என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாள் விழா: "மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்"- அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி பேச்சு

    • அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி, மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.
    • கல்வியை அறிவுசார் கல்வியாக மாற்ற வேண்டும் என க.ரவி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 36-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது.

    கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    தங்கப்பதக்கங்கள்

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த 6 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.

    பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவிகளுக்கும், பல்கலைக்கழக அளவில் வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கினார்.

    நினைவுப்பரிசு

    மேலும் டாக்டர் பட்டம் பெற்ற 6 பேராசிரியர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 7 பேருக்கும் நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் துணைவேந்தர் க.ரவி பேசியதாவது:-

    இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்க வரும் அனைத்து மாணவர்களையும் தொழில் முனைவோராக மாற்றும் வகையில் பயிற்சி அளிப்பது அவசியம். ஆகையால்தான் மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

    கல்வி கற்பது மட்டும் சிறந்ததாக கருதப்படாது. அந்த கல்வியை அறிவுசார் கல்வியாக மாற்ற வேண்டும். செல்போன் போன்ற நவீன தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தினால் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

    கிராமப்புற மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளது. எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆண்டு மலர் வெளியீடு

    விழாவில் கல்லூரி செயலாளர் நாராயணராஜன் ஆண்டுமலரை வெளியிட, அதனை துணைவேந்தர் க.ரவி பெற்றுக்கொண்டார். பின்னர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா நன்றி கூறினார்.

    Next Story
    ×