என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சாலை வளைவால் விபத்துக்கள் அதிகரிப்பு: எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சாலை வளைவால் விபத்துக்கள் அதிகரிப்பு: எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சாலை வளைவால் விபத்துக்கள் அதிகரிப்பதால் எச்சரிக்கை பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு பஸ் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலியாயினர்.

    விபத்து நடந்த சிறு பாலத்திற்கு முன்பாக அபாயகரமான வளைவு இருந்ததே பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதே போன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் - உத்திரமேரூர் சாலை ஆற்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள அபாயகரமான வளைவில் சென்ற ஆந்திர பஸ் கவிழ்ந்து இளம்பெண் ஒருவர் பலியானார்.

    இது போன்ற அபாயகரமான வளைவுகள் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான திம்மராஜம்பேட்டை, தாங்கி, வாரணவாசி, ஆற்பாக்கம், பாலூர், தண்டரை உள்ளிட இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வளைவுகள் பற்றி தெரிந்திருந்தாலும், புதியவர்கள் அதிகளவில் இப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

    மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் போதிய மின் விளக்குகள் இல்லாத காரணத்தினாலும் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    அபாயகரமான வளைவுகளில் வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ளும் வகையில் குறியீடு போர்டுகளை அமைக்க வேண்டும், இரவு நேரங்களில் ஓளிரும் வண்ண ஸ்டிக்கர்களை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் சாலைகளில் குறிப்பாக அபாயகரமான வளைவுகள் உள்ள இடங்களில் சூரிய மின் விளக்குகள் பொருத்த வேண்டும், இந்த வளைவுகளை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து நெடுஞ்சாலை துறையினர் சாலையை மறுசீரமைக்க வேண்டுமெனவும் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×