என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் 2-வது முறையாக காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமி
- பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த சிறுமி, அருகே உள்ள கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்த போது, அவர் வரவில்லை என தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான பிரதீபன்(25) என்பவருடன் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் எங்கு சென்றனர் என விசாரித்தபோது, அவர்கள் கரூரில் இருப்பது தெரிய வரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு பிரதீபன், சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் அவரை திருமணம் செய்த பிரதீபனை பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு வைத்து விசாரணை நடத்தி விட்டு, அவர்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த பிரதீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுமி இதே வாலிபருடன் மாயமானது, போலீசார் அவர்களை கண்டு பிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து, வாலிபரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்ததும், அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்ததும் குறிப்பிடத்தக்கது.






