என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சத்தியவாணி தெருவில் வசித்து வருபவர் கஜேந்திரன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தற்போது வெல்டிங் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார்.
நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெரியபாளையம் கோவிலுக்கு சென்றார். இன்று அதிகாலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரொக்கம் ரூ.15 ஆயிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.
கஜேந்திரன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து பீர்க்கண்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தன.
வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் 6 வகையான ஆமை இனங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் சிவப்புக்காது ஆமை, இந்திய புள்ளி ஆமை, மற்றும் இந்திய குளத்தாமை ஆகியவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளன. சிவப்புக்காது ஆமை 10 குஞ்சுகளும், இந்திய புள்ளி ஆமை 9 குஞ்சுகளும், இந்திய குளத்தாமை 1 குஞ்சும் பொரித்துள்ளன. இதன் மூலம் 20 ஆமை குஞ்சுகள் வெளிவந்துள்ளன.
இந்த பூங்கா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும், குஞ்சுகள் பொரிப்பது இதுவே முதல் முறையாகும். புதிய வரவுகளுடன் பூங்காவிலுள்ள ஆமைகளின் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது.
சுற்றுச்சூழலை வளமைப் படுத்தும் பணிகளின் கீழ் ஆமைகளின் அடைப்பிடங்கள் அனைத்தும் ஒரு அடி உயரத்திற்கு மணல் கொண்டு நிரப்பப்பட்டது. இதனால் ஆமைகள் குழி தோண்டி முட்டையிடுவதற்கு ஏதுவான சூழல் ஏற்பட்டது. மேலும் கள்ளி, பிரண்டை வகைச்செடிகள் அடைப்பிடங்களில் நடவு செய்யப்பட்டதுடன், கீரை வகைகளும் உணவில் அதிகம் சேர்க்கப்பட்டது. நீர் நில வாழ்வியலுக்கு தகுந்தவாறு அடைப்பிடங்களில் உள்ள குட்டைகள் மறு வடிவமைக்கப்படுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆமைகளின் இயற்கையான வாழ்விடத்தை ஒத்தவாறு அடைப்பிடங்கள் உருவாக்கப்பட்டதால் இயற்கை தூண்டுதல் ஏற்பட்டு ஆமைகள் இனப்பெருக்க நடவடிக்கையை தொடங்கின.
நீர்நிலைகள் அழிப்பு மற்றும் மாசுபடுதல், கடற்கரைகள் ஆக்கிரமிப்பு, ஆறு மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய மணற்திட்டு அழிப்பு, முட்டைகள் சேகரம், வேட்டை, மீன்பிடி வலைகளில் சிக்கிக்கொள்ளுதல், கடற்கரையில் இரவு நேரங்களில் விளக்கு எரியவிடுதல் போன்ற காரணங்களால் ஆமை இனங்கள் அழிவுக்குள்ளாகி வருகின்றன. வனஉயிரின பாதுகாப்பு சட்டம், 1972-ன்படி ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் சென்ற விமானப்படை விமானம் மாயமானது குறித்து ராணுவ அமைச்சகம் அதை கண்டுபிடிக்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
குஜராத் சம்பவம் (தலித் இளைஞர்கள் மீதான தாக்குதல்) காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக அதை அரசியலாக்குகிறார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.
இதுபற்றி விசாரிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் லாபத்துக்காக இக்கட்சிகள் இதை அரசியலாக்கி விட்டனர்.
இப்படிப்பட்ட சம்பவம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடக்கவில்லை. தலித்துகளை தாக்கியது இது முதல் முறையல்ல. நாட்டின் பல்வேறு இடத்தில் பல அரசாங்கம் இருக்கும்போது இது மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. இது சமூக பிரச்சனை.
கடந்த 50 வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் அரசு மக்களை ஒருங்கிணைப்பதை விட வாக்கு வங்கியை வைத்துதான் செயல்பட்டது. இதை அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது.
பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போது தூங்கிவிட்டு குஜராத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் ஆறுதல் கூறுகிறார்.
கேரளாவில் தலித் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டபோது ராகுல் ஏன் சென்று பார்க்கவில்லை? ஏனென்றால் அப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக ஆயிரம் சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அப்பொதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதுபோன்ற சம்பவங்களை அரசியலாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது நடைபெறும் மோடி ஆட்சியில் எஸ்சி, எஸ்டி, ஏ.பி.சி. ஆகிய எம்.பி.க்கள்தான் அதிகமாக உள்ளனர்.
காஷ்மீருக்கு கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜனதா அரசு நிறைவேற்றவில்லை என்று முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பது அர்த்தமற்றது. காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீருக்காக என்ன செய்தீர்கள்?
தற்போது பா.ஜனதா அரசு காஷ்மீருக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறது. பாதுகாப்பு நல்லமுறையில் செய்து கொண்டிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசித்து வருகிறோம். இந்த மசோதா நிறைவேறினால் நாடு வளர்ச்சி பெறும். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்புறம் கடற்கரைக்கு செல்லும் வழியில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இடத்தை ஆக்கிரமித்து 125 கடைகள் இருந்தது. இதனால் கடல் அலையில் சிக்குவோரை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கடற்கரை அருகில் வர முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
இதை சரிசெய்யும் வகையில் பல மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் நில ஆய்வு மேற்கொண்ட போது ஆக்கிரமிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டது. கடைகள் நடத்துவோர் 6 மாதம் அவகாசம் கேட்டதால் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மத்திய சுற்றுலாத்துறை மண்டல இயக்குனர் சோஹெப் சாமெத் கடலோர சுற்றுலா தல மேம்பாட்டுக்காக மாமல்லபுரம் கடற்கரை வழியை ஆய்வு செய்த போது கடைகள் இன்னும் அகற்றாததை காரணம் கேட்டார்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அனைவருக்கும் காலக்கெடு முடிந்ததை சுட்டிக்காட்டி தற்காலிக வாடகை செலுத்தும் 125 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதும் அனைவரும் தானாக முன் வந்து கடைகளை இடித்து அப்புறப்படுத்தி பின்புறம் அரசு ஒதுக்கி கொடுத்துள்ள இடத்தில் கடைகளை கட்டி வருகிறார்கள்.
வானிலையை துல்லியமாக கணிக்க உதவும் இன்சாட்-3 டி.ஆர். செயற்கைகோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.
சென்னை எம்.ஐ.டி. நிறுவனத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு விமானம் மூலம் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார்.
விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
வானிலை ஆராய்ச்சி, வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றை துல்லியமாக கணிப்பதற்காக இன்சாட்-3 டி.ஆர். என்னும் செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட் மூலம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறோம்.
இதேபோல் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் மேலும் பல செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இவற்றின் மூலம் கடல் ஆராய்ச்சி, கடலின் ஆழம், கடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், சுனாமி போன்ற பேரழிவுகளை முன்கூட்டியே கண்காணிக்க முடியும்.
இஸ்ரோ மூலம் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் இலக்கை அடைந்து திட்டமிட்ட சுற்றுப்பாதையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து எம்.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போது “இஸ்ரோ ஆண்டுக்கு 6 முதல் 8 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதை 12-ல் இருந்து 18 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் கே.சிவன் கூறும்போது, “தகவல் தொடர்புக்காக 3,200 கிலோ எடை கொண்ட ஜிசாட் 19 என்னும் செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும். இந்திய ராக்கெட் ஒன்றின் மூலம் ஏவப்படும் அதிக எடை கொண்ட செயற்கைகோள் இதுவாகும்” என்றார்.
வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் அண்ணாநகர் கருமாரியம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே ஒருவர் வெளியே வந்தார். அப்போது ஒரு வாலிபர் பக்கத்து வீட்டில் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்தது. உடனடியாக அவர் திருடன், திருடன் என்று கத்தினார். இந்த சத்தத்தை கேட்ட அந்த பகுதி மக்கள் எழுந்து வெளியே வந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர்.
ஆனால் அந்த வாலிபர் அதே தெருவில் உள்ள ராஜ்குமார் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஏறிக்கொண்டு பொதுமக்களிடம் இந்தியில் பேசியுள்ளார். அப்போது தான் அவர் வடமாநிலத்தை சேர்ந்த திருடன் என்பது பொதுமக்களுக்கு தெரியவந்தது.
பின்னர் அந்த திருடன் தன்னை துரத்திய பொதுமக்கள் மீது மொட்டை மாடியில் இருந்த கற்களை எடுத்து வீசினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் இருந்த கற்களை எடுத்து மொட்டை மாடியில் இருந்த திருடன் மீது சரமாரியாக வீசினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த திருடன் மயங்கிய நிலையில் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓட்டேரி போலீசார் பலத்த காயம் அடைந்த அந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை மீட்டு அருகில் உள்ள தனியார்ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மண்ணிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்ற போது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திருடனை துரத்தி சென்றனர். அப்போது திருடன் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறியுள்ளார். பொதுமக்கள் அவரை கல்லால் அடித்துள்ளனர். இதில் மாடியில் இருந்து தவறி விழுந்து திருடன் இறந்துவிட்டார்.
இறந்து போன வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஏன் இங்கு வந்தார் என்பது பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை, அவருக்கு 30 வயது இருக்கும், அந்த வாலிபர் குறித்து மண்ணிவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கட்டிட வேலை செய்யும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில், ருத்திரகோடீஸ்வரர் கோவில், பக்தவச்சலேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைவலம் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் உடைய திருக்கழுக்குன்றத்தில் உள்ள சன்னதிதெரு, மசூதி தெரு, அக்ரஹாரதெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து பழக்கடைகள், காய்கறிகடைகள், பூக்கடைகள், பழைய இரும்புகடைகள் கட்டப்பட்டிருந்தன.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வழியாக செல்லக் கூடியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள். இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா வரும் ஆகஸ்டு மாதம் 2–ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழா தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் திருக்கழுக்குன்றம் சன்னதிதெரு, கடைவீதி, அக்ரஹாரதெருக்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அகற்றினர். அப்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, வருவாய்துறை, பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். திருக்கழுக்குன்றம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆலந்தூர்:
தேசிய மகளிர் ஆணைய தலைவி லலிதா குமாரமங்கலம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி பற்றி அம்மாநில பா.ஜனதா துணைத்தலைவர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சனம் செய்தது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் தயாசங்கர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். பா.ஜனதா கட்சி சார்பிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதை நிவர்த்தி செய்ய சரியான சட்டம் இல்லை.
தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பலபுகார்கள் வந்துள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்கிறோம்.
திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மசோதா என்பது நல்ல விஷயம் இதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது முதல் படி தான். இனி திருநங்கைகளுடன் கலந்து பேசி அவர்களின் விருப்பங்கள் என்ன என்பதை ஆலோசித்து அதையும் நிறைவேற்றுவது பற்றி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்;
பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
வானிலை ஆராய்ச்சி மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்–2, செயற்கை கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தபணிகள் நடந்து வருகிறது.
இதேபோல் கடல் சார் மற்றும் கடலில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ய பி.எஸ்.எல்.வி செயற்கை கோளை ஏற்கனவே அனுப்ப திட்டமிட்டு இருந்தோம்.
இந்த செயற்கை கோளும் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்.
ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் அவைகளின் இலக்கை அடைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கீழ்ப்பாக்கம், ஒசான் குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஐசக் செல்லத்துரை (வயது 28) ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை ஐசக் செல்லத்துரை மடிப்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கும் மனைவியை இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றார்.
புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். சாலையில் சென்ற போது பின்னால் வந்த தனியார் ஐ.டி. நிறுவனத்துக்கு ஆட்கள் ஏற்றிச் சென்ற பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி ஐசக் செல்லத்துரை பலியானார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஏரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் (வயது70). விவசாயி.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழிக்கு சென்று விட்டு காஞ்சீபுரம் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கீழம்பி சந்திப்பு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வரதன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் வரதன் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. கண்டக்டராக குமார கிருஷ்ணன் இருந்தார். அதிகாலை 4 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே கண்டக்டர் குமார கிருஷ்ணன் பலியானார். மேலும் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.






