என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
    X

    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 350-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் பஸ் நிலைய உட்பகுதியில் 63 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    கடை உரிமையாளர்கள் நடைமேடையை ஆக்கிரமித்தும், கடையின் முன்பாக மேற்கூரை கட்டியும் உள்ளதால் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையும், பயணிகள் நடைமேடையில் காத்திருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பயணிகள் அமரும் இடத்தில் சிறு வியாபாரிகள் கூடைகளில் பழங்களை விற்பது போன்றவற்றினால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பஸ்நிலையத்தில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. அதனை இடித்து அகற்ற முடிவு செய்தனர்.

    நகராட்சி கமிஷ்னர் முஜிபூர் ரகுமான், நகராட்சி தலைவர் ஆர்.டி. சேகர், வருவாய் அலுவலர் ரவி சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் , 50-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் பஸ் நிலையத்திற்கு வந்தனர். நடைமேடையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை அதிரடியாக அகற்றினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைகளை அகற்ற தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மட்டும் வியாபாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறு செய்ய கூடாது என கூறினர்.

    இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.
    Next Story
    ×