search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: ஜெயிலில் போய் இருப்பதற்காக தொழிலாளியை கொன்ற வாலிபர்
    X

    மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: ஜெயிலில் போய் இருப்பதற்காக தொழிலாளியை கொன்ற வாலிபர்

    மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ஜெயிலுக்கு போக ஆசைப்பட்ட வாலிபரின் விபரீத முடிவால் அப்பாவி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம், கன்னட பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (45). கூலித் தொழிலாளி. நேற்று இரவு அவர் கன்னடபாளையத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே காவலாளி ஒருவருடன் பேசி கொண்டு இருந்தார்.

    அப்போது மதுபோதையில் வந்த வாலிபர் திடீரென ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவின் தலை, மார்பில் சரமாரியாக வெட்டினார்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆனாலும் கொலையாளி எந்த சலனமும் இல்லாமல் ரத்தகறை படிந்த கத்தியுடன் தப்பி ஓடாமல் அங்கேயே நின்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி அக்கம் பக்கத்தினருக்கும், தாம்பரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கொலையாளியை மடக்கி பிடித்தனர். மேலும் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் பிடிபட்ட கொலையாளி அதே பகுதி காந்தி நகரை சேர்ந்த ஜான் என்கிற ஜான்சன் (35) என்பது தெரிந்தது. மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட சோகத்தில் ஜெயிலுக்கு செல்வதற்காக யார் என்றும் தெரியாத ஒருவரை கொலை செய்ததாக தெரிவித்தார்.

    போலீசில் ஜான் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் எனக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் என்னை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று தவறு செய்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டும் அவள் திரும்பி வரவில்லை. இதனால் நான் மனவேதனை அடைந்தேன்.

    மனைவி இல்லாமல் வீட்டில் இருப்பதை விட ஜெயிலில் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். இது பற்றி நண்பர்கள் சிலரிடமும் அடிக்கடி கூறி வந்தேன்.

    நேற்று இரவு குப்பை கிடங்கு அருகே மது அருந்தி விட்டு நடந்து சென்றேன். அப்போது ராஜா நின்று கொண்டு இருந்தார். ஏற்கனவே மனவேதனையில் இருந்த நான் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். அவருக்கும் எனக்கும் எந்த மோதலும் கிடையாது. அவர் யார் என்றே எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொலையுண்ட ராஜா மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ராஜா மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்து உள்ளார்.

    ராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் அவரது தாயும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த முன்விரோதமும் இல்லாமல் அவர் கொலை செய்யப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மனைவி பிரிந்து சென்றதால் ஜான் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே கொலையாளி ஜானுக்கு அடுத்த மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ஜெயிலுக்கு போக ஆசைப்பட்ட வாலிபரின் விபரீத முடிவால் அப்பாவி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×