search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்க விழா
    X

    தஞ்சை விளையாட்டு மைதானத்தில் இருந்து கலெக்டர் தீபக்ஜேக்கப் நடைப்பயணத்தை தொடங்கினார்.

    தஞ்சையில், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் தொடக்க விழா

    • நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதம் குறைகிறது.
    • இந்த திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் காணொளி காட்சி மூலம் சென்னையில் தொடக்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி உடற்பயிற்சி மேற்கொள்வதால் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும், இதய நோயின் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

    நடைப்பயிற்சி உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் நல்ல உடல் எடையுடன் இருக்க உதவுகிறது.

    மேலும் நாள்பட்ட உடல் பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்பதற்கு இணங்க பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பொருட்டு 8 கிலோமீட்டர் நடை பாதை கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நடைபாதை 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம் முதல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கம் தஞ்சாவூர் மாநகராட்சி வரை ஒரு முழு சுற்று சுற்றி 8 கிலோமீட்டர் தூரம் தொடங்கிய இடத்தில் முடிவடைகிறது.

    மேலும் இத்திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி. கே. ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, சுகாதார துறை துணை இயக்குனர்கலைவாணி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், கவுன்சிலர் தமிழ்வாணன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×