search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    இந்த மாத இறுதியில் தமிழக-இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகள் டெல்லியில் ஒன்றாக சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மீனவர்கள் பிரச்சினையில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்தது.

    சில தினங்களுக்கு முன்பு நான் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினேன். அப்போது அவர் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகளை காண எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    அடுத்த கட்டமாக தமிழக- இலங்கை மீனவர்களை ஒன்றாக வைத்து பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மாத இறுதியில் தமிழக-இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகள் டெல்லியில் ஒன்றாக சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பல ஆண்டு காலமாக உள்ள தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    ஆந்திராவுக்கு சென்ற 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்துக்கு புறம்பான முறையில் மரம் வெட்ட செல்பவர்களை கைது செய்வதில் தவறில்லை. ஆனால் கோவிலுக்கு சென்றவர்களை கைது செய்தது தவறு. தமிழர்களை கைது செய்யும் போது அவர்கள் என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களின் பெயர் மற்றும் முகவரியையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இரு மாநிலங்களிடையே பரஸ்பர முறையில் நல்லுணர்வு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×