search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • 5 நுழைவு வாயில்களில் தலா 2 போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டார்.

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் கோகுல். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது.

    கடந்த மாதம் 13-ந் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இவர் கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    கோர்ட்டில் தனது வழக்கு வர சிறிது நேரம் ஆகும் என தெரிந்ததால், தனது நண்பர் ஒருவருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அவரை 5 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாலிபரை வெட்டி கொன்று விட்டு, கொலையாளிகள் சர்வ சாதாரணமாக நடந்து சென்றது கோவை மாநகர் மக்களிடம் பதற்றத்தை உருவாக்கியது.

    கோர்ட்டு அருகே நடந்த கொலையை தொடர்ந்து இதில் ஈடுபட்டவர்களை தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரவுடிகளை களையெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதனால் மாநகரில் இருந்த ரவுடிகள் பலரும் கலக்கம் அடைந்தனர்.

    போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், ரவுடிகள் கொட்டம் அடங்கி, மாநகரில் குற்றங்கள் குறைந்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது கணவரே ஆசிட் வீசிய சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை கூட்டியுள்ளது. கோவை கோர்ட்டு பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த 2 துயர சம்பவங்களும் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

    கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு இருக்கும். அதனை மீறி எதுவும் நடக்காது என நம்பியே தினந்தோறும் பொதுமக்கள் உள்பட பலரும் கோர்ட்டிற்கு வருகிறார்கள். ஆனால் அப்படி பாதுகாப்பு நிறைந்த கோர்ட்டிலேயே இது போன்ற சம்பவங்கள் நடந்தது தான் உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    கொலை நடந்த உடனேயே கோர்ட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் எந்தவித சோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்து வந்துள்ளனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் கோர்ட்டில் அரங்கேறியதை அடுத்து கோவை கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை கோர்ட்டில் உள்ள 5 நுழைவு வாயில்களில் தலா 2 போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன் பக்க நுழைவு வாயிலில் மட்டும் 10க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்பக்க கேட்டில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி எதற்காக வருகிறீர்கள். இங்கு என்ன வேலை காரணமாக வந்துள்ளீர்கள் என விசாரிக்கின்றனர். உரிய காரணங்களை கூறிய பிறகு அவர்கள் கொண்டு வந்துள்ள உடைமைகள் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

    அதன்பின்னரே மக்களை உள்ளே அனுமதித்து வருகிறார்கள். இதுதவிர கோர்ட்டு ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    மற்ற 5 நுழைவு வாயில்களிலும், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களை தவிர மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அந்த வழியாக வந்த மக்கள் அனைவரையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உங்களுக்கு இந்த வழியாக அனுமதியில்லை.

    முன் நுழைவு வாயிலுக்கு சென்று கோர்ட்டுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தி வருகின்றனர். கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் வழக்கம் போல அனைத்து நுழைவு வாயில் வழியாகவும் சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே கோர்ட்டு வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் போலீசாருக்கு பாதுகாப்பு தொடர்பான சில ஆலோசனைகளையும் வழங்கி சென்றார். ஆசிட் வீச்சு சம்பவம் நடந்ததை தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டதற்கு வக்கீல்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×