என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருப்போரூர் அருகே மாடு மேய்ந்த தகராறில் கோஷ்டி மோதலில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த ஆமூர் முந்திரிதோப்பு பகுதியைச்சேர்ந்தவர் பூபதி இவருக்கு சொந்தமான மாடு அதே பகுதியைச் சேர்ந்த ராணியின் வயலில் மேய்ந்தது.

    இது தொடர்பாக ராணி, பூபதி தரப்பினர் மானாம்பதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது இரு தரப்பினருக்கும் போலீஸ் நிலைய வளாகத்திலேயே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் பூபதி தலையில் காயம் ஏற்பட்டது. இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மானாம்பதி போலீசார் வழக்குபதிவு செய்து ராணியின் மகன் ஞானபிரகாசம் அவருடைய நண்பர்கள் ரஞ்சித், மதன், மற்றொருதரப்பை சேர்ந்த பூபதியின் தம்பி சண்முகம் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    சோழிங்கநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதலில் மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    துரைப்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் குமரன் நகரில் வசித்து வருபவர் திருமலை. லாரி டிரைவர். இவரது மகள் விசித்ரா (வயது 7). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் தீபக் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இவர்களது சொந்த ஊர் செங்கல்பட்டு ஆகும்.

    பள்ளியில் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து திருமலை, இன்று அதிகாலை மகன்- மகளுடன் மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டுக்கு புறப்பட்டார்.

    சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    இதில் திருமலை, விசித்ரா, தீபக் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த விசித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கிண்டி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
    திருவான்மியூர்:

    சென்னை, கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பினர்.

    இதில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் எரிந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் என்ஜினீயரிடம் நகை பறித்த வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப் பேட்டையை சேர்ந்த கார்த்திக்கை கண்ணகிநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது உடல் நலக்குறைவால் போலீஸ் நிலையத்திலேயே கார்த்திக் இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த தினேஷ், மோகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் இதில் தொடர்புடைய அவர்களது நண்பர்கள் 4 பேரை தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    அச்சரப்பாக்கம் அருகே கார் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் படுகாயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    அச்சரப்பாக்கம்:

    திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சுந்தரராஜ்குமார் (வயது 28). கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சர்மா (26). இவர்கள் இருவரும் தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் விற்பனை செய்து வந்தனர். நேற்று இவர்கள் இருவரும் தங்கள் நண்பரான திருச்சியை சேர்ந்த ரவீந்திரன்(30) என்பவருடன் தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் விற்பனை சம்பந்தமாக காரில் சென்னைக்கு வந்தனர். சர்மாவுக்கு சொந்தமான அந்த காரை சுந்தரராஜ்குமார் ஓட்டி வந்தார்.

    நேற்று மாலை 3 மணியளவில் அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழுப்பேடு அருகே வரும்போது கார் நிலைத்தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சர்மா, சுந்தரராஜ்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரவீந்திரன் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சர்மா, சுந்தரராஜ்குமார் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த ரவீந்திரன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதியில் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதி பார்வையாளர் 3-வது நுழைவு வாயில் அருகே நேற்று மாலை அட்டை பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை கண்ட மத்திய தொழிற்படை போலீசார், அந்த பெட்டி யாருடையது? என்று விசாரித்தனர். ஆனால் அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை.

    இதனால் மர்ம அட்டை பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அட்டை பெட்டியை சுற்றிலும் யாரும் செல்லாதபடி தடுப்பு அமைக்கப்பட்டது.

    இதை கண்டு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளும், பார்வையாளர் பகுதிக்கு வந்தவர்களும் அலறி அடித்து ஓடினார்கள். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பெட்டியை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

    பின்னர் அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரெட்டி தயாரிக்கும் கருவி இருந்தது. பயணிகள் யாராவது அந்த பெட்டியை மறந்து போய் தவற விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அந்த அட்டை பெட்டி, விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவும் இதே இடத்தில் மர்ம பை ஒன்று கிடந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் அதை சோதனை செய்தபோது அதில் துணிகள் இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த யாசிர் என்பவர் ஓடி வந்து, “அந்த பை என்னுடையது. மகன் வெளிநாடு சென்றதால் வழி அனுப்ப வந்தேன். பார்வையாளர் பகுதியில் பையை எடுத்துச்செல்ல அனுமதி மறுத்ததால் வெளியே வைத்து விட்டு சென்றேன்” என்று கூறினார். இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்த பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    வாலாஜாபாத் அருகே வேன் கவிழ்ந்து விபத்தில் சிகிச்சை பலனின்றி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த புரிசை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரகாஷ். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் மினிலாரி டிரைவராக வேலை பார்த்தார்.

    வாலாஜாபாத்தில் இருந்து மினிலாரியில் ஊழியர்களை ஏற்றி கொண்டு கம்பெனிக்கு சென்றார். அப்போது மஞ்சமேடு தரைப்பாலம் அருகே மினிலாரி சென்ற போது டிரைவர் பிரகாஷ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

    இதில் பிரகாஷ், சுந்தர மூர்த்தி, ஜெயகுமார்,ஆறுமுகம், அய்யப்பன, சுரேஷ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி டிரைவர் பிரகாஷ் இறந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    உத்திரமேரூரில் இருந்து நாவலூருக்கு மரப்பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் சென்றது.

    திருப்போரூரை அடுத்த மடையத்தூர் அருகே சென்ற போது செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் கம்பெனி வேன் திடீரென சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேன் சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த லோடுமேன் மூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.
    கண்ணகி நர்க போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
    திருவான்மியூர்:

    சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக்(வயது21). இவரை துரைப்பாக்கத்தில் பெண் என்ஜீனியரை தாக்கி நகை பறித்த வழக்கில் கடந்த 22-ந்தேதி இரவு கண்ணகி நகர் போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது திடீரென கார்த்திக் இறந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கார்த்திக்கின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். விசாரணை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பெண் என்ஜினீயரிடம் நகை பறித்த வழக்கில் கண்ணகி நகரை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மர்ம கும்பல் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    இதில் குண்டுகள் வெடித்து சிதறியதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் வெளியே வந்தனர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் சேர்ந்து தீயை அணைத்தனர். 10 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதில் 5 மோட்டார் சைக்கிள்கள் போலீசாருக்கு சொந்தமானது என்று தெரிகிறது. மற்றவை குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

    பைக்குகள் தீப்பிடித்து எரிந்த போது 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அருகில் நிறுத்தப்பட்டு இருந்தன. உடனடியாக அவற்றை போலீசார் அப்புறப்படுத்தியதால் தப்பியது.

    விசாரணைக் கைதி கார்த்திக் இறந்ததால் ஆந்திரம் அடைந்த மர்ம கும்பல் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக பழைய குற்றவாளிகள் பட்டியலை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஏகனாபுரம் ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவாஜி. நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பெருமாள் கோவில் தெருவுக்கு வந்தது. அவர்கள் டவுசர் மட்டும் அணிந்து இருந்தனர். உடல் முழுவதும் எண்ணெய் தடவி இருந்தனர்.

    6 பேரும் 3 பிரிவாக பிரிந்து ஒவ்வொரு வீட்டு உள் தாழ்பாளை உடைத்து புகுந்தது. சிவாஜி வீட்டுக்குள் சென்ற கொள்ளையர் அங்கு தூங்கி கொண்டிருந்த அவரது மகள் சீதா கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை வெட்டி எடுத்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியம்மாள் கழுத்தில் இருந்த தாலி செயினை வெட்டிய போது அவர் விழித்து கொண்டார். அவரை கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி நகையுடன் தப்பியது.

    பின்னர் பச்சையப்பன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை கொள்ளையடித்து சென்றது.

    பின்னர் அருகில் உள்ள ஒத்தவாடை தெருவில் வசிக்கும் சேகர், லட்சுமி, ஆனந்தன் ஆகியோரின் வீட்டு தாழ்பாளை உடைத்து புகுந்தனர். சேகர் வீட்டில் பீரோவை உடைத்த போது சத்தம் கேட்டு அவர் முழித்து கொண்டார். கொள்ளையர்களை பார்த்ததும் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    இதனால் கொள்ளையர்கள் 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பொது மக்களிடம் பிடிபடாமல் இருக்க கொள்ளையர்கள் உடலில் எண்ணெய் தடவி வந்து உள்ளனர்.

    கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்பட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    குன்றத்தூரில் சாலையை சீர் செய்ய கோரி தாம்பரம்- சோமங்கலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    குன்றத்தூர் வரதராஜ புரத்தில் சுமார் 1200 பேர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீர் செய்ய பொது மக்கள் குன்றத்தூர் ஊராட்சி அதிகாரியிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை தாம்பரம்- சோமங்கலம் சாலையில் குன்றத்தூர் வரதராஜ புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை சீர் செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 6 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் வெளி நாட்டு பணம் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று அதிகாலையில் சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த சிங்கமுத்து நடராஜன், ஜூபே உதின், மதார்சாதிக் உள்பட 6 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது அமெரிக்க டாலர்கள், யூரோ நாணயங்கள் ரூ.1 கோடி சிக்கியது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 6 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது? இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    துரைப்பாக்கத்தில் படுக்கை அறையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    சென்னை துரைப்பாக்கம் அறிஞர் அண்ணாநகர் கெனால்புரம் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 30) தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகும். இவருக்கு 2 மனைவிகள். ஒரு மனைவி தஞ்சாவூரில் வசிக்கிறார். மற்றொரு மனைவியுடன் ஸ்டாலின் சென்னையில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு ஸ்டாலின் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஸ்டாலின் ஒரு அறையிலும், அவரது மனைவி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் ஸ்டாலின் தூங்கிய அறைக்கு அவரது மனைவி சென்று பார்த்தார். அப்போது ஸ்டாலின் தரையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் தூக்கு கயிறு காணப்பட்டது. உடலில் நகக் கீறல்கள் இருந்தன.

    இது தொடர்பாக அவரது மனைவி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கர்நாடக மாநில அரசு காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக மாநில அரசு காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவேதான் மக்களின் கவனத்தை திசை திருப்பி தோல்வியை மறைத்து காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு படுதோல்வி அடையும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும்.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜனதா கலந்து கொள்ளாததற்கு காரணம் பா.ஜனதா இறையாண்மையை மதித்து செயல்படுகிறது. சட்ட திட்டத்துக்கு உட்பட்டு நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×