என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சங்கு தீர்த்த புஷ்ப கரமேளா மற்றும் லட்சதீப விழா நாளை (2–ந் தேதி) விமரிசையாக நடக்கிறது.
    திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சங்கு தீர்த்த புஷ்ப கரமேளா மற்றும் லட்சதீப விழா நாளை (2–ந் தேதி) விமரிசையாக நடக்கிறது.

    கன்னிராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் ஒரு முறை இக்கோவில் திருக்குளத்தில் இருந்து சத்தத்துடன் சங்கு வெளிவரும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    இதையொட்டி பக்தர்கள் தங்குவதற்கும் சென்று வரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுஉள்ள அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இது குறித்து கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சங்கு தீர்த்த புஷ்பகர மேளா, லட்சதீப விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்லும் வகையில் 100 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    6 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    மேலும் அந்தந்த இடங்களில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 8 அவசர சிகிச்சை வாகனங்களும், இரண்டு இருசக்கர மருத்துவ வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முறையாக பதிவு செய்யப்பட்ட 40 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒதுக்கப்பட்ட ஏழு இடங்களில் மட்டுமே அன்னதானங்கள் வழங்க வேண்டும். சோதனை செய்யப்பட்ட பிறகே உணவினை வழங்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை எளிதாக கண்டறியும் வகையில் எட்டு காவல் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

    கோவில் குளத்து நீரில் முழ்கி குளிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    கரையில் 18 நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உடைமாற்ற 5 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விழாவினையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கஜலட்சுமி கூறினார்.
    திருக்கழுக்குன்றம் கோவில் லட்சத்தீப திருவிழாவை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் சங்கு தீர்த்த புஷ்கர மேளா-லட்சத்தீப திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆகவே நாளை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்ட வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அரசு அலுவலகங்கள் பணிநாளாக இயங்கும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    பல்லாவரம் பகுதியில் திடீரென பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கண்ணாடி மண்டபம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்ட வசமாக 40 பேர் உயிர் தப்பினர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அருகே துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ‘மினி பார்ட்டி ஹால்’ மண்டபம் உள்ளது. இது முழுவதும் கண்ணாடியால் அழகுப்படுத்தப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை இங்கு கீழ்கட்டளை அம்பாள் நகரை சேர்ந்த யோகேஷ் பாபுவின் மகன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இரவு 8 மணி அளவில் பல்லாவரம் பகுதியில் திடீரென பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இடியின் அதிர்வால் மண்டபத்தில் இருந்த சுமார் 20 அடி உயர கண்ணாடி உடைந்து விழுந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் மற்ற கண்ணாடிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து நொறுங்கின. இதில் அந்த மண்டபம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

    இதனை கண்ட விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரியான நேரத்தில் அவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    தரைமட்டமான மண்டபம் முழுவதும் கண்ணாடியால் அழகுபடுத்தப்பட்டு இருந்தது. காங்கிரீட் சுவர்கள் அதில் இல்லை. எனவே இடியின் அதிர்வில் கண்ணாடி உடைந்து விழுந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மடிப்பாக்கம் அருகே கழிவு நீர் லாரி மோதி கேன்டீன் ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவான்மியூர்:

    மடிப்பாக்கம் அன்னை தேவி நகரைச்சேர்ந்தவர் விஜய் (22). இவரது நண்பர் கெவின் ராஜ் (21) இருவரும் தரமணியில் ஐ.டி. கம்பெனி கேன்டீனில் பணி புரிந்து வந்தனர். இன்று காலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் சோழிங்க நல்லூர், பெருங்குடி சாலையில் வந்த போது கழிவு நீர் லாரி மோதியது.

    இதில் விஜய் சம்பவ இடத்தில் பலியானார். கெவின்ராஜூக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தப்பி ஓடிய லாரி டிரைவர் ராஜவேலுவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மயிலாப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் 36 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    திருவான்மியூர்:

    மயிலாப்பூர் பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள சேஷாசலம் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (50). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.

    இன்று காலை 4.30 மணியளவில் எழுந்து நடைப்பயிற்சி சென்றார். அதன் பின்னர் 5 மணிக்கு அவரது மகள் கோமதி நடைப்பயிற்சிக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வாசலில் உள்ள ஒரு பெரிய குத்து விளக்கில் மறைத்து வைத்து விட்டு சென்றார்.

    நடைப்பயிற்சி முடிந்த பின்னர் நாராயணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 36 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    மேலும் அங்கிருந்த ரூ.4½ லட்சம் ரொக்கப்பணமும் திருடப்பட்டிருந்தது. மேஜை டிராயரில் இருந்த பீரோ சாவியை எடுத்து அதை திறந்து பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    யாரோ தெரிந்த நபர்தான் வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து பீரோவில் வைத்திருந்த பணம் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்புதுலக்க போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. அது மார்க்கெட் வரை சென்று அங்கேயே நின்று விட்டது.
    சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து வழியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் அனுப்ப இருந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து மலேசியாவுக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பார்சலை சுங்க இலாகா அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்த போது அதில் ஏதோ உயிருடன் ஊர்ந்து செல்வது போல் தெரிந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் உயிருடன் நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். அந்த பார்சலில் இருந்த சுமார் 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பார்சலில் இருந்த முகவரிக்கு சென்றபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. கடத்தல் கும்பல் அந்த நட்சத்திர ஆமைகளை போலி முகவரி மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

    நட்சத்திர ஆமைகள் பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்த உடன் அவர்களிடம் பிடிபட்ட நட்சத்திர ஆமைகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 66-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை, தடுப்பு கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்தும் கண்ணாடி உடைந்து விழுவது நிற்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 66-வது முறையாக விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை பன்னாட்டு விமான முனையம் பயணிகள் செல்லும் பின் பகுதியில் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து 8 அடி நீளம் 4 அடி அகலம் உள்ள கண்ணாடி உடைந்து விழுந்தது. அப்போது பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழ்நாடு இயல் இசை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவான்மியூர்:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருப்பவர் வீணை காயத்ரி.

    பல்கலைக்கழகத்தில் உள்ள வீணை காயத்ரியின் அலுவலகத்தில் கடந்த 24-ந்தேதி இரவு ஒரு மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது.

    அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடிய அக்கும்பல் வீணை காயத்ரியின் அலுவலக மேஜை மீது கொலை மிரட்டல் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றது.

    அவரது போட்டோவையும் கத்தியால் குத்தி கிழித்து இருந்தனர். சில பைல்களும் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து வீணை காய்திரி பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இயல்இசை பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக வீணை காய்திரி போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

    அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார் சூறையாடியபோது அலுவலகத்தில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். அதை வைத்து முன்னாள் மாணவர்கள் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் பரணிகுமார் என்ற மாணவரின் கைரேகை ஒத்துப்போனது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதில் அவரும், மேலும் 4 பேருடன் சேர்ந்து அலுவலகத்தை சூறையாடி இருப்பது தெரிய வந்தது.

    2014-ம் ஆண்டு மிருதங்க படிப்பை முடித்துள்ளார். அப்போது இசை ஆசிரியராக இருந்த சரவணன் என்பவரை ஒழுக்கமின்மை காரணமாக வீணை காயத்ரி இடமாற்றம் செய்துள்ளார்.

    ஆசிரியர் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்ட பரணிகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலுவலகத்தை சூறையாடியதும், தனக்கு தங்கபதக்கம் கொடுக்காமல், வேறு மாணவருக்கு கொடுத்ததாலும் வீணை காய்திரிக்கு கொலை விடுத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. பயணிகள் உள்ளே அமர்ந்த நிலையிலேயே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 6.15 மணிக்கு 122 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.

    விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக இழுவை வண்டி மூலம் விமானம் பின்னோக்கி இழுக்கப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    பின்னர் பயணிகள் உள்ளே அமர்ந்த நிலையிலேயே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பின்னர் எந்திர கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8.25 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. விமானி சரியான நேரத்தில் எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் 122 பயணிகளும் உயிர் தப்பினர்.
    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 பேரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், திருக்காலி மேடு பகுதியை சேர்ந்த 17 பேர் கடந்த 20-ந் தேதி நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

    கடந்த 24-ந் தேதி அவர்கள் முக்திநாத் மலைப்பகுதியில் உள்ள சிவன் கோவிலை சென்றடைந்தனர். சாமி தரிசனம் முடிந்து அவர்களில் 7 பேர் மட்டும் மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கினர்.

    அப்போது அப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. பேய் மழை காரணமாக முக்திநாத் மலைப்பகுதியையொட்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மலைப்பகுதியில் இருந்த 10 பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் ஆற்று வெள்ளத்தை கடந்து வர முடியாத நிலை ஏற்பட்டது.அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவார்கள். நிலச்சரிவில் சிக்கியவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

    கோபி, சங்கரி, செல்லம்மாள், ஜெயலட்சுமி, ராமலிங்கம், குமாரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த பத்மநாபன், துளசி, வேலூர் மாவட்டம் கலவையை சேர்ந்த மகேஸ்வரி, குடியாத்தத்தை சேர்ந்த சுகுணா ஆகியோர் ஆகும்.

    அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம் குறையவில்லை. இதனால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அங்கு சிக்கி இருப்பவர்கள் சிறிய கொட்டகையில் இருப்பதால் கடும் குளிராலும் அவதிப்பட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள கடையில் உணவாக ரொட்டி, பருப்பு சாதத்துக்கு ரூ. 500 கட்டணம் கொடுக்கும் நிலை உள்ளது. போதிய அளவு பணம் இல்லாததால் அங்கு சிக்கி இருப்பவர்கள் பட்னி கிடப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து நிலச்சரிவில் சிக்கி உள்ள கோபி என்பவரின் உறவினர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

    நிலச்சரிவில் சிக்கிய 10 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும். அங்கு அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கேட்கின்றனர். தமிழக அரசு உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு சிக்கி இருப்பவர்களிடம் செல்போன் மூலம் பேசினேன். பணம் இல்லாததால் சாப்பாடு கூட வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுடன் மேலும் ஆந்திராவை சேர்ந்த 4 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 4 பேரும் சிக்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை என்ஜினீயர் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் கேளம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருபவர் பிரேம்குமார் (வயது 28). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கம்மம்.

    நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த வழியே காரில் வந்தவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். சிறிது நேரத்தில் காரில் இருந்த 4 பேர் கும்பல் பிரேம்குமாரை மிரட்டி கடத்தி சென்றனர்.

    அவரது பெற்றோருக்கு போன் செய்த கடத்தல் கும்பல் ‘உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.50 லட்சம் தரவேண்டும் இல்லையெனில் பிரேம் குமாரை கொன்று விடுவோம். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கக்கூடாது’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் தாழம்பூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார் படுத்தப்பட்டனர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோரும் அங்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பலை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பிரேம் குமாரின் பெற்றோரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் பணத்தை கேளம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு கொண்டு வரும்படி கூறினர். ஆனால் அவர்கள் அவ்வளவு பணம் இல்லை. ரூ. 1 லட்சம் மட்டும் உள்ளது என்றனர்.

    உடனே கடத்தல் கும்பல் ரூ. 1 லட்சத்தை பிரேம் குமாருடன் அறையில் தங்கி இருந்த சந்தீப்பிடம் கொடுத்து அனுப்புமாறு கூறினர்.

    இதைத் தொடர்ந்து சந்தீப் வேடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பணத்தை எடுத்து சென்றார். அவரை பின்தொடர்ந்து தனிப்படையினர் இடைவெளி விட்டு சென்றனர்.

    ஆனால் கடத்தல் கும்பல் கேளம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வராமல் மேலும் இரண்டு இடங்களுக்கு வருமாறு கூறி அலைக்கழித்தனர். கடைசியாக கிழக்கு கடற்கரை சாலை கோவளம் சாலை சந்திப்புக்கு வருமாறு கூறினார்கள்.

    நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் அங்கு விரைந்து சென்று காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் தையூர் பெரியமாநகரை சேர்ந்த பார்த்திபன், ஜெயசீலன் என்பது தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி தையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரேம்குமாரை மீட்டனர்.

    கடத்தல்காரர்கள் கேளம்பாக்கம் பிரவீண்பாலாஜி, அரக்கோணம் விவேக்ராஜ் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 4 பேரும் பணத்துக்கு ஆசைப்பட்டு என்ஜினீயரை கடத்தியதாக தெரிவித்துள்ளனர். பிரவீண் பாலாஜியும் விவேக்ராஜூம் நெருங்கிய நண்பர்கள்.

    விவேக்ராஜ் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார். வெளிநாட்டில் பயன்படுத்திய செல்போன் சிம்கார்டை வைத்து பிரேம்குமாரை கடத்தியதும், பணம் கேட்டு பேசி இருக்கிறார்.

    இதனால் ஆரம்பத்தில் கடத்தல்காரர்களின் செல்போன் எண் குறித்த தகவலை பெறுவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. பின்னர் செல்போன் டவரை வைத்து அவர்களை கைது செய்து விட்டனர்.

    நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கிய போலீசாரின் தேடுதல் வேட்டை இரவு 2 மணி வரை நீடித்தது. இதனால் காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

    கடத்தப்பட்ட என்ஜினீயரை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. செந் தாமரைக்கண்ணன் பாராட்டினார்.

    கைதான 4 பேரும் வேறு எந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டனரா? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சாலை வளைவால் விபத்துக்கள் அதிகரிப்பதால் எச்சரிக்கை பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு பஸ் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலியாயினர்.

    விபத்து நடந்த சிறு பாலத்திற்கு முன்பாக அபாயகரமான வளைவு இருந்ததே பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதே போன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் - உத்திரமேரூர் சாலை ஆற்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள அபாயகரமான வளைவில் சென்ற ஆந்திர பஸ் கவிழ்ந்து இளம்பெண் ஒருவர் பலியானார்.

    இது போன்ற அபாயகரமான வளைவுகள் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான திம்மராஜம்பேட்டை, தாங்கி, வாரணவாசி, ஆற்பாக்கம், பாலூர், தண்டரை உள்ளிட இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வளைவுகள் பற்றி தெரிந்திருந்தாலும், புதியவர்கள் அதிகளவில் இப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

    மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் போதிய மின் விளக்குகள் இல்லாத காரணத்தினாலும் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    அபாயகரமான வளைவுகளில் வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ளும் வகையில் குறியீடு போர்டுகளை அமைக்க வேண்டும், இரவு நேரங்களில் ஓளிரும் வண்ண ஸ்டிக்கர்களை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் சாலைகளில் குறிப்பாக அபாயகரமான வளைவுகள் உள்ள இடங்களில் சூரிய மின் விளக்குகள் பொருத்த வேண்டும், இந்த வளைவுகளை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து நெடுஞ்சாலை துறையினர் சாலையை மறுசீரமைக்க வேண்டுமெனவும் தெரிவித்து உள்ளனர்.
    ×