என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் அருகே அம்மன் கோவிலில் கூழ்குடித்த 28 பெண்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுச்செட்டிசத்திரம் தாமல் அருகே உள்ள தைப்பாக்கம் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் கோயில் உள்ளது.

    இங்கு ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒருவர் கிராம மக்களுக்கு கூழ் ஊற்றினார்.

    இதில் கூழ் குடித்த ஏராளமானோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

    இன்று காலை உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட யமுனா, கவிதா, முனியம்மாள், கிருஷ்ணவேணி, சிவகாமி, ரேவதி, அம்மு உள்ளிட்ட 28 பேர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுபற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினர் உடனடியாக மருத்துவக் குழுவினரை கிராமத்திற்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறும்போது, கூழினால் ஏற்பட்ட ஒவ்வாமை மற்றும் புட் பாய்சன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்த பின்னர்தான் அது குறித்து தெரிய வரும் எனக் கூறினர்.

    கூழ் குடித்து பாதிக்கப்பட்ட இன்னும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

    மாமல்லபுரம் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் வசித்து வந்தவர் காமாட்சி (42). கணவரை பிரிந்த அவர் கள்ளக்காதலன் விவேக்குடன் வாழ்ந்து வந்தார். இவர்களது சொந்த ஊர் செங்கல்பட்டை அடுத்த அனுமந்த புத்தேரி ஆகும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் காமாட்சி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலன் விவேக் தலைமறைவாகி இருந்தார்.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செங்கல்பட்டில் பதுங்கி இருந்த விவேக்கை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    அனுமந்தபுத்தேரியில் எங்களது கள்ளக்காதல் பற்றி அனைவருக்கும் தெரிந்ததால் இருவரும் கணவன்-மனைவி எனக்கூறி மாமல்லபுரத்தில் வீடு எடுத்து தங்கினோம். மது அருந்திவிட்டு அடிக்கடி பூஞ்சேரியில் ஒதுக்குப் புறமாக உள்ள வீட்டில் உல்லாசத்தில் ஈடுபடுவோம்.

    நேற்று முன்தினம் முன்பு போல் காமாட்சி ஒத்துழைப்பு தர மறுத்தார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவளிடம் வேறு நபர்களிடம் ஏதும் பழக்கம் இருக்கிறதா? அப்படி இருந்தால் விட்டுவிடு என்று கூறினேன்.

    இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து படுத்திருந்த காமாட்சி தொண்டையில் குத்தினேன். பின்னரும் ஆத்திரம் தீராமல் கோழி அறுப்பது போல கழுத்தின் இரு புறமும் அறுத்து கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ரியல் ஷாட் என்ற பெயரில் மாமல்லபுரம் கடற்கரையில் ஆபாசமாக படம் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையில் சிற்பங்கள் மற்றும் குடவரை கோவில்களின் பின்னனியில் தத்ரூப மாக போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்காக புதுமணத் தம்பதியர் பலர் சென்னை, பெங்களுர், கேரளா,ஆந்திரா, போன்ற பல பகுதிகளில் இருந்து கேமராமேன்களுடன் மாமல்லபுரம் வந்து தங்குகிறார்கள்.

    இவர்கள் எடுக்கும் காட்சிகளுக்கு சன்ரைஸ் ஷாட், ரியல் ஷாட், கேன்டிட் ஷாட் என பல பெயர்கள் வைத்துள்ளனர். இந்த படப்பிடிப்பின் போது எல்லை மீறி ஆபாசமாகவும், நெருக்கமாகவும் படம் பிடிக்கப்படுவதாக தெரிகிறது.

    இதனால் கேளி, கிண்டல், ஆபாச பேச்சு போன்ற செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு சில நேரங்களில் அடிதடியாகவும் மாறுகிறது. இது விசாரணைக்கு வரும் போது அனைவரும் பெரிய இடத்து நபர்களாகவும், புதுமணத் தம்பதியராகவும் உள்ளனர்.

    இது குறித்து மாமல்லபுரம் டி.எஸ்.பி சேகர் கூறும் போது, “சாதாரண உடையில் ஆண்,பெண் போலீசார் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் கடற்கரை, மற்றும் புராதன சின்னங்கள் பகுதியை கண்காணித்து வருகிறார்கள்.

    அப்போது எல்லை மீறி ஆபாசமாக படம் பிடிப்போரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகிறோம். அவர்கள் உண்மையிலேயே தம்பதியர்களாக இருந்தால் பெற்றோரிடம் போனில் பேசவைத்து அவர்களுடன் சேர்ந்து வரும்படி அறிவுறுத்தி அனுப்புகிறோம்.

    அதேநேரம் குறும்படம், டாக்குமென்டரி எடுக்கும் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்தால் முதல் தடவை எச்சரிக்கையும் பின்னர் சட்டப்படி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

    காஞ்சிபுரத்தில் பைக் மீது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் துளசிதர். இவர் தனது நண்பர் சுகுமாருடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்ய வந்தார்.

    காஞ்சிபுரம் எல்லையான கீழ்அம்பி என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த துளசிதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் சுகுமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    தம்பியை கிண்டல் செய்ததை கண்டித்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவான்மியூர்:

    பெருங்குடியை அடுத்த கந்தன்சாவடி சோழன் நகர், திரு.வி.க. தெருவில் வசித்து வந்தவர் சத்யா (வயது27). எலக்ட்ரீசன். இவருடன் அவருடைய தம்பிகள் சரவணன், முகுந்தன் ஆகியோரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்கள் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் ஆகும்.

    கடந்த 4-ந்தேதி சரவணனை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் கேலி - கிண் டல் செய்தனர். இதனை சத்யா கண்டித்தார்.

    இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் வெங்கடேசனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சத்யா, சரவணனை வெளியே இழுத்து வந்து சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகுந்தன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

    தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சத்யாவும், சரவணனும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சத்யா பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக கந்தன்சாவடியை சேர்ந்த வெங்கடேசன், சிவக்குமார், கோபாலகிருஷ்ணன், சூர்யா, விஸ்வநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப், ராமுவை தேடி வருகிறார்கள். தம்பியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    துரைப்பாக்கத்தில் மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் மேட்டு குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் பிரசாத் (9) இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் தண்ணீர் கேனை எடுக்க  நடந்து சென்றான். அப்போது கால் தவறி சாலையில் இருந்த கல் மீது விழுந்தான்.

    இதில் அவனுக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவனை மீட்டு சிகிச்கைக்காக அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தான்.

    இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தாம்பரம் அருகே குடியிருப்புக்கு மத்தியில் உள்ள பெண் டாக்டர் வீட்டில் 72 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம், திருமுருகன் சாலை சி.வி.ராமன் தெருவில் வசித்து வருபவர் சாரதா. டாக்டர். தனியாக வசித்து வருகிறார். இவர் படப்பையில் சொந்தமாக கிளினிக் வைத்து உள்ளார். தினமும் மாலையில் வீட்டில் இருந்து செல்லும் சாரதா இரவு 11 மணியளவில் திரும்பி வருவது வழக்கம்.

    நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு சாரதா, கிளினிக்கிற்கு சென்றார். இரவு திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 72 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை காணவில்லை.

    சாரதா வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் பழைய குற்றவாளிகள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு விசாரணை நடந்து வருகிறது.

    குடியிருப்புக்கு மத்தியில் உள்ள பெண் டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீஞ்சூர் நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு பெரம்பூரில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ 20 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
    நேபாள நிலச்சரிவில் சிக்கிய காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் ஊர் திரும்பினர். அவர்களை ரெயில் நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் திருக்காளி மேடு, சென்னை அமைந்தகரை, குடியாத்தம் ஆகிய ஊர்களை சேர்ந்த 17 பக்தர்கள் கடந்த மாதம் 20-ந் தேதி நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர்.

    கடந்த 26-ந்தேதி காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கோபி, சுகுணா, சங்கரி, செல்லம்மாள், மகேஸ்வரி, துளசி, ராமலிங்கம், குமாரி, ஜெயலட்சுமி, பத்மநாபன் ஆகிய 10 பேர் மட்டும் முக்திநாத் மலை பகுதி கோவிலுக்கு சென்றனர்.

    அப்போது ஏற்பட்ட திடீர் மழையால் மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் காஞ்சீபுரம் பக்தர்கள் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே சிக்கி கொண்டனர்.

    அவர்கள் வாட்ஸ்அப் மூலம் காஞ்சீபுரத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும், குளிர்மிகவும் அதிகமாக உள்ளதாகவும், உணவு சரியில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் பக்தர்கள் தவித்து வந்த தகவலை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அவர்களுக்கு உதவிடும் வகையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அவர்கள் இது குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டனர். மேலும் பக்தர்களை பத்திரமாக மீட்டு கொண்டுவர முதல்வர் வழங்கிய ரூ.2.30 லட்சத்தை தூதரகத்தில் செலுத்தினர்.

    இதனையடுத்து மலையில் சிக்கிய பத்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 17 பக்தர்களும், ரெயிலில் நேற்று சென்னை வந்தனர். பின்னர் காஞ்சீபுரத்தை சேர்ந்த 10 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தனர்.

    ரெயில் நிலையத்தில் காத்திருந்து உறவினர்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றனர்.

    நிலச்சரிவில் சிக்கி மீண்டு வந்த அவர்கள் கூறும்போது, “நிலச்சரிவால் மலையில் சிக்கி இருந்த போது மிகவும் பயந்து போனோம். அங்கு இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இதனால் மேலும் நாங்கள் கஷ்டப்பட்டோம். பக்தர்களின் துன்பத்தை அறிந்து தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களை பத்திரமாக காஞ்சீபுரம் கொண்டு வந்து சேர்த்தார். எங்களுக்கு உதவிய தமிழக முதல்வரை நாங்கள் என்றைக்கும் மறக்க மாட்டோம்” என்று நெகிழ்சியுடன் கூறினர்.
    பாலாற்றில் தடுப்பணையை கண்டித்து ரெயில் குடிநீர் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு:

    வாணியம்பாடி அடுத்த பில்லூரில் பாலற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணையை கட்டி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் தமிழ்தேச மக்கள் கட்சி, த.மு.மு.க. ஆகியவை இணைந்து செங்கல்பட்டு அருகே பாலூரில் உள்ள மத்திய அரசின் ரெயில் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாலாற்றில் தடுப்பணை கட்டிய ஆந்திர அரசை கண்டித்தும். இதில் தலையிடாமல் உள்ள மத்திய அரசை கண்டித்தும் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாலாற்று படுகையில் உள்ள இந்த தொழிற்சாலையால் சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படு வதாகவும் குற்றச்சாட்டு கூறினர்.

    தகவல் அறிந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட 33 பேரை கைது செய்தனர். அவர்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் பணம் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சிபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். பில்டிங் கான்டிராக்டர். இவர் நேற்று காரில் திருக்கழுக்குன்றதிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

    வழியில் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு கைப்பையில் வைத்து, காரின் சீட்டில் வைத்தார். காஞ்சிபுரம் காந்திரோட்டில் காரை ரோட்டின் ஓரம் நிறுத்தி ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காருக்கு வந்தார்.

    அப்போது காரின் இடது புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு காரின் கதவை திறந்து பார்த்தபோது காரில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பிறகு பதட்டத்துடன் செல்போன் மூலம் சின்ன காஞ்சிபுரம் போலீசாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். காஞ்சிபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஸ்ரீநாத், சின்னகாஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

    காருக்கு அருகே உள்ள சில கடைகளின் உரிமையாளர்களை இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி விசாரணை செய்தார். எதிரில் உள்ள சில கடைகளின் முன்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த கேமராக்கள் கார் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியை படம் பிடிக்க முடியாத நிலையில் இருந்தது.

    காஞ்சிபுரத்திலிருந்து போலீஸ் துப்பறியும் நாய் வந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் நகரின் மையப் பகுதியான, மக்கள் நெருக்கடியான காந்திரோட்டில் காரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் பணம் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இந்த மாத இறுதியில் தமிழக-இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகள் டெல்லியில் ஒன்றாக சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மீனவர்கள் பிரச்சினையில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்தது.

    சில தினங்களுக்கு முன்பு நான் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினேன். அப்போது அவர் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகளை காண எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    அடுத்த கட்டமாக தமிழக- இலங்கை மீனவர்களை ஒன்றாக வைத்து பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மாத இறுதியில் தமிழக-இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகள் டெல்லியில் ஒன்றாக சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பல ஆண்டு காலமாக உள்ள தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    ஆந்திராவுக்கு சென்ற 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்துக்கு புறம்பான முறையில் மரம் வெட்ட செல்பவர்களை கைது செய்வதில் தவறில்லை. ஆனால் கோவிலுக்கு சென்றவர்களை கைது செய்தது தவறு. தமிழர்களை கைது செய்யும் போது அவர்கள் என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களின் பெயர் மற்றும் முகவரியையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இரு மாநிலங்களிடையே பரஸ்பர முறையில் நல்லுணர்வு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூங்கிய போது லாரி தீப்பிடித்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    வாலாஜாபாத்தை அடுத்த புலியம்பாக்கத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார்.

    இவர் படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கண்ணாடி லோடு ஏற்றுவது வழக்கம். நேற்று இரவு கம்பெனிக்கு லோடு ஏற்ற தேவராஜ் லாரியை ஓட்டி சென்றார். இன்று அதிகாலை பொருட்கள் ஏற்ற இருந்ததால் கம்பெனி அருகே லாரியை நிறுத்தி விட்டு அதிலேயே தேவராஜ் தூங்கினார்.

    இந்த நிலையில் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    அப்போது லாரிக்குள் தேவராஜ் கரிக்கட்டையாக இறந்து கிடப்பது தெரிந்தது. லாரியில் தீப்பிடித்த போது வெளியே வரமுடியாமல் அவர் தீயில் சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

    லாரியில் தீப்பிடித்தது எப்படி? நாசவேலை காரணமா? என்பது குறித்து மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


    ×