என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 350-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் பஸ் நிலைய உட்பகுதியில் 63 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
கடை உரிமையாளர்கள் நடைமேடையை ஆக்கிரமித்தும், கடையின் முன்பாக மேற்கூரை கட்டியும் உள்ளதால் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையும், பயணிகள் நடைமேடையில் காத்திருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் அமரும் இடத்தில் சிறு வியாபாரிகள் கூடைகளில் பழங்களை விற்பது போன்றவற்றினால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பஸ்நிலையத்தில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. அதனை இடித்து அகற்ற முடிவு செய்தனர்.
நகராட்சி கமிஷ்னர் முஜிபூர் ரகுமான், நகராட்சி தலைவர் ஆர்.டி. சேகர், வருவாய் அலுவலர் ரவி சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் , 50-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் பஸ் நிலையத்திற்கு வந்தனர். நடைமேடையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை அதிரடியாக அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைகளை அகற்ற தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மட்டும் வியாபாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறு செய்ய கூடாது என கூறினர்.
இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.
காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லக்கோட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை விழா வரும் 28ம் தேதி நடைபெற்வுள்ளது. இதை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 30.7.2016 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் இயங்கும் அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் ஓப்பந்த தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் கடிதம் மற்றும் பகுதி காவல் நிலைய சான்று இரண்டையும் கான்பித்து வாரம், மாதம் தோறும் அணுமின் நிலையத்துக்குள் செல்ல அணுமதி பெற்று வந்தனர்.
இந்த நிலையில் நிலைய இயக்குநர் பெயரையும், காவல் துறை உயர் அதிகாரி பெயரையும் பயன்படுத்தி நுழைவு சீட்டு பெற்றுத் தறுவதாக சிலர் செயல்படுவதாகவும் தொழிலாளிகள் போர்வையில் சமூக விரோதிகள் அணுமின் நிலையத்துக்குள் செல்வதாகவும் புகார்கள் எழுந்தது.
கடந்த ஆண்டு அணு உலை பணிகளை ரகசியமாக படம் பிடித்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கேமரா, பென்டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அணுசக்தி வளாகப் பகுதியின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இனி அணுமின் நிலையம் உள்ளே செல்வோர் காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர் விண்ணப்பம் பகுதி காவல் நிலையத்துக்கு அனுப்பபட்டு குற்றப் பின்னனிகள் இல்லை என நன்னடத்தை சான்று வந்த பிறகே அணுசக்தி வளாகத்துக்குள் நுழைய அணுமதிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்து விட்டதாக காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி தெரிவித்தார்.
மேற்கு தாம்பரம், கன்னட பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (45). கூலித் தொழிலாளி. நேற்று இரவு அவர் கன்னடபாளையத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே காவலாளி ஒருவருடன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது மதுபோதையில் வந்த வாலிபர் திடீரென ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவின் தலை, மார்பில் சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆனாலும் கொலையாளி எந்த சலனமும் இல்லாமல் ரத்தகறை படிந்த கத்தியுடன் தப்பி ஓடாமல் அங்கேயே நின்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி அக்கம் பக்கத்தினருக்கும், தாம்பரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கொலையாளியை மடக்கி பிடித்தனர். மேலும் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட கொலையாளி அதே பகுதி காந்தி நகரை சேர்ந்த ஜான் என்கிற ஜான்சன் (35) என்பது தெரிந்தது. மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட சோகத்தில் ஜெயிலுக்கு செல்வதற்காக யார் என்றும் தெரியாத ஒருவரை கொலை செய்ததாக தெரிவித்தார்.
போலீசில் ஜான் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் எனக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் என்னை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார்.
அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று தவறு செய்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டும் அவள் திரும்பி வரவில்லை. இதனால் நான் மனவேதனை அடைந்தேன்.
மனைவி இல்லாமல் வீட்டில் இருப்பதை விட ஜெயிலில் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். இது பற்றி நண்பர்கள் சிலரிடமும் அடிக்கடி கூறி வந்தேன்.
நேற்று இரவு குப்பை கிடங்கு அருகே மது அருந்தி விட்டு நடந்து சென்றேன். அப்போது ராஜா நின்று கொண்டு இருந்தார். ஏற்கனவே மனவேதனையில் இருந்த நான் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். அவருக்கும் எனக்கும் எந்த மோதலும் கிடையாது. அவர் யார் என்றே எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொலையுண்ட ராஜா மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ராஜா மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்து உள்ளார்.
ராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் அவரது தாயும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த முன்விரோதமும் இல்லாமல் அவர் கொலை செய்யப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனைவி பிரிந்து சென்றதால் ஜான் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே கொலையாளி ஜானுக்கு அடுத்த மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஜெயிலுக்கு போக ஆசைப்பட்ட வாலிபரின் விபரீத முடிவால் அப்பாவி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் காவலாளியாக இருப்பவர் ஆனந்த். இவரது சொந்த ஊர் வந்தவாசி.
நேற்று மாலை அவர் பணியில் இருந்த போது 2 வாலிபர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை சரமாரியாக குத்தினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஆனந்தை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட 2 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மந்தவெளியை சேர்ந்த நவீன், ஞானசவுந்தர் என்பதும், கள்ளக்காதல் தகராறில் ஆனந்தை கொலை செய்ய முயன்றதும் தெரிந்தது.
ஆனந்துக்கும், மந்தவெளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த பெண்ணின் மகன் கண்டித்தும் கேட்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் மகனின் திட்டப்படி அவர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரத்தில் கடல் நீர் எப்போதும் சீற்றமாக காணப்படும். அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடலில் நீரோட்டப் போக்கு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடபுறமிருந்து தென்புறம் நோக்கி அமைவதால் கடலின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கத்தை விட கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி அளவில் திடீரென கடல் நீர் 100 அடி தூரத்துக்கு உள்வாங்கியது.
இதை பார்த்த மீனவர்களும் சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். கடல் நீர் உள்வாங்கிய போது கரையோரத்தில் இருந்த மீனவர்களின் வலைகள், படகுகள் இழுத்து செல்லப்பட்டது. அவற்றை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காலை 9 மணி அளவில் கடல் நீர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, “கடலின் இயற்கை சூழலை முன்பு போல் கணிக்க முடியவில்லை. ஒருபுறம் கடல் உள்வாங்குகிறது. மறுபுறம் கடல் சீற்றத்துடன் கடல் நீர் கரைபுகுந்து வலைகளை இழுத்துச் செல்கிறது” என்றார்.
திருப்போரூர் வேண்டவ ராசியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தனஞ்செயன். தனியார் என்ஜினியர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இன்று காலை அவர் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்த போது அங்கிருந்த கதவில் துளை போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள், லேப் டாப்பை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 1லட்சம் இருக்கும்.
வீட்டில் நகை-பணம் வைக்காததால் அவை தப்பியது. தனஞ்செயன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் இந்த துணிகர செயலலில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கதவு, மேற்கூரை, தடுப்பு கண்ணாடி ஆகியவை அடிக்கடி உடைந்து விழும் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்லும் பயணிகளை பன்னாட்டு விமான நிலையத்துக்குள் புறப்பாடு பகுதியில் உள்ள 17-வது வாசல் வழியாக போலீசார் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் படையை சேர்ந்த பெண் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 17-வது நுழைவு வாசலில் இருந்த 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு திடீர் என பயங்கரமாக உடைந்து விழுந்தது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசுக்கு காயம் ஏற்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
உடனே சிகிச்சைக்காக பெண் போலீசை மருத்துவமனையில் சேர்த்தனர். விமான நிலைய ஊழியர்கள் உடைந்த கண்ணாடியை எடுத்து விட்டு புதிய தானியங்கி கதவை அங்கு பொருத்தினர். 65 முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தானியங்கி கண்ணாடி எவ்வாறு உடைந்தது என்றும் விசாரித்து வருகிறார்கள். மேலும் விமான நிலையத்தில் உள்ள எல்லா கண்ணாடிகளையும் பரிசோதித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் (எண். 79) புறப்பட்டு சென்றது. டிரைவர் மோகன்தாஸ் பஸ்சை ஓட்டினார். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இரவு 11 மணியளவில் பஸ் வாலாஜாபாத்தை அடுத்த தேவரியம்பாக்கம் - தளழம்பட்டு இடையே சென்று கொண்டு இருந்தது.
அங்குள்ள கால்வாய் பாலத்தில் பஸ் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரை உடைத்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பாக்யமலர் (வயது30) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார் (49), டிரைவர் மோகன்தாஸ் உள்பட 35 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்த அனைவரும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
திருப்போரூர் பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய பஸ் நிலைய கூரையின் முன்புறம் பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்றது.
சுமார் 30 அடி உயரத்தில் சாரம் அமைத்து 3 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. அதில் நின்று வேலை செய்து கொண்டிருந்தவர்களில் 2 பேர் அலறியபடி கீழே விழுந்து லேசான காயத்துடன் தப்பினர்.
ஒருவர் மட்டும் மேற்புற கூரையை பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கி அலறினார். இதனால் பஸ்நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பெரிய ஏணியை கொண்டு வந்து அதன்மூலம் அந்தரத்தில் தொங்கிய தொழிலாளியை பத்திரமாக மீட்டனர்.
சாரத்தில் பழைய கம்புகளை பயன்படுத்தியதால் பளு தாங்காமல் உடைந்தது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக 3 தொழிலாளர்களும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
உயரமான பகுதியில் வேலை செய்யும்போது அதற்கென பாதுகாப்புடன் பணி செய்வதை ஒப்பந்தக்காரருக்கு அறிவுறுத்தி அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் பஸ் நிலைய வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ராணுவ விமானம் சிறிது நேரத்திலேயே சென்னை அருகே கடல் பகுதியில் திடீரென மாயமானது.
விமானம் புறப்பட்டுச் சென்ற 16 நிமிடங்களில் விமான கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரில் இருந்தும் மறைந்தது.
சென்னைக்கு கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் காணாமல் போனது.
இந்த விமானத்தில் 29 பேர் பயணம் செய்தனர். அவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. தற்போது விமானப்படை விமானங்களும், போர்க்கப்பல்களும் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
இதனால் தாம்பரம் விமானப்படை விங் கமாண்டர் ஜெகதீப்சிங் நேற்று இரவு சேலையூர் போலீஸ் நிலையம் சென்று உதவி கமிஷனர் பழனிவேலை சந்தித்து முறைப்படி புகார் கொடுத்துள்ளார்.
அதில் மாயமான விமானத்தில் பெண் அதிகாரி உள்பட 29 பேர் இருந்ததாகவும், அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறி உள்ளார். போலீசார் இந்த புகாரை பெற்றுக் கொண்டு முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகாரில் காணாமல் போன 29 பேர் பெயர்கள் மட்டும் குறிப்பிட்டிருந்ததால் அவர்களின் முழு முகவரி மற்றும் விவரங்களை சேகரிக்க சேலையூர் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், இன்று காலை தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அவருடன் உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசாரும் உடன் சென்றிருந்தனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து பெயர், முகவரி விவரங்களை சேகரித்தனர்.
இதில் 16 பேர் பெயர் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
1.பத்சரா– விமானி,
2.நந்தா–விமானி,
3. குணால்–
4.ராஜன்–
5. தீபிகா–
6.சஞ்சீவ்குமார்–
7.விமல்–
8.சாம்பமூர்த்தி,
9.பிரசாத் பாபு,
10.நாகேந்திரராவ்,
11.சேனாபதி,
12.பூபேந்திரசிங்,
13.மகாரானா,
14.சின்னாராவ்,
15.சீனிவாசராவ்
(இவர்கள் விசாகப்பட்டினம் கப்பல் படை ஊழியர்கள்).
16. முத்துக்கிருஷ்ணன்,– கடலோர பாதுகாப்பு படை வீரர் தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்தவர்.
திருவான்மியூர்:
நீலாங்கரையை அடுத்த பனையூரைச் சேர்ந்தவர் மனோஜ். உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அடகு கடை வைத்துள்ளார்.
நேற்று காலை மனோஜின் தம்பி சுரேஷ் அடகு கடையில் இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் நகையை அடகு வைக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் சுரேஷ் நகை குறித்து விவரம் கேட்டார்.
திடீரென 3 வாலிபர்களும் சுரேசை சரமாரியாக தாக்கினர். மேலும் ஒருவன் கத்தியால் அவரை கையில் குத்தினான். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் 3 பேரையும் தள்ளி விட்டு கடையில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே 3 வாலிபர்களும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதனால் அடகு கடையில் இருந்த சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியது.
இதுகுறித்து கானாத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அவர்களை பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






