என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை காங்கிரஸ் அரசியலாக்குகிறது: வெங்கையா நாயுடு பேட்டி
    X

    குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை காங்கிரஸ் அரசியலாக்குகிறது: வெங்கையா நாயுடு பேட்டி

    சென்னை விமான நிலையத்தில் குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை காங்கிரஸ் அரசியலாக்குகிறது என்று வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
    ஆலந்தூர்:

    ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் சென்ற விமானப்படை விமானம் மாயமானது குறித்து ராணுவ அமைச்சகம் அதை கண்டுபிடிக்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    குஜராத் சம்பவம் (தலித் இளைஞர்கள் மீதான தாக்குதல்) காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக அதை அரசியலாக்குகிறார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.

    இதுபற்றி விசாரிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் லாபத்துக்காக இக்கட்சிகள் இதை அரசியலாக்கி விட்டனர்.

    இப்படிப்பட்ட சம்பவம் பா.ஜனதா ஆட்சியில் மட்டும் நடக்கவில்லை. தலித்துகளை தாக்கியது இது முதல் முறையல்ல. நாட்டின் பல்வேறு இடத்தில் பல அரசாங்கம் இருக்கும்போது இது மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. இது சமூக பிரச்சனை.

    கடந்த 50 வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் அரசு மக்களை ஒருங்கிணைப்பதை விட வாக்கு வங்கியை வைத்துதான் செயல்பட்டது. இதை அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது.

    பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போது தூங்கிவிட்டு குஜராத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் ஆறுதல் கூறுகிறார்.

    கேரளாவில் தலித் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டபோது ராகுல் ஏன் சென்று பார்க்கவில்லை? ஏனென்றால் அப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக ஆயிரம் சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அப்பொதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதுபோன்ற சம்பவங்களை அரசியலாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    தற்போது நடைபெறும் மோடி ஆட்சியில் எஸ்சி, எஸ்டி, ஏ.பி.சி. ஆகிய எம்.பி.க்கள்தான் அதிகமாக உள்ளனர்.

    காஷ்மீருக்கு கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜனதா அரசு நிறைவேற்றவில்லை என்று முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பது அர்த்தமற்றது. காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீருக்காக என்ன செய்தீர்கள்?

    தற்போது பா.ஜனதா அரசு காஷ்மீருக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறது. பாதுகாப்பு நல்லமுறையில் செய்து கொண்டிருக்கிறது.

    தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசித்து வருகிறோம். இந்த மசோதா நிறைவேறினால் நாடு வளர்ச்சி பெறும். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×