search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரத்தில் மழையால் வீட்டு சுவர் இடிந்தது: சிவகிரியில் 2 மணி நேரம் இடி- மின்னலுடன் கனமழை
    X

    வி.கே.புரத்தில் மழையால் வீட்டு சுவர் இடிந்தது: சிவகிரியில் 2 மணி நேரம் இடி- மின்னலுடன் கனமழை

    • அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • கண்ணடியன் கால்வாய் பகுதிகளில் 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று அம்பை, வி.கே.புரம், மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் கனமழையின் காரணமாக அங்குள்ள ஏராளமான குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அதில் ஆட்கள் யாரும் இல்லாமல் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 10 மில்லிமீட்டர் மழை பதிவானது. மாநகர பகுதியில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை மணி முத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறு, பாபநாசத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. கண்ணடியன் கால்வாய் பகுதிகளில் 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் மதியத்திற்கு பிறகு குளிர்ந்த காற்று வீசிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாஞ்சோலை வனப்பகுதி யில் பலத்த மழை பெய்தது. அங்கு ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பலத்த மழை கொட்டியது. ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்ரும், காக்காச்சி, நாலுமுக்கில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில், மதியம் 2 மணிக்கு பிறகு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. மாலையில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக ஆலங்குளம், நெட்டூர், குறிப்பன்குளம், புதுப்பட்டி, கரும்புளியூத்து, மாறாந்தை, மருதம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    சுமார் 1 மணி நேரத்தை கடந்தும் பெய்த கனமழையால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஒரு சில குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    புறநகர் பகுதியான சிவகிரி அருகே தலையனை, கோம்பையாற்று பகுதி மற்றும் ராயகிரி, உள்ளார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    Next Story
    ×