புதூர் விவேகானந்தா மெரிக்பள்ளி மாணவர் கே.சூரிய மோகன், கொட்டிவாக்கம் செயிண்ட் அந்தோணி மெட்ரிக் பள்ளி மாணவி தமிழ் இலக்கியா, காஞ்சீபுரம் செவிலிமேடு சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவி உமா மகேஸ்வரி ஆகியோர் 497 மதிப்பெண் பெற்றார்.
இவர்கள் 3 பேரும் மாவட்ட அளவில் 2–ம் இடம் பிடித்து உள்ளனர்.
காஞ்சீபுரம் கல்வி மாவட்டத்தில் 496 மதிப்பெண் எடுத்து 3–வது இடத்தை 8 பேர் பிடித்தனர்.
மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி, மேடவாக்கம் ஜான் மெட்ரிக் பள்ளி மாணவர் அரவிந்த் பிரபு, காஞ்சீபுரம் ஒரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவி எழில்மதி, கீழ்க்கட்டளை ஹோலி மெட்ரிக் பள்ளி மாணவி ஜன்சி ஜெபமலர்.
மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் கிரிஷ் சீனிவாஸ், கூடுவாஞ்சேரி செயிண்ட் ஜான் மெட்ரிக் பள்ளி மாணவி மதுமிதா, குரோம்பேட்டை எஸ்.வி.எஸ்.வீ மெட்ரிக் பள்ளி மாணவி சாந்தி, மடிப்பாக்கம் சாய் மெட்ரிக் பள்ளி மாணவி வர்த்தினி ஆகிய 8 பேர் மாவட்ட அளவில் 3–ம் இடம் பிடித்தனர்.
காஞசீபுரம் மாவட்ட தேர்ச்சி சதவீதம் 92.77 ஆகும். கடந்த ஆண்டு 92.79 சதவீதமாக இருந்தது.
மேல்மருவத்தூரை அடுத்த கிளியாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 47). கல்குவாரி நடத்தி வந்தார். அங்கு கொத்தடிமைகளாக பலர் வேலை செய்வதாக மதுராந்தகம் ஆர்.டி.ஓ. பர்கத் பேகத்திற்கு ரகசிய தகவல் கிடத்தது. அவர் அந்த கல்குவாரிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் குமார் (16), கணேசன் (6), வேலு (4), மகள் ஜெயந்தி (11) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் வெங்கச்சேரியை சேர்ந்த சாந்தி (35), மகன்கள் சங்கர் (19), சரத் (10), தேன்மொழி (16) ஆகியோர் கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது.
ஆர்.டி.ஓ. பர்கத் பேகம் அவர்களை மீட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்.
ஆலந்தூர்:
பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் ஏ.ஜி.எஸ். காலனியை சேர்ந்தவர் வெங்கடேசுவரன் (32). கம்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அன்வர்சாதிக்கிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் வாங்கி வந்த 2 ‘எமர்ஜென்சி’ விளக்கை உடைத்து சோதனை செய்தனர்.
அதில் 2 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அன்வர் சாதிக்கிடம் விசாரணை நடந்து வருகிறது.
குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த உஷாராணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து 700 கிராம் தங்கம் கடத்தி வந்த தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம்.
தங்கத்தை பறிமுதல் செய்து உஷாராணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு தாம்பரம், கஸ்தூரிபாய் நகர் சிங்காரம் தெருவை சேர்ந்தவர் சூரியன். தாம்பரம் மார்க்கெட்டில் மளிகை கடை வைத்து உள்ளார்.
இவர் தாம்பரம் மேம்பாலம் அருகே உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்தை எடுத்தார். பின்னர் பணத்தை மொபட் இருக்கையின் கீழ் வைத்து வந்து கொண்டு இருந்தார். தாம்பரம் தர்காஸ் சாலையில் உள்ள பிரியாணி கடைக்கு செல்ல வண்டியை நிறுத்தி சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து மொபட்டை திறந்த போது பணத்தை காணவில்லை. பிரியாணி கடை முன்பு மொபட்டை நிறுத்தி இருந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மொபட்பெட்டியை உடைத்து ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து தாம்பரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் தனியார் வீட்டுமனை காலி இடம் உள்ளது. இன்று காலை அங்கு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
கொலையுண்டு கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மஞ்சள் நிற ஜாக்கெட்டும், பச்சை நிற சேலையும் அணிந்து இருந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டு முகத்திலும் பலத்த காயம் இருந்தது. எனவே மர்ம நபர்கள் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்து உள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்யகிஷோர்(வயது 25). இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சத்யகிஷோர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






