என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை
    X

    மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை

    • இவருக்கும் இவரது மனைவி ஜெயினா பீவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • விசாரணையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அறிவழகன் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரம்பூர் சித்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் தம்புசாமி மகன் அறிவழகன் (வயது 62). அறிவழகனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்துள்ளார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்கிற ஜெயினா பீவி (45) என்பவரை அறிவழகன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணியாற்றிய இவர் கடந்த ஓராண்டாக ஊரிலேயே தங்கியுள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கும் இவரது மனைவி ஜெயினா பீவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு வந்த அறிவழகனின் உறவினர்கள் ஜெயினா பீவி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதையும், அறிவழகன் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெரினா பீவியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த அறிவழகன் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதில் ஜெயினா பீவி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். அதனைக் கண்டு மனம் உடைந்த அறிவழகன், மனைவி கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×