என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் பாலாற்று படுகை பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் பாலாற்றுபடுகை பகுதியில் திருட்டு தனமாக மாட்டு வண்டியில் மணல் கடத்திய மலையாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த சுந்தரராஜன், பூபாலன், முனியாண்டி, ரமேஷ், லோகநாதன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்லும் பயணிகள் ஹவாலா பணம் கடத்தி செல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற தயாராக இருந்த பயணிகளின் உடைமைகனை சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்தவரின் சூட்கேசை பார்த்த போது அதில் அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், யூரோ பணம் கட்டு கட்டாக இருந்தது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து முகமது ராசிக்கை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். அவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல இருந்தது தெரிந்தது.
பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தை முணையமாக மாற்றும் பணிகளை தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அனுபம் வர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிழக்கு தாம்பரம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கிழக்கு தாம்பரத்தையும் மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையையும் இணைத்து புதிய சுரங்க நடைபாதை ரூ. 2.8 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதை தற்போது இரண்டு சக்கர மற்றும் இலகு ரக வாகன போக்குவரத்துக்காக பயன்பாட்டில் இருக்கும் சுரங்கப்பாதை அருகில் சுத்தானந்த பாரதி தெருவில் அமைக்கப்பட உள்ளது.
மற்றொரு சுரங்கப்பாதை பெருங்களத்தூரில் பாத சாரிகள் வசதிக்காக ரூ.2.5 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இந்த 2 சுரங்கப்பாதைகளுக்கும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. அடுத்த மாதம் டெண்டர் கோரப்படும். இரு சுரங்கப் பாதைகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்
தாம்பரம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நின்று செல்ல பயன்படுத்தப்படும் 5 மற்றும் 6 மற்றும் 7, 8-வது பிளாட்பாரங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செம்பாக்கம் நகராட்சி கூட்டம் தலைவர் சாந்த குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதல் அமைச்சராக 6-வது முறையாக பொறுப் பேற்ற ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்பட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது கவுன்சிலர் விஜயரங்கன் (தி.மு.க.) நகராட்சி தலைவரிடம் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். அது ஏற்கப்படவில்லை.
இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் விஜயரங்கன், சுரேஷ் உள்பட 9 பேர் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காஞ்சிபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமியின் 91-வது நினைவு தினம் மற்றும் அவரது உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு தியாகி கிருஷ்ணசாமியின் உருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து கிருஷ்ணசாமி உருவபடத்தை குமரி அனந்தன் கையில் ஏந்தியபடி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே நடைபெற்ற விழா மேடையில் இருந்து காஞ்சிபுரம் நகராட்சி வரை ஊர்வலமாக எடுத்து வந்தார். பின்னர் அதனை நகராட்சியில் வைக்க நகராட்சி மேலாளர் நாராயணனிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்எல்என்எஸ். விஜயகுமார், மூத்த காங்கிரஸ் தலைவர் பன்னீர் செல்வம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பு, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முத்துக்குமார், நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மார்பிலும் கத்திக்குத்து விழுந்து இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பு மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் கொலை செய்யப்பட்டது சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராஜா என்ற சதீஷ் என்பது தெரிந்தது. இவர் மீது போலீஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜாவை தையூரை சேர்ந்த நண்பர்கள் நாகராஜ், வெற்றிமன்னன், காரப்பாக்கத்தை சேர்ந்த மாடுமணி ஆகிய 3 பேர் கொலை செய்திருப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
ஒரு திருட்டு வழக்கில் நாகராஜை போலீசில் சதீஷ் சிக்க வைத்தார். எனவே, அவரை பழிவாங்க திட்டமிட்டோம். நேற்று இரவு சதீஷ் கேளம்பாக்கத்தில் உள்ள மதுக்கடையில் மதுஅருந்த வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து நாங்கள் அங்கு சென்று, சதீஷிடம் நைசாக பேசி வயல்வெளிக்கு அழைத்து சென்றோம். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த போது, போலீசில் சிக்க வைத்தது குறித்து கேட்டோம். இதில் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாங்கள் 3 பேரும் சதீஷை கழுத்தை அறுத்தும், மார்பில் கத்தியால் குத்தியும் கொன்றோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
கொள்ளையடித்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததாக என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30) டிரைவர் இவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 17 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர் இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
போலீசார் அவரை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி மீனாட்சி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் ரத்னகிரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், வசூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, இவர்கள் இருவர் மீதும் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் தள்ளாடியபடியே பள்ளிக்கு வந்தார்.
கால்கள் நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வந்த அவர், வகுப்பறைக்கு செல்லாமல் தலைமை ஆசிரியர் அறை முன்பு சென்ற போது திடீரென வாந்தி எடுத்தார்.
இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்து, வாந்தி எடுத்த மாணவரை பார்த்தனர். அப்போது அந்த மாணவர் மது அருந்தி விட்டு போதையில் பள்ளிக்கு வந்து இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த மாணவரை இடைநீக்கம் செய்த தலைமை ஆசிரியர், இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.
9-ம் வகுப்பு படிக்கும் மாணவர், பள்ளிக்கூடத்துக்கு மது அருந்தி விட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவது வேதனை அளிப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் வழியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாகவும் அவர்களை விடுவிப்பது குறித்தும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர் சங்கங்களை கலந்து பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கு தமிழக அரசு எற்பாடு செய்ய வேண்டும்.
சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தருகிறது. எனவே இது விரைவில் நிறைவேறும். அதில் சந்தேகம் இல்லை.
வருகிற தமிழக உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும். அப்போதுதான் கட்சியின் உண்மையான பலம் தெரியும்.
காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும், நாங்களும் தனித்து போட்டியிட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த கண்ணகப்பட்டி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தபசு மரம் ஏற வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:
கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் ரமேஷ். மேற்கு தாம்பரம் மல்லிகா நகரில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டுக்கு செல்ல தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். தண்டவாளத்தையொட்டி இருட்டான பகுதியில் நடந்து சென்றபோது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. இரும்பு கம்பியால் தாக்கி ஒரு பவுன் தங்க செயின், ரூ.1000, செல்போனை பறித்து சென்று விட்டனர்.
படுகாயம் அடைந்த ரமேசை ரெயில்வே போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருட்டான பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பயணிகள் பீதி அடைந்து உள்ளனர். இதில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
சின்னகாஞ்சிபுரம், 3-ம் திருவிழா மண்டபம் தெருவில் வசித்து வந்தவர் வெங்கட்ராமன் (45). தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டின் குளியல் அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறுத்து சின்னகாஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி விசாரணை நடத்தி வருகிறார்.






