என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.

    ஆலந்தூர்:

    புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலம் சட்டமன்ற கூட்டத்தொடர் பட்ஜெட்டை நிர்ணயிப்பதற்காக உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரை சந்தித்து பேசினேன்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதி வேண்டும் என்று கோரியுள்ளோம். அவர்கள் செய்து கொடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அதற்கான ஒப்புதல் இரண்டு அல்லது மூன்று நாள்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சட்டமன்ற கூட்டத் தொடரை கூட்டுவதற்கான தேதி நாளைய தினம் அமைச்சர்களுடன் ஆலோசித்து குறிப்பிடப்படும்.

    ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவை சந்தித்து புதுச்சேரி மாநிலத்துக்குரெயில்வே திட்டங்கள் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

    காரைக்கால் அகலப்பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதை முடித்து தர அதற்காக முழு தொகையை ரெயில்வே துறையே ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதே போல் புதுவையில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்துக்கு புதிய ரெயில்கள் விட வேண்டும் என்று கேட்டு உள்ளோம்.

    ரெயிலில் புதுவையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய 4½ மணி நேரம் முதல் 5 மணி நேரம் ஆகிறது. இதை 2 மணி நேரமாக குறைந்த அதிவேக ரெயில் சேவை வேண்டும். மேலும் இப்போது ஓடி கொண்டிருக்கும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

    புதுச்சேரி ரெயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வைத்துள்ளேன். இதை நிறைவேற்றி தருவதாக நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறை முகத்துக்காக கப்பல் மூலம் கண்டெய்னர் இறக்குவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளோம். அதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகிற 22-ந் தேதி ஒரு விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகிறார். அப்போது ஒப்பந்ததத்தில் கையெழுத்திட இருக்கிறோம்.

    மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதுச்சேரிக்கு இந்திய இண்டஸ்டிரிஸ் ஆப் மேனேஜ்மெண்ட் வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளேன். அதை அவர் கவுன்சிலிங்குக்கு அனுப்பி முடிவு எடுப்பதாக கூறி உள்ளார்.

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை பல மாநிலங்கள் எதிர்க்கிறது. ஏனென்றால் 3 முக்கிய அம்சங்கள் உள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி கூடங்களுக்கு சலுகைகள் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதை புதிய கல்வி கொள்கையில் நீக்கி உள்ளனர்.

    சமஸ்கிருதத்தை கட்டாய மாக்குவது, உடற்பயிற்சிகளை கட்டாயமாக்குவது இதையெல்லாம்தான் பலர் எதிர்க்கிறார்கள். புதுவை மாநிலத்தின் முடிவு பற்றி கலந்து ஆலோசித்து பின்பு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த அரியகுன்றத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சசிக்குமார் (வயது 32). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும் எச்சூர் கிராமத்தை சேர்ந்த மேகா மகள் சத்யாவுக்கும் (22) காதல் ஏற்பட்டது. இருவரும் உறவினர்கள் ஆவர்.

    கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். முறை தவறிய அவர்களது காதல் விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரிந்தது. சசிக்குமார்-சத்யாவை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாது என்று நினைத்து காதல் ஜோடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை உறவினர்கள் தேடி வந்தனர். இது பற்றி திருக்கழுக்குன்றம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் குன்றத்தூர் அருகே வண்டலூர் செல்லும் சாலை முட்புதரில் சசிக்குமாரும், சத்யாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்போரூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த மானாம்பதிபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த கழனிபாக்கம் கிராமம் லட்சுமிநாராயணபுரம் பகுதியைச்சேர்ந்தவர் துரை. இவர் ஊராட்சியின் 6-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருடைய மகன் அரவிந்த் (வயது 22)எலக்ட்ரீசியன். குண்ணப்பட்டு அருகே உள்ள ஜப்பான் சிட்டி வளாத்தில் நடைபெற்று வரும் தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று மாலை அவர் பணியில் இருந்தபோது வளாகத்தில் தேங்கியிருந்த நீரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதனை அறியாமல் அரவிந்த அதில் கால்வைத்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்த மானாம்பதிபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை திருவான்மியூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 36). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டார். அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. ராதா கிருஷ்ணன் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர். இதுபற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பிரியாணி கடை உரிமையாளர் காரில் இருந்த ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

    தாம்பரம்:

    சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 45). கிழக்கு தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    தமிழ்ச்செல்வன் நேற்று காரில் கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலையில் பூண்டி பஜாரில் உள்ள கடைக்கு வந்தார். காரில் இருந்து அவர் இறங்கிய உடன் டிரைவர், காரில் எதிரில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.

    பின்னர் அந்த கடையில் டீ குடித்து விட்டு டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்து இருந்த ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் 4 வெடிகுண்டுகள், 3 பட்டாக்கத்திகளுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதியா? என போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்போரூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில் நள்ளிரவில் சிலர் கும்பலாக சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஒரு இடத்தில் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் சுற்றிவளைத்து துப்பாக்கிமுனையில் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் வெடிகுண்டுகள், பட்டாக்கத்திகள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    அவர்கள் 5 பேரும் கேளம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24), அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல்சையது (21), ஷாகுல் ஹமீது (24), அன்சாரி (21), ஆஷிக் ரகுமான் (21) என தெரிந்தது. இவர்களில் சுரேஷ் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின்கீழ் சிறை சென்று திரும்பியவர். சுரேஷ் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னை அம்பத்தூரில் நடந்த இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவருக்கும், சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் விடுதலையாகி வெளியேவந்த சுரேஷிடம் புழல் சிறையிலிருந்து அந்த குற்றவாளி போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு சென்றால் அங்கு ஒருவன் மூன்று கத்தியும், வெடிகுண்டுகளுடன் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டும் கொடுப்பான். அதை வாங்கிவந்து கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்றால் இரவு 10 மணிக்கு மேல் தனது ஆட்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு வந்து வாங்கிக்கொள்வார்கள் என்று சுரேஷிடம் கூறியுள்ளார்.

    இதன்படி புதுச்சேரியில் 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 3 பட்டாக்கத்திகளை வாங்கிய சுரேஷ் நேற்றுமுன்தினம் இரவு கேளம்பாக்கம் ஓட்டல் ஒன்றின் அருகே காத்திருந்தார். அப்போது சென்னை பாடியிலிருந்து காரில் வந்த 4 பேர் சுரேஷிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிக் கொண்டனர்.

    இரவு நேரம் என்பதால் இந்த ஆயுதங்களுடன் சென்றால் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என கருதிய 5 பேரும், நாச்சியார் குளம் அருகே உட்கார்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு அங்கேயே காத்திருந்தனர். இவர்களை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அங்குவந்த போலீசார் 5 பேரையும் துப்பாக்கிமுனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர், 3 பட்டாக்கத்திகள், 4 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுரேசை தவிர்த்து பிடிபட்ட மற்ற 4 பேரும் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் கூட்டாளிகள் என்பதால் சென்னையில் இந்து இயக்க தலைவர்கள் யாரையாவது கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்கள் பெறப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    மேலும் புழல் சிறையிலிருந்து இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு குற்றவாளி போனில் பேசியது எப்படி? என சிறை காவலர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். புதுச்சேரியில் சுரேசிடம் ஆயுதங்களை கொடுத்தது யார்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு பெண் கவுன்சிலர் மகனுடன் குடிநீர் வழங்க கோரி தர்ணா போராட்டம் நடத்தினார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளுக்கு பழவேலி, மாமண்டூர், ஒழலூர் பகுதியில் இருந்து கிணறுகள் மூலம் குடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நகராட்சி பகுதி முழுவதும் சரிவர குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 11-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சந்தியா இன்று காலை தனது மகன் உதயகுமாருடன் செங்கல்பட்டு நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் நித்யா மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர் சந்தியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து கவுன்சிலர் சந்தியா கூறும் போது, செங்கல்பட்டு நகராட்சி முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.

    அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதே போல் குப்பைகள் அள்ளப்படாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது என்றார்.
    மோசமான வானிலை காரணமாக குவைத் விமானம் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து குவைத்துக்கு இன்று அதிகாலை விமானம் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 252 பயணிகள் செல்ல காத்து இருந்தனர்.

    ஆனால் குவைத்தில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக காலை தாமதமாக 10.30 மணிக்கு வரும் எனவும் மீண்டும் அந்த விமானம் குவைத்துக்கு 11.30 மணிக்கு தாமதமாக புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த கோவளத்தில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் 5 பேர் கும்பல் காரில் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து சென்ற கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.

    காரை சோதனை செய்த போது அதில் பட்டாகத்தி மற்றும் பழைய டயர் நடுவில் சிறிய வாளியில் நாட்டு வெடி குண்டு இருந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பிடிபட்ட 5 பேரும் சேர்ந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு பாண்டிச்சேரியில் வெடிகுண்டு கொடுத்தது யார்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட கியுபிராஞ்ச் போலீசாரும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்து கின்றனர்.

    கைதான 5 பேரிடமிருந்தும் ஒரு கார், 4 நாட்டு வெடிகுண்டுகள், 3 பட்டாக்கத்தி, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள கால்வாய் பள்ளத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    பொத்தேரியில் முன்விரோதம் காரணமாக எஸ்.ஆர்.எம். கல்லூரிக்குள் புகுந்து மாணவரை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    தாம்பரத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் கணேசன். இவர் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலருக்கும் முன் விரோதம் இருந்தது.

    நேற்று மாலை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று கல்லூரிக்குள் புகுந்தது. அவர்கள் கத்தி, ஆக்கி மட்டை போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். முகத்தை துணியால் மூடி இருந்தனர்.

    அப்போது வகுப்பறையில் இருந்து கணேசன் வெளியே வந்தார். அவரை 10 பேர் கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியது. ஆக்கி மட்டையாலும் தாக்கினார்கள். இதில் கணேசனுக்கு தலை, மார்பு ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்தது. வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    கல்லூரிக்குள் புகுந்து மாணவர் தாக்கப்பட்டத்தை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனே 10 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அவசர பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் விசாரணை நடத்தினார். மாணவர் கணேசனிடம் போலீசார் விசாரித்தபோது, கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் செல்வமணி, லட்சுமணன், பல்லாக்கு உள்பட 10 பேர் தாக்கியதாக கூறினார். 3 பேரை தவிர மற்றவர்கள் அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
    கள்ளக்காதல் தகராறில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    தாம்பரம்:

    சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் என்ற சேகர் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு சரளா என்ற மனைவியும், பிரபாகரன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகே சரளாவின் தங்கை பாலாமணி (38), கணவர் ஸ்டாலின் குழந்தைகள் கிஷான்ராஜ், திரிசா ஆகியோருடன் வசித்து வந்தார்.

    பாலாமணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஏற்பட்ட தகராறில் பாலாமணியை விட்டு அவரது கணவர் ஸ்டாலின் பிரிந்து சென்று விட்டார்.

    இதன் பிறகு மனைவியின் தங்கை பாலாமணிக்கு ஞானசேகர் அடைக்கலம் கொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்தனர்.

    பாலாமணியை சித்தாலப்பாக்கத்தில் இருந்து தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் பெரியார் நகர் 3-வது தெருவில் தனியாக வீடு எடுத்து ஞானசேகர் குடித்தனம் வைத்தார். அவருக்கு அதே பகுதியில் மளிகைக்கடையும் வைத்து கொடுத்தார்.

    மளிகைக்கடையில் பாலாமணி இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபருடன் பாலாமணி அடிக்கடி போனில் பேசியுள்ளார்.

    இது ஞானசேகருக்கு தெரியவந்தது. அவர் பாலாமணியை கண்டித்தார். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து வாலிபருடன் பாலாமணி பேசிவந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு ஞானசேகர் பெரியார் நகருக்கு சென்று பாலாமணியுடன் தங்கினார். இரவில் இருவரும் மது அருந்தினர். குடிபோதையில் ஞானசேகர் பாலாமணியிடம், ‘வேறுவாலிபருடன் தொடர்பு வைத்திருக்கிறாயே’ என கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.

    அப்போது பாலாமணி ‘அப்படித்தான் தொடர்பு வைத்துக் கொள்வேன்’ என கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகர் அரிவாளால் பாலாமணி கழுத்தில் வெட்டியதாக தெரிகிறது. இதில் கழுத்து அறுபட்டு ரத்தவெள்ளத்தில் பாலாமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நேற்று காலையில் ஞானசேகர் பாலாமணி பிணத்தை வீட்டில் போட்டு விட்டு முடிச்சூர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். காலையில் நீண்ட நேரமாகியும் கடை திறக்காததால், அப்பகுதி மக்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு பாலாமணி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது முடிச்சூர் பெட்ரோல் பங்க் அருகே சுற்றிக்கொண்டிருந்த ஞானசேகரனை கைது செய்தனர்.

    ஊரப்பாக்கத்தில் 16¾ பவுன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த ஊரப்பாக்கம், பிரியாநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அனுஷியா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். அனுஷியாவின் தந்தை பாலகிருஷ்ணன், தாய் சரஸ்வதி (வயது 56) ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு ஊரப்பாக்கம் வந்து மகளுடன் தங்கி இருந்தனர். அவர்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம்.

    கடந்த 3 நாட்களுக்கு முன் பாலகிருஷ்ணன் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். சரஸ்வதி மகளுடனே தங்கி இருந்தார். இவர்களுடன் செல்வராஜின் தம்பி மோகனும் இதே வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். செல்வராஜ், அனுஷியா, மோகன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டனர்.

    வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி முதல் தளத்தில் வீடு இருப்பதால் வழக்கம்போல வெளிப்புற கிரில் கதவை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் இருந்தார். அனுஷியா இரவு 7 மணி அளவில் வீடு திரும்பியபோது, பூட்டியிருந்த கிரில் கதவிலும், அருகிலும் ரத்தக்கறையாக இருந்தது. அனுஷியா கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சரஸ்வதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சரஸ்வதி கழுத்தில் தங்கச்சங்கிலி இருந்ததால் நகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் அவர் அணிந்திருந்த சில நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட சரஸ்வதி கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி மற்றும் கையில் வளையல் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்காது என்று கருதி நாங்கள் விசாரணையை வேறு திசையில் நடத்தினோம். உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட பகுதியை சோதனை செய்தபோது அவர் காதில் அணிந்து இருந்த கம்மல் திருட்டுப்போயிருந்தது தெரிந்தது.

    இதனால் அவரது மகள் அனுஷியாவிடம் இதுபற்றி விசாரித்தோம். சரஸ்வதி எப்போதும் கழுத்தில் 2 தங்கச்சங்கிலி மற்றும் கையில் ஒரு மோதிரம் அணிந்து இருப்பார். ஆனால் அவரது கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி மட்டும் இருந்தது, மோதிரம், கம்மல் ஆகியவை இல்லை, வீட்டில் படுக்கை அறையில் இருந்த 11¾ பவுன் தங்க நகையும் காணவில்லை. அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த 11¾ பவுன் நகை என மொத்தம் 16¾ பவுன் தங்க நகை திருட்டுபோயுள்ளதாக அனுஷியா கூறினார்.

    ஆகவே நகைக்காகவே சரஸ்வதி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொலையாளியை பிடிப்பதற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கொலை நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. சரஸ்வதியின் உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் கொலையாளி பிடிபடுவான்.

    இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.

    ×