search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்த குட்டி யானையை தேடி வந்த 11 யானைகள்
    X

    கோவையில் குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்த குட்டி யானையை தேடி வந்த 11 யானைகள்

    • நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதா பண்ணை வீட்டில் யானைகள் தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
    • இறந்தது ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பாலமலை அருகே நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு வெளியே ஒரு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அவ்வப்போது இங்கு வந்து தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.

    அப்போது தொட்டிக்குள் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காவலாளி, சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ், தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தொட்டிக்குள் கிடந்த குட்டி யானையை பார்த்தனர்.

    அப்போது தொட்டிக்குள் கிடந்த யானை ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. காட்டு யானைகளுடன் தண்ணீர் குடிக்க வந்த போது தவறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி பாதுகாவலர் செந்தில்குமார், உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து இறந்த குட்டி யானையின் உடலை தொட்டியில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக அந்த தொட்டி உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து குட்டி யானை உடற்கூராய்வு செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பண்ணை வீட்டுக்கு வந்தன. அந்த யானைகள் இறந்த குட்டி யானையை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த யானைகள் வீட்டுக்குள் நுழையாதவாறு வனத்துறையினர் தடுத்து பட்டாசு வெடித்து, அந்த யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் பண்ணை வீட்டுக்கு வெளியே தண்ணீர் தொட்டி உள்ளதால் யானைகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    அவ்வாறு வந்த ஒரு குட்டி யானை தான் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது. அந்த குட்டி யானையை தேடி நேற்று 11-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகளும் இந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளன என்றனர்.

    Next Story
    ×