என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 பேரை மீட்பதில் சிக்கல் நீடிப்பு
    X

    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 பேரை மீட்பதில் சிக்கல் நீடிப்பு

    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 பேரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், திருக்காலி மேடு பகுதியை சேர்ந்த 17 பேர் கடந்த 20-ந் தேதி நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

    கடந்த 24-ந் தேதி அவர்கள் முக்திநாத் மலைப்பகுதியில் உள்ள சிவன் கோவிலை சென்றடைந்தனர். சாமி தரிசனம் முடிந்து அவர்களில் 7 பேர் மட்டும் மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கினர்.

    அப்போது அப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. பேய் மழை காரணமாக முக்திநாத் மலைப்பகுதியையொட்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மலைப்பகுதியில் இருந்த 10 பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் ஆற்று வெள்ளத்தை கடந்து வர முடியாத நிலை ஏற்பட்டது.அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவார்கள். நிலச்சரிவில் சிக்கியவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

    கோபி, சங்கரி, செல்லம்மாள், ஜெயலட்சுமி, ராமலிங்கம், குமாரி, சென்னை அமைந்தகரையை சேர்ந்த பத்மநாபன், துளசி, வேலூர் மாவட்டம் கலவையை சேர்ந்த மகேஸ்வரி, குடியாத்தத்தை சேர்ந்த சுகுணா ஆகியோர் ஆகும்.

    அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம் குறையவில்லை. இதனால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அங்கு சிக்கி இருப்பவர்கள் சிறிய கொட்டகையில் இருப்பதால் கடும் குளிராலும் அவதிப்பட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள கடையில் உணவாக ரொட்டி, பருப்பு சாதத்துக்கு ரூ. 500 கட்டணம் கொடுக்கும் நிலை உள்ளது. போதிய அளவு பணம் இல்லாததால் அங்கு சிக்கி இருப்பவர்கள் பட்னி கிடப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து நிலச்சரிவில் சிக்கி உள்ள கோபி என்பவரின் உறவினர் நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

    நிலச்சரிவில் சிக்கிய 10 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும். அங்கு அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கேட்கின்றனர். தமிழக அரசு உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு சிக்கி இருப்பவர்களிடம் செல்போன் மூலம் பேசினேன். பணம் இல்லாததால் சாப்பாடு கூட வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுடன் மேலும் ஆந்திராவை சேர்ந்த 4 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 4 பேரும் சிக்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×