search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 1,206 கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு
    X

    கோவையில் 1,206 கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு

    • பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை,

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆழுர் மற்றும் கோட்டயம் பகுதியில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென கோழி இறப்பு அதிகளவில் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவையில் ஒரு பன்முக கால்நடை ஆஸ்பத்திரி, 96 மருந்தகம், 15 கால்நடை ஆஸ்பத்திரிகள், 25 கிளை சென்டர்கள், ஒரு கிளினிக்கல் சென்டர் ஆகியவை உள்ளன. இவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் மூலம் அருகே உள்ள கோழிப் பண்ணைகளில் தொடர்ந்து சென்று கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திடீரென ஏராளமான கோழிகள் இறந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர் நிலைகள் மற்றும் பிற இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு கோழிகள் கொண்டு செல்ல தடையின்மை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. கோழி பண்ணைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு வந்தால் 6 மாத காலம் அதன் தாக்கம் இருக்கும்.

    இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாளையாறு, மீனாட்சி புரம் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை கோவையில் எந்த பகுதியிலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×