என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாள நிலச்சரிவில் சிக்கிய காஞ்சீபுரத்தை சேர்ந்த 10 பேர் ஊர் திரும்பினர்
    X

    நேபாள நிலச்சரிவில் சிக்கிய காஞ்சீபுரத்தை சேர்ந்த 10 பேர் ஊர் திரும்பினர்

    நேபாள நிலச்சரிவில் சிக்கிய காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் ஊர் திரும்பினர். அவர்களை ரெயில் நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் திருக்காளி மேடு, சென்னை அமைந்தகரை, குடியாத்தம் ஆகிய ஊர்களை சேர்ந்த 17 பக்தர்கள் கடந்த மாதம் 20-ந் தேதி நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர்.

    கடந்த 26-ந்தேதி காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கோபி, சுகுணா, சங்கரி, செல்லம்மாள், மகேஸ்வரி, துளசி, ராமலிங்கம், குமாரி, ஜெயலட்சுமி, பத்மநாபன் ஆகிய 10 பேர் மட்டும் முக்திநாத் மலை பகுதி கோவிலுக்கு சென்றனர்.

    அப்போது ஏற்பட்ட திடீர் மழையால் மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் காஞ்சீபுரம் பக்தர்கள் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே சிக்கி கொண்டனர்.

    அவர்கள் வாட்ஸ்அப் மூலம் காஞ்சீபுரத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும், குளிர்மிகவும் அதிகமாக உள்ளதாகவும், உணவு சரியில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் பக்தர்கள் தவித்து வந்த தகவலை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அவர்களுக்கு உதவிடும் வகையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அவர்கள் இது குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டனர். மேலும் பக்தர்களை பத்திரமாக மீட்டு கொண்டுவர முதல்வர் வழங்கிய ரூ.2.30 லட்சத்தை தூதரகத்தில் செலுத்தினர்.

    இதனையடுத்து மலையில் சிக்கிய பத்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 17 பக்தர்களும், ரெயிலில் நேற்று சென்னை வந்தனர். பின்னர் காஞ்சீபுரத்தை சேர்ந்த 10 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தனர்.

    ரெயில் நிலையத்தில் காத்திருந்து உறவினர்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்றனர்.

    நிலச்சரிவில் சிக்கி மீண்டு வந்த அவர்கள் கூறும்போது, “நிலச்சரிவால் மலையில் சிக்கி இருந்த போது மிகவும் பயந்து போனோம். அங்கு இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இதனால் மேலும் நாங்கள் கஷ்டப்பட்டோம். பக்தர்களின் துன்பத்தை அறிந்து தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களை பத்திரமாக காஞ்சீபுரம் கொண்டு வந்து சேர்த்தார். எங்களுக்கு உதவிய தமிழக முதல்வரை நாங்கள் என்றைக்கும் மறக்க மாட்டோம்” என்று நெகிழ்சியுடன் கூறினர்.
    Next Story
    ×